தோழர் கோ. கேசவன் நினைவுநாள் இன்று


 

தோழர் கோ.கேசவன் மறைந்து இன்றோடு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது (16.09.1998).

 இன்றைக்கு ஏகாதிபத்திய பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் இன்நாட்டு பெரும் முதலாளிகளின் கொள்கை நலன்களுக்கான நரேந்திர மோடி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில் பேராசிரியர் கோ.கேசவனின் வாழ்க்கையை, படைப்புகளை நினைவு கூர்வதும், திறனாய்வதும் அவசியமானதொரு பணியாகின்றது.

 இன்று எங்கும் நுகர்வு வெறியும், சுயநலமும், தன்னகங்காரமும் பிற்போக்குதனம் பழைமையை தூக்கி பிடித்தல் ன்று ஏகாதிபத்திய கலாச்சாரமும் இன்நாட்டின் பெருமை பேசும் நிலவுடைமை சிந்தனை முறையும் மேலோங்கி உள்ளது. தான், தன்குடும்பம், தன் வாழ்வு என்று தாழ்ந்து தாழ்ந்து ஆளும் வர்க்கத்தின் அடிமைகளாகி போயுள்ள இன்றைய சூழலில். தோழர் கோ.கேசவனின் பணியானது பரந்து விரிந்து இந்த மானுட வாழ்க்கையை மார்க்சிய கண்ணோட்டத்துடன் தன்னை அய்க்கியப்படுத்திக் கொண்டவர் என்றால் மிகையாகாது. 

தோழர் கோ.கேசவன் முதுகலைப்பட்டம் பெற்று இரண்டாண்டுகள் மொழி பெயர்ப்பாளராகவும், பின்பு வாழ்நாள் முடியும் வரை தமிழ்ப் போராசிரியராகவும் பணியாற்றியவர்.ஆரம்ப நாட்களில் தி.மு.க அனுதாபியாக, இருந்து பின்பு இடதுசாரி கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர், எழுபதுகளின் ஆரம்பத்தில் வளர்ந்த வானம்பாடி இலக்கிய இயக்கம் தெளிவான அரசியல் வழிகாட்டுதலும், தலைமையும் இன்மையால் தேய்ந்து நெருக்கடி கால கட்டத்தில்(1975) மறைந்து போனது. இத்தகைய பின்னணியில் நெருக்கடி நிலையை எதிர்த்து, பிள்ளை பாண்டியன் என்ற பெயரில் சில கவிதைகளை எழுதினார். அடக்குமுறை உச்சத்தில் இருந்த நெருக்கடிநிலையை விமர்சித்து எழுதிய சிலரில் கேசவனும் ஒருவர் என்பது பதிவு செய்ய வேண்டிய தகவல் ஆகும். இந்தப்பண்பு அவர் வாழ்நாள் இறுதிவரை தொடர்ந்தது.ஆரம்பத்தில் இந்திய கம்யூஸ்ட்டு கட்சி {மார்க்சிஸ்ட்}யிலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இணைந்து கேசவன் பணியாற்றினார். அப்பொழுது எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 1979இல் 'மண்ணும் மனித உறவுகளும்' என்ற நூலாக வெளியிடப்பட்டது. பரவலாக பாராட்டப்பட்ட இந்நூல் கேசவனுக்கு மார்க்சிய ஆய்வாளர், கைலாசபதியின் சீடர் என்ற பெருமைகளைத் தேடித் தந்தது. 

பின்பு சி.பி.எம்.மின் திரிபுவாத நிலைபாடுகளை உணர்ந்து அதிலிருந்து விலகினார். புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியான இ.க.க(மா.லெ) (மக்கள் யுத்தம்) உடன் தன்னை இணைத்துக் கொண்டார். இயக்கத்தின் தேவைகளை ஒட்டி மாரிஸ் கான் போர்த்தின்-"இயக்கவியல் பொருள் முதல்வாதம்", ஜார்ஜ் தாம்சனின் "மனித சமூகச் சாரம்" போன்றவைகளை மொழி பெயர்த்தார். புரட்சிகர பண்பாட்டு இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவராகவும், செந்தாரகை ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் இருந்து புரட்சிகரப்பணிகளை ஆற்றினார். செந்தூரன் என்ற புனைபெயரில் ஏகாதிபத்திய - நிலவுடைமை கருத்துக்களையும் திரிபுவாத தத்துவங்களையும் அம்பலப்படுத்தி எழுதினார்.தொடர்ந்து சமரன், தோழமை, மக்கள் தளம், பொதுவுடைமை ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுக்களிலும் இருந்து பங்களிப்பு செய்தார். மக்கள் பண்பாட்டு பேரவையின் பல கூட்டங்களில் கலந்து கொண்டதோடு, மக்கள் பண்பாடு இதழிலும் தொடர்ந்து கட்டுரைகளை எழுதினார். 

