அம்பேத்கர் எனும் கற்பனாவாத சாதி ஒழிப்பாளர் என்ற தோழர் Sathya Krishnan அவர்களின் இந்த கட்டுரை மிக முக்கியமானது. இதனடிப்படையில் வரும் கட்டுரைகளை தொகுத்து #சாதி_ஒழிப்பு- க்கான ஒரு நூலை பொன்னுலகம் புத்தக நிலையம் சார்பில் கொண்டுவர இருக்கிறோம். முடிந்தவர்கள் படித்து வினையாற்றுங்கள் அல்லது முத்திரை குத்துங்கள்.
முன்னெப்போதும் இல்லாதவகையில் கம்யூனிஸ்ட்கள் மீதான அம்பேத்கரைட்டுகளின் விமர்சனம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணமான 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தினை நான் இன்னும் பார்க்கவில்லை என்பதை தெரிவித்துக்கொண்டும், 'சார்பட்டா பரம்பரை' மாதிரியிலான விமர்சனத்தை என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டும் இந்த கட்டுரையைத் தொடர்கிறேன். அம்பேத்கர் இந்திய பெரும்பான்மை உழைக்கும் வர்க்கமான தலித்துகளுக்கான விடுதலையை முன்னெடுத்தார் என்பதை கணக்கில் கொண்டு பார்க்கையில், இந்திய கம்யூனிஸ்ட்களும் இயல்பாகவே பாட்டாளி வர்க்கமான தலித்துகளுக்காக அவர்களின் விடுதலைக்காகவே போராடியிருக்க வேண்டும். அதுதான் சரி. அப்படியாயின் இயல்பாகவே கூட்டாளிகளாக சேர வேண்டிய அம்பேத்கரும், கம்யூனிஸ்ட்களும் எப்படி எதிரெதிர் துருவங்களாயினர்? அம்பேத்கர் முன்வைத்த சாதி ஒழிப்புக்கும், கம்யூனிஸ்ட்கள் முன்வைக்கும் சாதி ஒழிப்புக்கும் என்ன வித்தியாசம்? இதுபோன்ற கேள்விகளைப் பார்ப்பதற்கு முன்னால், மார்க்ஸுக்கு முன்னாலிருந்த சோஷலிசம் குறித்த கற்பனைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில் மார்க்ஸ் இதுபோன்ற கற்பனாவாத சோஷலிச வடிவங்களுக்குத்தான் விஞ்ஞானபூர்வ வடிவம் கொடுத்தார். மாறாக போதிமரத்தடியிலிருந்து மார்க்சியம் பிறந்துவிடவில்லை.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தொழிற்துறையில் அடைந்த மாபெரும் வளர்ச்சி காரணமாக தொழிலாளர்கள் பெருமளவில் சுரண்டப்பட்டனர். இப்போது இருப்பதைப்போன்ற தொழிலாளர்கள் நலம் காக்கும் சட்டங்கள் எதுவும் இல்லை. இப்போதும் ஏட்டளவில் மட்டுமே இருக்கின்றன என்பதும், அவைகளும் சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதும் ஒரு புறம் இருக்கட்டும். ஆயினும் இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமைகள் படுமோசமானவை. தினமும் ஓய்வொழிச்சலற்ற 16முதல் 20மணிநேர வேலை, சுகாதாரமற்ற ஆடுகள் அடைக்கும் பட்டிகள் போன்ற தங்குமிடங்கள், குழந்தைத் தொழிலாளர்கள் என்று தொழிலாளர்கள் பட்ட பாடுகள் சொல்லி மாளாது. அந்த காலகட்டத்தில், இதுபோன்ற மனிதத்தன்மையற்ற சூழ்நிலைகளில் மனிதர்கள் வாழ்வதையும், அவர்கள் ஈவிரக்கமின்றி சுரண்டப்படுவதையும் பார்த்த சிலர் இந்த சுரண்டலுக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று