இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் 1919 - 1947 - சுனிதிகுமார் கோஷ்

 1918க்கு பிறகு வெவ்வேறு தொழிற்துறை மய்யங்களும், தொழிலாளிகளின் வேலைநிறுத்தங்களைச் சந்தித்தன. 1918 - ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அகமதாபாதின் நெசவுத் தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்ததையும், தொழிலாளிகளின் போர்க்குணத்தைக் கட்டுப்படுத்த என்றே நெசவாலை முதலாளிகளின் வேண்டுகோளுக்கு இணங்க காந்தி அதில் தலையிட்டதையும் ஏற்கனவே பார்த்தோம்.

பம்பாயில் நெசவுத் தொழிலில் பணியமர்த்தப்பட்டிருந்த 1,40,000 தொழிலாளிகளில் கிட்டத்தட்ட, 1,25,000 தொழிலாளிகள் 1918 - ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கிய ஒரு தீரமிக்க வேலைநிறுத்தத்தில் பங்கேற்றார்கள். இதைத் தொடர்ந்து, ராயல் இந்தியன் கப்பல் படையின் பணிமனைகளை (dockyard) சேர்ந்த தொழிலாளிகளும் ரயில்வே தொழிலாளிகளும் பம்பாய்த் தொழிலாளரின் பிற பிரிவுகளும் வணிக நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த மேத்தாக்கள் அல்லது கீழ்நிலை ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்தார்கள்.
1919 - இலும் 1920 - இன் தொடக்கத்திலும் இந்த அலை கான்பூர், ஜமல்பூர், கல்கத்தா, ஜாம்செட்பூர், ஷோலாப்பூர், லாகூர், சென்னை மற்றுமுள்ள தொழில்துறை மய்யங்களுக்கும் பரவியது. 1920 - ஆம் ஆண்டு, சனவரி, பிப்ரவரி, மே மாதங்களில் முறையே பம்பாயிலும் அகமதாபாதிலும் தொழிலாளி வர்க்கப் போராட்டம் புத்தெழுச்சி கண்டது. 1920 -இன் முதல் பாதியில் ஒன்றரை மில்லியன் தொழிலாளிகள் வேலைநிறுத்தப் போரில் ஈடுபட்டிருந்தார்கள். பெரும்பாலும் எங்கேயும் எந்தத் தொழிற்சங்கங்களும் இல்லாதிருந்தும் அனைத்து இடங்களிலும் தொழிலாளிகள் தளராது முன்னேறினார்கள். ருசியப் புரட்சி பெற்ற வெற்றியும் அரசின் அடிவயிற்றைக் கலக்கிக் கெண்டிருந்தது: ஏனெனில் இந்திய மக்கள் பின்பற்றத்தக்க ஓர் எடுத்துக்காட்டாக அது ஆகிவிடுமோ என அரசு அஞ்சி நடுங்கியது.
அப்போது உலகம் முழுவதிலும் நிலவிய ஒரு புரட்சிச் சூழலுக்கு இயல்பாகவே இந்தியச் சூழலும் ஆட்பட்டிருந்ததாக அரசப்பிரதிநிதிக்குத் தான் எழுதிய ஒரு கடிதத்தில் இந்திய அரசுச் செயலரே விவரித்தார் என்று எழுதுகிறார் பி.பி.மிஸ்ரா.
1919 - இல் தான் எழுதிய ஒரு கடிதத்தில் காந்தி, "பொருளாதார நெருக்கடியும் அரசியல் அடக்குமுறையும், பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் விழிப்புணர்வும், உலகம் முழுவதிலும் ஒரு தீவிரமான கிளர்ச்சிச் சூழலுக்கு" காரணமாகி இருந்தது என்று குறிப்பிட்டார் . இந்தியாவைப்பற்றிச் சொல்லும்போது அவர், "ஒடுக்குமுறையாலும் பஞ்சத்தாலும் மற்ற காரணிகளாலும் இங்கு எல்லாத்துறையிலும் குழப்பம் நிலவுகிறது” என்றார்.