சோசலிசக் கருத்துக்களும் பாரதியாரும்,பொதுவுடைமை இயக்கமும் சிங்காரவேலரும் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். மேலும் பாரதியார் குறித்த ஆவணத் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். மேலும், ஜார்ஜ் தாம்சனின் நூலை, ‘மனித சமூக சாரம்’ என்ற தலைப்பிலும், மாரிஸ்கார்ன் போர்த்தின்- லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள், இயக்கவியல் பொருள்முதல்வாதம் முதலிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்.

1990களில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்நவீனத்துவம் உட்பட பல்வேறு பிற்போக்கு கருத்துகளை முறியடிக்க அயராது உழைத்தார். தனது சர்க்கரை நோயையும் பொருட்படுத்தாது கடுமையாக பாடுபட்டதால் தோழர் கேசவன் 16.9.1998 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

புரட்சிகர ஆளுமை நக்சல்பாரி பாதையை தனது அரசியல் வழியாக கோ.கேசவன் ஏற்றவுடன் அவர் எழுதிய நூல் "பள்ளு இலக்கியம் ஒரு சமூகப்பார்வை" என்பதாகும். தலித் மக்கள் பற்றி விரிவாகப் பேசும் இந்நூல் எழுத தோழருக்கு உந்து கோலாக இருந்தது நக்சல்பாரி அரசியல் கண்ணோட்டமே ஆகும். இந்நூலில் தலித் மக்கள் விடுதலை என்பது பாராளுமன்ற சனநாயக மாயைகளைத் தகர்த்து, ஆயுதம் தாங்கி உழவர் போராட்டமாக மலரும்போது மட்டுமே சாத்தியம் என்று கேசவன் தெளிவாக விளக்குகிறார். இதற்காக காவல்துறை கேசவனை விசாரணை என்ற பெயரில் நெருக்கடிக்க உள்ளாகியது. கேசவன் அடக்குமுறையை உறுதியாக எதிர்கொண்டார். இந்தத் தெளிவும் உறுதியாக தோழரிடம் இறுதிவரை இருந்ததை அவரின் சாதியம், தாழ்த்தப்பட்டோரும் சமூக விடுதலையும் நூல்களைப் படிக்கும் வாசகர்கள் அறியமுடியும்.புரட்சி பண்பாட்டு இயக்கம் ஆரம்பித்து பின்பு அதன் நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு 'இலக்கிய விமர்சனம் ஒரு மார்க்சிய பார்வை' என்ற நூலை பேராசிரியர் கோ.கேசவன் எழுதினார். பண்பாட்டு அமைப்பில் தலைமைப் பொறுப்பில் இருந்த தோழர் சரியாகவே அதை நிறைவேற்றும் வண்ணம் அத்தளத்தில் பல நூல்களை எழுதி வெளியிட்டார். செந்தாரகை இதழில் பல கட்டுரைகள் எழுதினார். 'நமது இலக்குகள்' என்ற தொடர் கட்டுரை நிலவுடைமை பிற்போக்குத் தனங்களை, ஏகாதிபத்திய சீரழிவுகளை மட்டும் தோலுரிக்கவில்லை..... பல்வேறு நவீன திரிபுவாத கருத்துகளையும் அம்பலப்படுத்துவதாக அந்நூல் இருந்தது. 

ஆய்வாளராக மட்டுமல்லாமல், கல்லூரி ஆசிரியர் சங்கத்திலும் பங்கேற்று, இச்சங்கம் நடத்திய பல போராட்டங்களில் முன்னணிப் போராளியாக இருந்தது வழிநடத்தினார்.

1990-களில் முன்னாள் சோலிச நாடுகளின் தகர்வும் ஏகாதிபத்தியங்களின் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரமும் அறிவு ஜீவிகளின் மத்தியிலும், நடுத்தர வர்க்கத்தினிடமும் ஊசலாட்டத்தை ஏற்படுத்தியது. கம்யூனிசத் தத்துவம், புரட்சி, சோசலிச சமூகம் என்று பலவற்றையும் கேள்விக்குள்ளாக்கியது. கேசவன் இந்தப் போக்குகளை எதிர்த்துப் போராடினார். "ரசியப் புரட்சி மாயையா?" என்ற நூலை எழுதினார். 