எண்ணினர். சுரண்டல் தேவையற்ற ஒரு சமூகத்தை கற்பனையில் வடித்து அதை வெளிப்படுத்தினர். பெரும்பாலும் அவை, 'பொன்னியின் செல்வன்'போன்ற நாவல் வடிவத்தில் இருந்தன. எல்லோரும் இன்புற்றிருக்கும் ஒரு உலகத்தை தங்கள் கற்பனையில் சிருஷ்டித்து, சிலர் அரசர்களிடம்கூட தங்களது திட்டத்தைக் கொண்டு சென்றனர். அவர்கள் அப்பாவித்தனமாக செய்த தவறு என்னவென்றால் சுரண்டல் முடிவுக்கு வருவதை முதலாளிகள் உட்பட எல்லோரும் விரும்புகிறார்கள் என்று நம்பியதுதான். ஏனெனில் முதலாளி வர்க்கம் எப்போதும் தனது 'சுரண்டும் உரிமையை' விட்டுக்கொடுக்க தயாராய் இருப்பதில்லை. வரலாற்றில் இதுபோன்ற நபர்கள், 'கற்பனாவாத சோஷலிஸ்ட்கள்' என்று அழைக்கப்படுகின்றனர்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற புரட்சிகர கோஷங்களுடன் நிகழ்த்தப்பட்ட பிரெஞ்சு புரட்சியின் கோஷங்கள் உண்மையில் முதலாளிகளுக்கானவை என்பதையும், அதனால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதையும் தொழிலாளர் வர்க்கம் விரைவிலேயே புரிந்துகொண்டதன் விளைவுதான் பாரிஸ் கம்யூன். இரண்டு மாதங்கள் மட்டுமே நிலைத்த பாரிஸ் கம்யூனின் மூலம் பாட்டாளி வர்க்கம் மட்டுமல்லாமல், முதலாளி வர்க்கமும் படிப்பினைகளைக் கற்றுக்கொண்டன. அது என்னவெனில், (முதலாளித்துவப்) புரட்சிக்கு தொழிலாளர் வர்க்கத்தை பங்காளிகளாக்குவது தொழிலாளர்களை அமைப்பாக்குவதில் சென்று முடிந்து, பின்னர் தொழிலாளர்கள் தங்கள் சுரண்டலுக்கு எதிராக முதலாளித்துவத்தை எதிர்ப்பதில் சென்று முடியும் என்பதுதான். அதனால் தொழிலாளிகளை பங்காளிகளாக்குவதற்கு பதில் யாரை எதிர்த்தார்களோ, அந்த முடியாட்சி, நிலப்பிரபுத்துவ சக்திகளிடமே கூட்டு சேர்வது என்ற முடிவினை எடுத்தனர். ஜெர்மன் தனது போர் கைதிகளை விடுவித்து பாரிஸ் கம்யூனை அழிக்க அனுப்பியது. இருபதாயிரம்பேர் கொல்லப்பட்டனர், நாற்பத்தையாயிரம்பேர் கைதுசெய்யப்பட்டு பதின்மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொடுமையாக தண்டிக்கப்பட்டனர். இவர்களுக்கு முன்னோடியான இங்கிலாந்து தொடக்கத்திலேயே ஒப்பந்தத்துக்கு வந்துவிட்டது. ஆலிவர் க்ரோம்வெல் 1640களில் நடத்திய போர்களெல்லாம் முடியாட்சியை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போடாமல், திருச்சபை மற்றும் முடியாட்சியின் அதிகாரங்களைக் குறைப்பதிலேயே சென்று முடிந்தன. அதற்குக்காரணம் இங்கிலாந்து அடிமைகள் மற்றும் விவசாயிகள் பதினான்காம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி சிறுசிறு கிளர்ச்சிகளை நடத்தி வந்ததுதான். இந்தப்பின்னணியில், இந்தியாவில் பிரிட்டன் அரசாங்கமானது தொடக்கம் முதலே நிலப்பிரபுத்துவ சக்திகளுடன் ஒரு இணக்கமான போக்கையே கைக்கொண்டது.
