- நடராஜன் சுந்தர்
- பிபிசி தமிழ்
புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியை சந்தித்த மின்துறை ஊழியர் சங்க பிரதிநிதிகள்
மின்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து முடிவு அறிவிப்பதாக முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர் உறுதி அளித்ததன் பேரில் வரும் தீபாவளி வரை போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக மின்துறை போராட்டக்குழு தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் கடந்த 6 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து வந்தனர். இதனிடையே மின்துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக புதுச்சேரியில் அசாதாரண சூழ்நிலை நிலவியதைத் தொடர்ந்து, புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது.
முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில், மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், மின்துறை இயக்குநர் மற்றும் செயலாளர் பங்கேற்றனர். இதில் மின்துறை ஊழியர்கள் போராட்டம் எதிரொலியாக நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை சமாளிப்பது குறித்தும், மின்துறை தனியார் மயம் குறித்த டெண்டர் பற்றியும் ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே புதுச்சேரி சட்டபேரவையில் முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர் சந்தித்து மின்துறை ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் மின்துறை ஊழியர்களிடம் சுமூக பேச்சுவார்த்தை ஏற்பட்டதாக மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
இதையடுத்து போராட்டக்குழு மின்துறை ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டக்குழு தலைவர் அருள்மொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மத்திய அரசிடம் மின்துறை ஊழியர்கள் அரசு ஊழியர்களாக தொடர்வது குறித்தும், தனியாரிடம் 100 சதவீதம் பங்குகளை விற்பதற்கு பதிலாக 51 சதவீதம் அரசு பங்கும், 49 சதவீதம் தனியார் பங்கு ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பேசுவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். மேலும் மின்துறை தனியார் மயம் டெண்டர் வெளியிடத்தில் சில மாற்றங்கள் செய்வது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தி மாற்றம் செய்வதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ரங்கசாமி தொழிலாளர் வைத்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து தீபாவளி வரை இந்த போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மின்துறை ஊழியர்கள் மீது காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்வதாக தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் 24ஆம் தேதி வரை இந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இடைப்பட்ட நாட்களில் கோரிக்கைகள் நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்பட்டால் மீண்டும் இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடரும். தற்போது மின்துறை ஊழியர்கள் பணியை வழங்கும் போல தொடர்வார்கள்," என தனியார் மயம் எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.
மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யும் நிலையில் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய துணை ராணுவப் படை உதவியுடன் இரவோடு இரவாக 300க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
போராடும் மின் ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்கள் மீது 'எஸ்மா' எனப்படும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ரராஜனும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
புதுச்சேரி மின் ஊழியர்கள் போராட்டம் ஏன்?
புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
இதனிடையே தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கடந்த சனிக்கிழமை பிற்பகலுக்கு மேல் புதுச்சேரி முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. ஊரே பல மணிநேரம் இருளில் மூழ்கியதால் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனிடையே புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மின்வெட்டு செயற்கையாக சில மின்துறை ஊழியர்களால் ஏற்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. குறிப்பாக புதுச்சேரி மரப்பாளம் துணை மின் நிலையத்திற்குள் பணி செய்து கொண்டிருந்த ஒப்பந்த ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்து அங்கிருந்த மின் சாதனப் பொருட்களை சேதப்படுத்தியதாக மின்துறை ஊழியர்கள் 10 பேர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மத்திய துணை ராணுவப் படை வரவழைப்பு
மின் நிலையங்கள் சேதப்படுத்தப்படுவதால் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர்
"செயற்கை மின்வெட்டை ஏற்படுத்திய மின்துறை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. அனைத்து துணை மின் நிலையங்களிலும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மின்துறை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரியில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் துண்டிப்பை ஏற்படுத்துவதைத் தடுக்கவும், இந்த போராட்டம் காரணமாக புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் நிலவும் அசாதாரண சூழலை சரி செய்யவும் மத்திய துணை ராணுவப் படையை பாதுகாப்பாக அரக்கோணத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். அதில் 120 பேர் கொண்ட (ஒரு கம்பெனி) அதிவிரைவு அதிரடி படையினரும் (RAF) அடக்கம்.