நரசிம்மராவ் காலம் தொட்டு உலகமயமாதல், தாராளமயமாதல் என்று பல விதங்களில் ஏகாதிபத்திய சுரண்டல் அதிகரித்தது. உலகமயமாதல் தலித் மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது முதல் ஏகாதிபத்திய சீரழிவுத் தத்துவமான பின் நவீனத்துவம் வரை பல சரக்குகளை ஆர்ப்பாட்டமாகச் சிலர் தமிழகக் களத்தில் இறக்கி விட்டனர். தலித் மக்கள், பெண்கள், தேசிய இன விடுதலைப் போராட்டங்களை இத்தத்துவ பின்னணியில் வியாக்யானம் செய்து அப்போராட்டங்களைச் சிதறடித்து நீர்த்துப் போக வைக்க முயன்றனர். தோழர் கேசவன் அதைத் தனக்கே உரிய முறையில் எதிர்கொண்டார்.1987க்குப் பின்பு தமிழக நக்சல்பாரி இயக்கத்தில் பின்னடைவு ஏற்பட்டதை ஒட்டி புரட்சிப் பண்பாடு இயக்கம் மறைந்து போனது. கேசவன் பணியானது சிறிது திசை திரும்பியது. ஆனாலும், மார்க்சிய அடிப்படையில் திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம், தலித் இயக்கம் பற்றியும், பெரியார், அம்பேத்கார், சிங்காரவேலர் போன்றோரின் பணிகள்-படைப்புகள் பற்றியும் வரலாற்று அடிப்படையிலான மதிப்பீட்டு ஆய்வு நூல்களைச் செய்தார். இவையெல்லாம் பொதுவுடைமை இயக்கத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் விலை மதிப்பற்ற அறிவுச் செல்வங்களாக என்றும் விளங்கும்.

சிலரின் இறப்பு இறகை விட இலேசானது என்றும், சிலரது இறப்பு மலையை விட கனமானது என்றும் தோழர் மாவோ குறிப்பிடுவார். 

இந்தியச் சூழலில், அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டுச் சூழலில் திரிபுவாத தற்கால நவீன திரிபுவாத சக்திகள், சீர்திருத்த இயக்கங்கள், ஓட்டுப் பொறுக்கும் திராவிட இயக்கங்கள் ஆகியவற்றின் துணையோடு இந்துத்துவம் பாசிச பரிவாரங்கள் அபரிமிதமாக வளர்ந்து வரும் நிலைமையில், ஏகாதிபத்திய சீரழிந்த தத்துவமான பின்நவீனத்துவம் அடையாள அரசியல் தான் முற்போக்கானது என்று ஏமாற்றுவது முதற்கொண்டு திராவிட இயக்கமே மண்ணுகேற்ற மார்க்சியம் என்று பிழைப்பு நடத்துவது வரை உள்ள சூழ்நிலையில் இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல்வாத ஆய்வு அடிப்படையில் பல்வேறு தளங்களில் 33 நூல்களையும், இன்னும் பல கட்டுரைகளையும் எழுதிய மார்க்சிய ஆய்வாளரும், நக்சல்பாரி இயக்கத் தோழருமான தோழர் கோ.கேசவன் பற்றி எழுத எழுத எழுதிக் கொண்டே போகலாம்.

 இப்போது அவரது நூல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டுவிட்டது, நாம்முடைய சரியான மார்க்சிய புரிதலுக்கு இந்த நூல்கள் வித்திடும் என்பது தெளிவு.

அவரை விமர்சிக்கும் பலரும் அவரின் எழுத்துகளை வாசித்திருக்கவில்லை என்றி நினைக்கிறேன். இன்னும் பின் எழுதுவேன்.


