அரசுக்கும் ( State) அரசாங்கத்திற்கும் (Government) இடையிலான வேறுபாடு உணரப்படவேண்டும். இந்திய அரசியல் சட்டம், அதைக் காப்பாற்றும் பணிக்காக உருவாக்கப்படுகிற நீதிமன்றங்கள், நாட்டை அந்நிய நாடுகளின் வன்முறை, மேலாண்மையிலிருந்து காப்பாற்றுகிற இராணுவம், உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக நீடிக்கிற காவல்துறை, இதுபோன்ற பணிகளுக்காக நியமிக்கப்படுகிற ஆட்சிப்பணி, காவல்பணி நிர்வாகிகள் ஆகியோர் ஒருபுறம்; இவையே அரசின் உறுப்புக்களாகும். சட்டத்திற்கு உட்பட்டு உருவாக்கப்பட்டு அல்லது நியமிக்கப்பட்டு செயல்படுகின்றவை இவையெல்லாம் . இவையே அரசு ( State) என்பதின் உறுப்புக்கள்.
தேர்தல்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற பாராளுமன்றம், மாநில அவைகள் மறுபுறம். இவை உருவாக்குகிற அமைச்சர் அவைகளும் இதில் அடங்கும். இந்த நிறுவனங்களும் அரசியல் சட்டத்தைச் செயல்படுத்தவே உருவாக்கப்பட்டுள்ளன. இதுவே அரசாங்கம் (Government) .
இந்த அரசாங்கம் என்ற உறுப்பும் பிற உறுப்புக்கள்போன்று அரசு என்பதின் ஒரு உறுப்பேயாகும். அதாவது அரசாங்கம் என்பதே அரசுக்கு உட்பட்டதே ஆகும். மாறாக, அரசு என்பது அரசாங்கத்தின் உறுப்பு இல்லை.
இந்த இரண்டாவது உறுப்பை ஒருவர் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு விமர்சிக்கலாம். இதற்கு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உரிமை உண்டு.
ஆனால் மேற்குறிப்பிட்ட முதல் உறுப்புக்களை - அரசு நிறுவனத்தை - ஒருவர் குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்வது அரசுக்கு எதிரான குற்றமாகவே கருதப்படும்.
இந்தப் பின்னணியில் திரு. சவுக்கு சங்கரின் வழக்கை ஆய்ந்து, அவரது குற்றம் அரசுக்கு (State) எதிரானதா அல்லது அரசாங்கத்திற்கு (Government) எதிரானதா என்பதை முடிவு செய்யவேண்டும்.
இந்த வகையான ஆய்வை மேற்கொண்டு, முடிவுக்கு வருவதற்கு நீதிமன்றங்களுக்கே (Judicial organizations) உரிமை உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகள், அது இயற்றும் சட்டங்கள் ஆகியவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தும் உரிமை நீதிமன்றங்களுக்கே உண்டு. மாநில அவைகள், பாராளுமன்றங்கள் இயற்றும் சட்டங்களையும் அவை அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அமைந்துள்ளனவா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் உரிமையும் நீதிமன்றங்களுக்கே உண்டு.
ஆனால் நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை ஆய்வுக்கு உட்படுத்தும் - (''விமர்சனத்திற்கு'') - உரிமை மாநில அவைகளுக்கோ பாராளுமன்றத்திற்கோ கிடையாது. பாராளுமன்றம், மாநிலப் பேரவைகள் இயற்றும் சட்டங்களை ரத்துசெய்ய நீதிமன்றங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை ரத்து செய்யும் உரிமை அவற்றிற்குக் கிடையாது. ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பை மற்றொரு நீதிமன்றமே ரத்து செய்யமுடியும்.
இதன் அடிப்படையில் திரு. சவுக்கு சங்கரின் வழக்கை ஆய்ந்தால் விடை கிடைக்கும். அவருடைய குற்றம் அரசுக்கு ( Indian State) எதிரானதா அல்லது அரசாங்கத்திற்கு (Governments) எதிரானதா? இதன் அடிப்படையில்தான் இந்த வழக்குபற்றி முடிவுக்கு வரவேண்டும்.
- ==========================================
No comments:
Post a Comment