”ஹெகலையும் ஃபாயர்பாக்கையும் மார்க்ஸ் தலைகீழ் ஆக்கினார்” -என்பதன் பொருள் என்ன?
^^^ *** ^^^
மார்க்சிய அடிப்படைகளில் சில (1)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஹெகல், ஃபாயர்பாக் எனும் இரு தத்துவவியலாளர்களின் பாரம்பரியத்தில் வந்தவர் மார்க்ஸ் என்றாலும் இந்த இருவரின் தத்துவங்களையும் அப்படியே ஏற்றுக் கொண்டவர் அல்ல என்பது மார்க்சியத்தின் அடிப்படைகளில் ஒன்று.
ஹெகலின் தத்துவம் இரு கூறுகளைக் கொண்டது. அவர் கருத்துமுதல்வாதி. கடவுளின் இருப்பை ஏற்பவர். மார்க்ஸ் அதை ஏற்பதில்லை என்பது ஒன்று.. ஆனால் ஹெகல் ஒரு இயங்கியல்வாதி. எல்லாம் மாறிக்கொண்டும், இயக்கத்திலும் உள்ளது என்பது அவர் கருத்து. மார்க்ஸ் அதை ஏற்கிறார். “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலகால வகையினானே “ என்பது தமிழ் முது மொழி (நன்னூல் 462).
நவீன காலம் என்பது மதத்தின் பிடியிலிருந்து அனைத்தையும் விடுதலை செய்தது. நியூட்டன் முதலானோரின் விஞ்ஞான வளர்ச்சிகளால் ஊக்கப்பட்ட காலம் அது. மதத்தின் ஆதிக்கத்தை எதிர்த்த பெரும் சிந்தனைக் கிளர்ச்சி ஒன்று மேற்குலகில் அப்போது ஏற்பட்டது. மிகக் கடுமையான விமர்சனங்கள் மதத்தின் மீது, குறிப்பாக கிறிஸ்தவத்தின் மீது மேலைச்சூழலில் வைக்கப்பட்டன. அப்படியானவர்களில் ஒருவர்தான் மார்க்சின் ஆளுமை உருவாக்கத்தில் இடம் பெற்ற இந்த இன்னொரு முக்கிய தத்துவவியலாளரான ஃபாயர்பாக்.
"மனிதனின் ஆக உன்னதமான உணர்வான 'உண்மை' குறித்த உணர்நிலையை மதம் விஷம் ஊட்டி அழிக்கிறது"; எனவும் "மதம் என்பது மனித மனத்தின் (வெற்றுக்) கனவு; இன்றைய யுகத்தில் மாயைகளே புனிதமாகப் போற்றப்படுகின்றன. உண்மைகள் அற்பமாக அலட்சியம் செய்யப்படுகின்றன." எனவும்- மதத்தைக் கடுமையாகச் சாடியவர் அவர். அவரைப் பொருத்தமட்டில் எல்லாவிதமான மத வெளிப்பாடுகளும் நிறைவேற்றப்படாத மனித ஏக்கங்களின் கருத்துருவாக்கப்பட்ட பிம்பங்கள்தான்; கடவுள் என்பது மனிதனே உருவாக்கிக் கொண்ட ஒரு மாயைதான்.
ஹெகலைப்போல் அல்லாமல் ஃபாயர்பாக் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஹெகல், ஃபாயர்பாக் என்கிற சமகால இரு முக்கிய தத்துவ ஆளுமைகளால் உந்தப்பட்டவர்தான் மார்க்ஸ் எனில் அவரது தனிப்பட்ட பங்களிப்பு என்பது என்ன?
மார்க்ஸ் இந்த இரு மகத்தான சிந்தனையாளர்களாலும் ஊக்கப்பட்டவர்தானே ஒழிய அவர்களை அப்படியே ஏற்றுக் கொண்டவர் அல்ல என்பதை நாம் கவனமாக நினைவில் கொள்ள வேண்டும். இருவரையும் ஏற்றுக்கொண்டார், ஆனால் அப்படியே அல்ல. இருவரையும் ‘தலைகீழாக்கி’ ஏற்றுக்கொண்டார் என்பார்கள் மார்க்சிய அறிஞர்கள். தம் கருத்துக்களை அவர்கள் குறிப்பிட்ட வரலாற்றுச் சூழல்களுடன் பொருத்தி முன்நிறுத்தினர். ஹெகலின் கருத்துமுதல் வாதமும், ஃபாயர்பாக் முன்வைத்த கருத்துக்களை முதன்மைப்படுத்தாத அணுகல் முறையும்- இரண்டுமே ஓரம்சத்தில் இணைந்து போவதை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். தூலமான சமூக நிலைகளை, அதாவது வரலாற்றை அவை இரண்டுமே புறக்கணிப்பதுதான் அது. சமூக மாற்றங்களைப் புரிந்துகொள்ள ஹெகலின் சிந்தனை ஒரு சிறந்த கருவிதான். ஆனால் இந்த மாற்றங்கள் என்பன சமகாலப் பொருளியல் சூழல்களிலிருந்து உருவாவதை ஹெகல் பார்க்கத் தவறினார். அதை வெறும் ஒரு 'உலக ஆன்மா' அல்லது 'உலக இயக்கு சிந்தனை' (the Weltgeist - "world spirit") என்பதன் வெளிப்பாடு என நிறுத்திக் கொண்டதே ஹெகலின் பிரச்சினை.