அதற்கு அவர் அளித்த அருமருந்து என்ன ? அவர் இப்படி எழுதினார்: "ஐரோப்பாவில் அடுத்தடுத்து ஒவ்வொரு தேசமாகத் தாக்கி வரும் போல்ஷ்விசத்தின் விரைவான பரந்துபட்ட வளர்ச்சியானது இந்தியாவில் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்றால், தனக்கு இசைவான நிலமென அது (போல்ஷ்விசம்) இதை (இந்தியாவை) கண்டு கொள்வதற்கான எவ்விதச் சாத்தியப்பாட்டிலிருந்தும் இதைக் காத்துக்கொள்ள வேண்டுமென்றால், இந்திய மக்களுக்கு அவர்களின் நாகரிகம் - பண்பாடு - மரபுப் பெருமை ஆகியவை நினைவூட்டப்பட வேண்டியது அவசியமாகும்; இவை, 'சத்தியாகிரகம்’ என்னும் ஒரே சொல்லில் அடங்கிவிடுகிறது. நாம் அறிய முடியும் மந்திரங்களில் எல்லாம் இது மிகவும் உயர்ந்த மந்திரமாகும்."
புதிய சூழலில் தன் சத்தியாகிரக மந்திரத்தை, ஒரு தீவிரமான கிளர்ச்சிச் சூழலுக்கான மூல காரணங்களை அகற்றுவதற்கு அல்ல; மாறாக புரட்சிகரமான, ஏகாதிபத்திய - எதிர்ப்புப் போராட்டங்கள் என்னும் பூதத்தை, அடக்குவதற்குப் பயன்படுத்துவது என்று காந்தி நிலை எடுத்தார்.
1919 ஆம் ஆண்டு சத்தியாகிரகம் தொடர்பான உத்தரவுகள் என்ற பின்வரும் கற்றையை வெளியிட்டார் காந்தி.
★ ஊர்வலங்கள் நடத்தக்கூடாது.
★ ஒழுங்கமைத்த ஆர்ப்பாட்டங்களை நடத்தக்கூடாது.
★ குழுவின் முன்கூட்டிய அறிவுறுத்தல் இன்றி எதற்காகவும் கண்டன வேலைநிறுத்தம் செய்யக்கூடாது.
★ போலீஸ் உத்தரவுகள் அனைத்துக்கும் எதிர்ப்பில்லாமல் கீழ்ப்படிய வேண்டும்.
★ வன்முறையில் ஈடுபடக்கூடாது.
★ கல்லெறிதல் கூடாது.
★ டிராம் வண்டிகளையோ போக்குவரத்தையோ தடுக்கக்கூடாது.
★ எவருக்கு எதிராகவும் நிர்ப்பந்தத்தைக் கையாளக்கூடாது.
பொதுக்கூட்டங்களில்
● கைத் தட்டக்கூடாது.
● ஏற்பையோ மறுப்பையோ வெளியிடக்கூடாது.
● வெட்கக்கேடு என்று கத்தக்கூடாது.
● மகிழ்ச்சி ஆரவாரம் செய்யக்கூடாது.
● முழுமையான அமைதி வேண்டும்.
● தொண்டர்களின் அல்லது நிர்வாகத்தின் கட்டளைகளுக்கு அப்படியே கீழ்ப்படிய வேண்டும்.
இந்த உத்தரவுகளை வரைந்ததில் காந்தி எடுத்துக்கொண்ட மிக உன்னிப்பான கவனமும் இவ்வுத்தரவுகளில் பலவும் அவர் கருத்தில் சத்தியாகிரகத்தின் மீற முடியாத கொள்கைகள், மக்களின் முன்முயற்சியைக் கட்டவிழ்த்து விடுவதற்குப் பதில் அதைச் சாகடிக்கவும், தாங்கள் ஒரு மாபெரும் லட்சியத்துக்காகப் போரிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதையே அவர்கள் மறக்கும் படி செய்யவும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை நிறை வேற்றுவது மட்டுமே தங்கள் வேலை எனக் கொண்ட சிந்தனையற்ற, உணர்ச்சியற்ற யந்திரமனிதர்களாக அவர்களைக் குறுக்கவும் அவர் கையாண்ட சூழ்ச்சித் திறம் காந்தியத்துக்கே உரித்தான தனிக் குணம். இப்படிப்பட்ட உத்தரவுகளைவிட வேறு எதனாலும் மக்களை அவ்வளவு திறமையாகக் காயடித்துவிட முடியாது எனலாம்.