அவரின் எழுத்துகள் கீழே:-

  1.   மண்ணும் மனித உறவுகளும்; 1979 டிசம்பர்; சென்னை புக் ஹவுஸ், சென்னை.
  2. பள்ளு இலக்கியம் ஒரு சமூகவியல் பார்வை; 1981 அக்டோபர்; அன்னம் (பி) லிட், சிவகங்கை (முதல் பதிப்பு).
  3. இயக்கமும் இலக்கியப் போக்குகளும்; 1982 டிசம்பர்; சென்னை புக் ஹவுஸ், சென்னை.
  4. இலக்கிய விமர்சனம் - ஒரு மார்க்சியப் பார்வை; 1984 மே; அன்னம் (பி) லிட், சிவகங்கை.
  5. கதைப்பாடல்களும் சமூகமும்; 1985 ஜூலை; தோழமை வெளியீடு, கும்பகோணம்.
  6. இந்திய தேசியத்தின் தோற்றம்; 1985 டிசம்பர்; சிந்தனையகம், சென்னை - 17.
  7. நாட்டுப்புறவியல் - ஒரு விளக்கம்; 1986 ஜூலை; புதுமைப் பதிப்பகம், திருச்சி.
  8. மார்க்சியத் திறனாய்வுச் சிக்கல்கள்; 1986 ஆகஸ்டு; புதுமைப் பதிப்பகம், மதுரை.
  9. புதியக் கல்விக் கொள்கை; 1986 செப்டம்பர்; பு.ப. இயக்கம்.
  10. புராணச் சார்புக் கதைப்பாடல்களில் ஆண்பெண் உறவுநிலை; 1987 மார்ச்; புதுமைப் பதிப்பகம், திருச்சி.
  11. நாட்டுப்புறவியல் கட்டுரைகள்; 1987; புதுமை பதிப்பகம், திருச்சி.
  12. சோசலிச கருத்துகளும் பாரதியாரும்; 1987 நவம்பர்; ரசனா புக் ஹவுஸ், சென்னை .
  13. பொதுவுடைமை இயக்கமும் சிங்காரவேலரும் (1921-1934); டிசம்பர் 1988; சரவண பாலு பதிப்பகம், விழுப்புரம்.
  14. தமிழ்ச் சிறுகதைகளில் உருவம்; 1988 டிசம்பர்; அன்னம் (பி) லிட், சிவகங்கை .
  15. சோசலிசமும் முதலாளிய மீட்சியும்; 1990 ஜூலை; புதுமைப் பதிப்பகம், திருச்சி.
  16. ரசியப் புரட்சி ஒரு மாயையா?; 1990 அக்டோபர்; புதுமை பதிப்பகம், திருச்சி.
  17. சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும்; 1990 அக்டோபர்; சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
  18. இட ஒதுக்கீடு; 1990 நவம்பர்; சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
  19. திராவிட இயக்கமும் மொழிக் கொள்கையும்; 1991 மே; செல்மா பதிப்பகம், சிவகங்கை.
  20. பாரதியும் அரசியலும்; 1991 டிசம்பர்; அலைகள் வெளியீட்டகம், சென்னை -24.
  21. சமூகவிடுதலையும் தாழ்த்தப்பட்டோரும்; 1994 ஜூன்; சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
  22. தாழ்த்தப்பட்டோர் இலக்கியம்; 1995 ஜூன்; பஃறுளி பதிப்பகம், சென்னை -5.
  23. அம்பேத்கரிசம் - ஆளும் வர்க்கச் சித்தாந்தமா?; 1995 அக்டோபர்; சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
  24. திராவிட இயக்கத்தில் பிளவுகள்,; 1995 டிசம்பர்; அலைகள் வெளியீட்டகம், சென்னை -24.
  25. சாதியம்; 1995 டிசம்பர்; சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
  26. கோவில் நுழைவுப் போராட்டங்கள்; 1997 டிசம்பர்; சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
  27. தலித் இலக்கியம் சில கட்டுரைகள்; 1998 பிப்ரவரி; புதுமைப் பதிப்பகம், திருச்சி.
  28. பாரதி முதல் கைலாசபதி வரை; 1998 ஏப்ரல்; அகரம், கும்பகோணம்.
  29. தமிழ்: மொழி, இனம், நாடு; 1998 ஜூலை; அலைகள் வெளியீட்டகம், சென்னை -24.
  30. தலித் அரசியல்; 1998 டிசம்பர்; சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
  31. அம்பேத்கரும் சாதிய ஒழிப்பும்; 1998 டிசம்பர்; சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
  32. முனைவர் கோ. கேசவன் கட்டுரைகள்; 1998 டிசம்பர்; சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
  33. நமது இலக்குகள்; 2001 டிசம்பர்; சரவணபாலு பதிப்பகம். விழுப்புரம்.
  34. குணா: பாசிசத்தின் தமிழ்வடிவம் (அ.மார்க்ஸுடன் இணைந்து); 1997 பிப்ரவரி; மக்கள் கல்வி இயக்கம், திண்டிவனம் & விடியல் பதிப்பகம், கோவை.

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...