அதேபோல ஃபாயர்பாக்கின் மதம் குறித்த விமர்சனமும் தூலமான எதார்த்தங்களின் அடிப்படையில் அமையவில்லை. மனிதன் தன் ஏக்கங்களையும், எதார்த்தத்தில் நிறைவேற்றிக் கொள்ள இயலாத தன் தேவைகளையும் ஆசைகளையும் அவன் மதத்தில் ஏற்றி ஆறுதல் தேடினான் என்றார் ஃபாயர்பாக். அந்த வகையில் கடவுளும் மனிதனும் வேறு வேறல்ல. "கடவுள்தான் மனிதன்; மனிதன்தான் கடவுள்" எனவும் "இறையியல் என்பது வேறொன்றுமில்லை; மானுடவியல்தான் (anthropology) இறையியல்" எனவும் ஃபாயர்பாக் கூறியதன் பொருள் இதுதான். தான் வாழ்வில் சாதிக்க இயலாத அனைத்தையும் மனிதன் கடவுளிடம் ஏற்றி ஆறுதல் கண்டான். "மனிதன் தன் வடிவில் கடவுளைப் படைத்துக் கொண்டான்" எனக் கிறிஸ்தவ இறையியல் (Theology) சொல்வதன் பொருள் இதுவே. "பாவங்களிலிருந்து" விடுபட இயலாத தன் இயலாமையை அவன் கடவுளின் புனிதத்தன்மையில் ஏற்றி வைத்து ஆறுதல் கண்டான். தனது படைப்பாற்றல் தன்னிடமிருந்து கைநழுவிப் போனதை (அந்நியமானதை) அவன் அளவிடற்கரிய படைப்பாற்றல் மிக்கவராகக் கடவுளைக் கற்பிப்பதன் மூலம் தீர்த்துக் கொண்டான். சமூகத் தீமைகளை அழிக்க இயலாதத் தன் கையாலாகாத்தனத்தை எல்லாத் தீமைகளையும் அழிக்க வல்லவராகக் கடவுளைக் கற்பிப்பதன் மூலம் மறைத்துக் கொண்டான் அல்லது தன் நினைவிலிருந்து ஒளித்துக் கொண்டான்.
1841 ல் The Essence of Christianity எனும் ஃபாயர்பாக்கின் (Feuerbach) நூல் வெளிவந்தது. 'மனிதனின் கையாலாகாத் தன்மையே கடவுளின் பிறப்பிடம்' என அவர் அதில் குறிப்பிட்டார். தான் என்னவாக விரும்பினானோ அவ்வாறே மனிதன் கடவுளைப் படைத்தான். மனிதப் பண்புகளை தெய்வீகமாகக் கட்டமைக்கும்போதே மதம் என்பது உண்மையாகிறது. ‘இறையியல்’ எனும் பெயரில் கடவுளை மனிதரிடமிருந்து வேறுபடுத்திப் பிரிக்கும்போது அது பொய்யாகிறது என்று கூறிய ஃபாயர்பாக் கிறிஸ்தவம் மானுடரின் அரசியல் ஆற்றலை அழிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மேலைச் சூழலில் அவர் கிறிஸ்தவம் எனக் கூறியது உலகளவில் எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.
இவ்வாறு மனிதனின் உண்மையான இருப்பு குறித்த உணர்நிலையை மதம் அழிக்கிறது, அவனது அரசியல் உணர்வை மழுங்கடிக்கிறது என்பதை எல்லாம் ஃபாயர்பாக் மிகச் சரியாக அடையாளம் கண்டாரே ஒழிய அது எவ்வாறு அழிக்கப்பட்டுகிறது, அதன் நோக்கம், பின்னணி, செயல்முறை, அவற்றில் வர்க்கங்களின் பாத்திரம் ஆகியவற்றை அவர் பேசவில்லை என்பதை மார்க்ஸ் சுட்டிக் காட்டினார்.
இந்தப் பின்னணியில்தான் 1848 இல் மார்க்ஸ் - எங்கல்சின் 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' வெளிவந்தது. "இதுவரை வரலாற்றில் கண்ட சமூகங்களின் வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே" எனும் புகழ்பெற்ற வாசகத்தை அது கொண்டிருந்தது. ஆக, வரலாற்றின் உண்மையான இயக்குவிசை என்பது உண்மையான வர்க்கங்களுக்கிடையே நிகழ்ந்த உண்மையான வர்க்கப் போராட்டங்களின் விளை பொருளே. இந்த உண்மையான வர்க்கப் போராட்டங்கள் உண்மையான வரலாற்று மாற்றங்களுக்குக் காரணமாயின. இந்த வரலாற்றின் ஊடாகப் புதிய வர்க்கங்கள் உருவாயின. இவற்றுக்கிடையே புதிய வர்க்கப் போராட்டங்கள் உருவாயின. எதை அழித்து எது முகிழ்த்ததோ அதை அழித்து அடுத்தது முகிழ்க்கும் என ஹெகல் கூறியதன் பொருள் இதுவே. இப்படிப் புதிதாக உருவான மாற்றங்களின் ஊடாகப் புதிய பார்வைகளும் புதிய சிந்தனைகளும் உருவாகும் என்பது பொருள்
(தொடரும்: கார்ல் மார்க்ஸ் குறித்த என் நூலின் ஒரு அத்தியாயன் சில பத்திகள் மட்டும்)
121Gnana Suriyan Munisamy, குருசாமி மயில் வாகனன் and 119 others
8 Comments
27 Shares
Like
Comment
Share
No comments:
Post a Comment