(நூல் : இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் 1919 - 1947 - சுனிதிகுமார் கோஷ்)
1930 -ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் பெசாவரில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆயுதம் ஏதுமின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டோரைச் சுடமறுத்தனர் கார்வாலி வீரர்கள்; அதன் விளைவாக இராணுவ நீதிமன்ற விசாரணைக்குள்ளானார்கள். தூக்குத் தண்டனை, ஆயுள்தண்டனை, நிரந்தரமாக நாடுகடத்தப்பட்டது போன்ற தண்டனைகளைத் துணிச்சலோடு எதிர்கொண்டார்கள்.
அந்த கார்வாலி படைவீரர்களைப் பற்றிய காந்தியின் மனோபாவமும் குறிப்பிடத்தக்கது. தம்நாட்டு மக்களைச் சுட்டுக்கொல்ல அவர்கள் மறுத்தார்கள். பிரிட்டிஷ் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு அவர்கள் கீழ்ப்படியவில்லை.இராணுவ நீதிமன்றத்தால் விசாரிக்கப் பட்டு மிகக் கொடுமையான தீர்ப்புகளால் தண்டிக்கப்பட்டார்கள்.
1931 -ஆம் ஆண்டு, அக்டோபரில் லண்டனில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மறுமொழியாக காந்தி பின்வருமாறு சொன்னார்: "கார்வாலி கைதிகள்... அவர்களின் பிரிட்டிஷ் அதிகாரிகளின் ஆணைகளுக்கு வேண்டுமென்றே பணியவில்லை. அவர்கள் பங்குக்கு அது ஓர் அகிம்சைச் செயலே என்பதை நான் ஏற்கிறேன். ஆனால் தம் அதிகாரிகளின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாக உறுதி மொழி எடுத்தவர்கள் அந்தக் கட்டுப்பாட்டை அப்பட்டமாக மீறிவிட்டதாகவும் அது இருந்தது.”
மகாத்மாவைப் பொறுத்தவரை தீரமும் மிகுந்த தியாகமுமான கார்வாலி வீரர்களின் தேசபக்தச் செய்கையை விட, நிராயுதபாணிகளாயிருந்த தம் நாட்டவரைக் கொல்லவும் முடமாக்கவும் அந்நிய ஆட்சியாளர்கள் இட்ட ஆணையை நிறைவேற்ற அவர்கள் மறுத்த "குற்றம்" தான் பெரிய விசயமாக இருந்தது.
அவர்களின் விடுதலையை வலியுறுத்தி ஃபென்னர் பிராக்வே அனுப்பிவைத்த அறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டார் அவர். ஒரு பிரெஞ்சு இதழாளரிடம் பின்வருமாறு சொன்னார் காந்தி: "சுடு என்னும் உத்திரவுக்குக் கீழ்ப்படியாத போர்வீரன் தான் எடுத்திருக்கிற உறுதிமொழியை மீறுகிறான். கீழ்ப்படியாமை எனும் குற்றத்தை இழைத்தவன் ஆகிறான். அதிகாரிகளையும் படைவீரர்களையும் பணிய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள என்னால் முடியாது. ஏனெனில் நான் அதிகாரத்தில் இருக்கும் போது எப்படியும் இதே அதிகாரிகளையும் படைவீரர் களையுமே நான் பயன்படுத்திக்கொள்ள வேண்டி இருக்கும்.”
ஓர் உறுதிமொழிக்கு உண்மையாகவே இவ்வளவு மதிப்பை மகாத்மா கொடுத்தாரா!
இரண்டாம் உலகப்போர் மூண்டதும் பிரிட்டனின் போர் முயற்சிகளுக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஒத்துழைப்புத் தரவேண்டுமென்று காந்தி விரும்பினார்.முந்தைய மாதங்களிலும் ஆண்டுகளிலும் போர் பற்றி காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானங்களையும் தம் சவடால் பேச்சுகளையும் குப்பைக் கூடைக்குள் வீசி விட்டு நேருவும் பட்டேலும் கூடப் போரைத் தொடுப்பதில் அரசுக்கு உதவ விரும்பினர்.
