தொல்மானிடப் பரிணாமத் துறைத்தலைவர் ஸ்வன்டே பாபோ

 பொதுவாக ஹோமோ சேபியன்ஸ் ஆஃப்பிரிக்காவில் 200,000 - 300,000 முன் உருவான ஹோமோசேபியன்ஸ் உலகெங்கிலும் 70,000 ஆண்டுகளுக்கு முன் வெளியேறிப் பரவினர் என்பது அறிவியல் உலகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து. அது போல நமக்கு மிகவும் நெருக்கமான நியாண்டர்தால் எனும் தனிமனித இனம் ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் 3,50,000-50,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததற்கான சான்றுகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. நியாண்டர்தால் மனிதர்கள் 25000 ஆண்டுகள் முன்பு கூட வாழ்ந்ததற்கான ஆதாரம் ஸ்பெயினில் ஒரு குகையில் கண்டுபிக்கப்பட்டுள்ளது. இந்த இனம் என்னவாயிற்று? ஹோமோ சேபியன்ஸ் இவர்களை அழித்துவிட்டார்களா? பருவநிலை காரணமா? இதைத் தவிர வேறு ஏதேனும் காரணமா? பல்வேறு கருதுகோள்கள் முன் வைக்கப்படுகின்றன. இன்னும் ஒரு முடிவை எட்டவில்லை.

இந்த நூற்றாண்டின் ஒரு மிக முக்கியமான கண்டு பிடிப்பு ஹோமோ சேபியன்சுக்கும், நியாண்டர்தால் இனத்துக்கும் இடையே கலப்பு ஏற்பட்டுள்ளது என்பது. நியாண்டர்தால்களின் மரபணுவை அவற்றின் தொல்லுயிர் எச்சங்களிலிருந்து பிரித்தெடுத்தனர். அதை ஆய்வு செய்ததில் சுமார் 3 சதவீதம் வரை நியாண்டர்தால் மரபணுக்கள் ஆப்பிரிக்க கண்டம் நீங்கலாக நம்மில் பெரும்பாலோர் உடலில் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர சைபீரியாவில் ஒரு குகையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் விரல் எலும்புகளிலிருந்து கிடைத்த டி.என்.ஏவைப் பரிசோதித்ததில் அது ஒரு தனிமனித இனம் எனக் கண்டறியப்பட்டது. டெனி சோவன் எனும் குகையில் அது கண்டறியப்பட்டதால் அவர்கள் டெனிசோவன்கள் என அழைக்கப்படுகிறார்கள். இந்த இனமும் நியாண்டர்தால்கள் போல முற்றாக அழிந்துவிட்டது. ஆனால் இவற்றின் மரபணுவை ஆய்வு செய்ததில் அவையும் சேபியன்சுடன் இனக்கலப்பு செய்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவிலும், பாபுவா நியூகினிய தீவுக்கூட்டங்களிலும் சுமார் 6 சதவீதம் நம்மிடையே இவற்றின் மரபணுத்தொகுதிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியாக நியாண்டர்தால், டெனிசோவன் மனித இனக்கலப்பும் நிகழ்ந்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்புகள் மருத்துவத்துறையில் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்புகளில் முதன்மைப் பங்கேற்றவர் ஜெர்மனியில் மாக்ஸ் பிளாங்க் ஆய்வகத்தில் தொல்மானிடப் பரிணாமத் துறைத்தலைவர் ஸ்வன்டே பாபோ எனும் சுவீடன் நாட்டில் பிறந்த விஞ்ஞானி. அவரின் தொடர் ஆய்வுகள் சேப்பியன்களுடன் இத்தகைய நியாண்டர், டெனிசோவன் மரபணுக் கலப்பால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்டு, மேலும் தொடர்பாக சாதக, பாதகமான விளைவுகள் என்பதை நோக்கிச் செல்கின்றன. அதற்காக அவருக்கு மருத்துவ அறிவியலின் 2022க்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பேசுவோம்.


No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...