முன்னதாக, அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மின் துறை ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி மின் துறை தலைமை பொறியாளர் சண்முகம் மின் துறை ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார்.
இரவோடு இரவாகக் கைது
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாகப் பணி நேரத்தில் மட்டும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை ஈடுபட்டு வந்த நிலையில் 5வது நாளான நேற்று இரவிலும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியுடன் (வலது) மின்துறை அமைச்சர் நமச்சிவாயம்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களைக் கலைந்து செல்ல காவல் கண்காணிப்பாளர் வம்சிதரெட்டி அறிவுறுத்திய பிறகும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் மத்திய துணை ராணுவப் படையினர் உதவியுடன் உள்ளூர் போலீசார் 300க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்களைக் கைது செய்து கோரிமோடு பகுதியில் உள்ள காவலர் சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர்.
முன்னதாக மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்துவது மிகவும் தவறானது என்று கூறிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
தனியார்மயம் ஏன்? - அரசு தரப்பு பதில்
இந்த விவகாரம் தொடர்பாக மின்துறைச் செயலர் தி. அருண், "மின் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் புதுச்சேரி மின் துறையின் மின் விநியோகத்தைத் தனியார்மயமாக்கப் புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஊழியர்களின் சம்பளத்தில் எந்தக் குறையும் இருக்காது,'' என்று பிபிசி தமிழிடம் கூறினார்.
''மின் விநியோகத்தை நிறுத்த மாட்டோம். வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று போராட்டக் குழு உறுப்பினர்கள் உறுதியளித்தனர். ஆனால், இதற்கு மாறாக, ஊழியர்களில் சில தவறான நபர்கள் மூன்று 230 கிலோ வாட் துணை மின் நிலையங்கள் மற்றும் பல்வேறு மேல்நிலை பாதைகளை நாசப்படுத்தினர். இதனால் அக்டோபர் 1ஆம் தேதி புதுச்சேரி முழு பகுதிக்கும் மின்சாரம் வழங்குவதில் தடை ஏற்பட்டது. இது சட்டப்படி தண்டனைக்குரியது," என்றார் அவர்.
'செயற்கை மின்வெட்டு என்பது பொய் குற்றச்சாட்டு'
மின்துறை தனியார்மய முடிவால் புதுச்சேரியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் மின்துறை பொறியாளர் மற்றும் தொழிலாளர் தனியார்மய எதிர்ப்புப் போராட்டக்குழு பொதுச்செயலர் வேல்முருகன் பிபிசி தமிழிடம் பேசினார்.
"மின் விநியோகம் தடைபடுவதற்கு எங்களைக் காரணம் காட்டுகின்றனர். எங்கள் மீது பழி சுமத்தி இந்த போராட்டத்தைக் கலைக்க வேண்டும். முக்கியமாக மின்துறை தனியார் மயத்துக்கு எதிராக போராடும் எங்களுக்கு எதிராக மக்களை அமைச்சர் திசைதிருப்பி விடுகிறார். தனியார் மயத்தைக் கொண்டு வரும் நோக்கில் எங்கள் மீது பழி சுமத்தியுள்ளனர். இந்த மின்தடைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை," என்றார் அவர்.
முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்க வேண்டும் வேல்முருகன் கோரிக்கை வைத்தார்.
மேலும், அனைத்து ஊழியர்களும் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு, உடனடியாகத் தங்களது பணிகளுக்குத் திரும்ப வேண்டும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்," என மின்துறைச் செயலர் அருண் கூறினார்.
இந்த நிலையில், முதல்வரை சந்தித்த மின் ஊழியர் சங்க பிரதிநிதிகள் தங்களுடைய போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
https://www.bbc.com/tamil/india-63114388









No comments:
Post a Comment