காந்தியிடம் பக்தி கொண்டிருந்த செயலரான மகாதேவ தேசாய் செப்டம்பர் 18 அன்று பிர்லாவுக்கு இப்படி எழுதினார்: "நடக்கவிருப்பது என்னவென்று ஆண்டவனுக்கு மட்டுமே! தெரியும். ஆனால் இந்த இருபது ஆண்டுகளாக எந்தக் கொள்கையின் பேரால் நாம் உறுதி கூறி வந்திருக்கிறோமோ! அந்த அகிம்சை கொள்கை பலத்த இழப்புக்கு உள்ளாகி இருப்பதாகத் தோன்றுகிறது.”
ராஜேந்திரப் பிரசாத் பின்வருமாறு சொன்னார்: "அகிம்சைக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாலும் பிரிட்டிசாருக்கு உதவ முடியாதென மறுக்கக் காங்கிரசால் முடியாது என்பதும்,சூழ்நிலை கோரும்போது ஆட்களையும் ஆயுதங்களையும் அவர்களுக்குத் தந்துதவுவதிலிருந்து அது பின்வாங்காது என்பதும் செயற்குழு அமர்வின்போது தெளிவாகியது.”
"அகிம்சை மீது நாம் வைத்திருந்த நம்பிக்கையைப் போர் ஓரளவு இளகச் செய்திருந்தது; இது இயல்பானதுதான்” என ஒப்புக்கொண்டார் பிரசாத். உண்மையில் அரசின் நலன்களும் உள்நாட்டுச் சுரண்டல் வர்க்கங்களின் நலன்களும் சம்பந்தப்பட்ட நேரம் தவிர எப்போதும் அது இளகியே இருந்தது.
1942 -ஆம் ஆண்டு தொடக்கத்தில் பிரிட்டன் மற்றும் அதன் கூட்டாளிகள் மீது அச்சுநாடுகள் வெற்றிபெறுவது உறுதி என்பதைக் கண்ட காந்தி மறுபடியும் ஓர் “இளக்கமான” நிலைபாட்டைக் கைக்கொண்டார்.வார்தாவில் அ.இ.கா.கு. அமர்வின் முதல் நாளான 1942 -ஆம் ஆண்டு,சனவரி 15 அன்று அவர் “பர்தோலி தீர்மானத்துக்கு முழு ஆதரவை வற்புறுத்தினார்."
"அகிம்சை, காங்கிரசின் கரங்களில் இருக்கும் (ஓர்) அரசியல் ஆயுதம்.அதைச் சிலநேரங்களில் நம்பி ஏந்திக்கொள்ள முடியும், சில நேரங்களில் எறிந்துவிட முடியும்” என்றார்.ஆனால் "தான் மட்டும் அகிம்சையைக் கைவிட்டுவிட்டு சுயராஜ்யம் பெற்றுக்கொள்ளமாட்டார். அதுதான் மகாத்மாவின் மார்க்கம்: சில நேரங்களில் அவர் தன் கற்பைக் காத்துக்கொள்ள விரும்புவார்; அதேவேளையில் தம் கற்பைக் கைவிடும்படி மற்றவர்களுக்கு உபதேசிப்பார்.
உண்மையில் அகிம்சையின் பயன்கள் மிகவும் வரம்புக்குட்பட்டதாகவே! இருந்தன.நிலக்கிழார்களுக்கும் குத்தகைதாரர்களுக்கும் இடையிலும், முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையிலுமான மோதல்களில் குத்தகைதாரர்களும் தொழிலாளிகளும் அகிம்சையைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டுமென கட்டளை இடப்படும்.
நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் அப்படிக் கட்டளை இடப்படமாட்டாது.போராட்டங்கள் கடுமையானதாக மாறியதும் அகிம்சை கைவிடப்பட வேண்டியதாகிவிடும், விவசாயிகளும்,தொழிலாளிகளும் வன்மையாக ஒடுக்கப்படுவார்கள். காந்தியும் அவரது நெருங்கிய சகாக்களும் நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் எதிரான வர்க்கப் போரை ஏற்க மறுத்தார்களே! ஒழிய, விவசாயிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் எதிராக நிலப்பிரபுக்களும் முதலாளிகளும் எல்லாநேரத்திலும் தொடுத்துக்கொண்டிருந்த வர்க்கப்போரை எதிர்க்கவில்லை.
உண்மையில் ஒடுக்குமுறையாளர்கள் தாராளமாகப் பயன்படுத்திய ஆயுதத்தை ஒடுக்கப்படுவோருக்கு இல்லாமல் செய்யத்தான் அகிம்சைப் பாதை வடிவமைக்கப்பட்டது. "காந்தியின் அகிம்சையானது பெருமளவான சமுதாய இம்சையை மறைக்கும் ஒரு முக்காடாகவே! உள்ளது" என சவும்யேந்திரநாத் தாகூர், ரோமன் ரோலந்திடம் சொன்னது சரிதான்.
புதிதாய்த் தோன்றும் அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிரான தற்காப்பு விசயத்திலும் அகிம்சைக் கோட்பாடு பயனற்றது எனத் தள்ளப்பட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் நிலக்கிழார்களுக்கும் முதலாளிகளுக்கும் எதிராக அடிமைப்பட்ட, சுரண்டப்பட்ட இந்தியர்கள் பயன்படுத்துவதற்கான அருமையான ஆயுதமாக அகிம்சையைக் காந்தி வடிவமைத்தார்.
ஏகாதிபத்தியவாதிகளும் நிலக்கிழார்களும் முதலாளிகளும் அதை ஆர்வமுடன் வரவேற்றார்கள்.தம்மால் முடிந்த அளவு சிறப்பாக அகிம்சை நற்செய்தியைப் போதிக்க காங்கிரஸ் தலைவர்களின் குறிப்பாக காந்தி மற்றும் பட்டேலின் பொறுப்பில் நிரம்ப நிதிகளை ஒப்படைத்தார்கள்.
1918 - ஆம் ஆண்டு, சூலை 29 நாளிட்ட இன்னொரு கடிதத்தில் ஆண்ரூசுக்குக் காந்தி இப்படி எழுதினார்: "போர் எப்போதும் நம்முடன் இருக்கும்.மனித இயல்பு முழுவதுமாக மாற்றம் அடைவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை... தவறு செய்பவனை அடித்து வீழ்த்தும் அபாயத்தை (risk) மேற்கொண்டு என் மனைவி மக்களைக் காப்பாற்றுவதில் உண்மையான அகிம்சை இருக்கிறது."
அதுதான் அவர் கண்ட ஞானம் என்றால், மிக மோசமான தவறு இழைத்தவர்களுக்கு எதிராக, ஏகாதிபத்திய ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக, கோடிக்கணக்கான ஆண்கள்,பெண்கள், குழந்தைகளின் வாழ்க்கையை நாசமாக்கியவர்களுக்கு எதிராக அதை கையாளக் கூடாது என்ற அவரது முடிவற்ற பிரசங்கங்களுக்கு என்ன மதிப்பு இருக்க முடியும் ?
அந்தந்த நேரத்தின் தேவைக்கேற்ப அகிம்சையின் திருத்தொண்டர் கோட்பாட்டிலும் நடைமுறையிலும் வன்முறையின் திருத்தொண்டராக மாற முடிந்தது என்று தோன்றுகிறது.
வன்முறையின் நன்மைகளைப் போதித்த அதேவேளையில் அது ஒருபோதும் பிரிட்டிசாருக்கு எதிராக ஏவப்படாமல் அவர்களின் எதிரிகளுக்கு எதிராகவே எப்போதும் ஏவப்படுமாறு பார்த்துக் கொண்டார் மகாத்மா.ஏனெனில் அவரைப் பொறுத்தவரை பிரிட்டிசாருக்கு உதவுவதில்தான் இந்தியாவின் விமோசனம் இருந்தது.
(நூல் : இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் 1919 - 1947 - சுனிதிகுமார் கோஷ்)

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...