இந்தப்பின்னணியில் அம்பேத்கர் சாதி ஒரு தொழிற்பிரிவினை, ஆயினும் உலகம் முழுவதுமுள்ள சாதிகள் (தொழிற்பிரிவினைகள்) எப்படி இந்திய சாதிகளிலிருந்து வேறுபடுகின்றன என்று விளக்குகிறார். அதாவது இந்திய சாதிகள் தங்களுக்குள் தீண்டாமை என்ற பெரும் சுவரை எழுப்பிவிட்டன அதுதான் இந்திய சாதிகளின் சிறப்பு குணம் என்று சொல்கிறார். அவரது சம காலத்தில் நடத்தப்பட்ட சமபந்தி நாடகங்களையும், ஹரிஜன் என்ற பெயர் சூட்டல் கயமைத்தனங்களையும் அவர் கடுமையாக எதிர்க்கிறார். அவைகளால் ஒரு பயனும் இருக்காது என்று அவர் சரியாகவே கணித்தார். ஆயினும் தீண்டாமை என்பதன் மூலம், அல்லது சாதி பாகுபாடுகளின் இறுக்கம் குறித்து அவர் குறிப்பிடும்போது, எல்லாவற்றிற்கும் பார்ப்பனர்கள்தான் காரணம் என்றும். பிற சாதியினர் பார்ப்பனர்களைப் பார்த்து அவர்களைப் போலவே தீண்டாமையைக் கடைபிடித்தனர் (போலச்செய்தல்) என்கிறார். எந்த ஒரு சமூகத்திலும், உற்பத்தி சக்திகளே அதிகாரத்தை உடைய சக்திகளாக இருப்பார்கள் என்பதுதான் வரலாறு. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் உற்பத்தி சாதனங்களான நிலமும், கருவிகளும் பிரபுக்கள் கையில் உள்ளது. முதலாளித்துவ சமூகத்தில் தொழிற்சாலைகள் முதலாளியின் கையில் உள்ளது. பார்ப்பனர்கள் சமூகத்தில் உயர்நிலையைப் பிடித்ததும் நல்ல விளைச்சலுக்கான யாகங்கள், மழை வேண்டி யாகங்கள் போன்ற உற்பத்தி சார்ந்த சடங்குகளை நடத்தித்தான். பௌத்தம் வளர்ந்தது கூட உற்பத்தி சக்திகளான மாடுகளை யாகங்கள் என்ற பெயரில் நெருப்பிலிட்டு எரிக்கும் சனாதன சடங்குகளுக்கு எதிராகத்தான். பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் உயர்ந்த நிலை கிட்டியது கடவுளின் தோள்களிலிருந்து பிறந்ததால் என்ற கருத்துமுதல்வாதப் பார்வை போன்றதுதான் அவர்களைப் பார்த்து பிற சாதியினர் தீண்டாமையைக் கடைபிடித்தனர் என்பதும்.
சாதி உருவாக்கம், மற்றும் தீண்டாமை உருவாக்கம் குறித்த உலகம் முழுவதும் இருக்கும் ஒருவகை கருத்தாக்கத்தையே அம்பேத்கரும் கையாண்டார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் சாதி பின்னொட்டுக்களோடு, ஸ்மித், ப்ளாக் ஸ்மித், கோல்ட் ஸ்மித், கோப்லர்ஸ், நைட் போன்ற பல பெயர்களுடன் மக்கள் இருக்கவே செய்கின்றனர். அப்படி இருக்கையில் இந்தியாவில் தீண்டாமை எப்படி நடைமுறைக்கு வந்தது. பழங்குடி சமூகங்களில் இனக்குழுக்களுக்கு மத்தியிலான சமூக விலகல்களைக் காண முடியும். ஆயினும், சாதிகள் கண்டிப்பாக இனக்குழுக்கள் அல்ல. இனக்குழுக்களுக்கு இடையில் இருப்பதுபோன்ற பண்பாட்டு வேறுபாடுகள் சாதிகளிடையே கிடையாது. இருப்பினும் சாதிகளுக்கு இடையில் தீண்டாமை எப்படி புகுந்தது என்கிற கேள்விக்கு 'போலச்செய்தல்' என்கிற மிக எளிய விடையை அளித்து பார்ப்பனர்கள் மீது எல்லாப் பழியையும் தூக்கிப்போடுவது எளிதானது என்றாலும் அது அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. பார்ப்பனர்கள் தீண்டாமையைக் கடைபிடித்தவர்கள் என்பதும், சமூக இழிவுகளுக்கு பெரும்பங்காற்றியவர்கள் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், சமூகத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கவில்லை என்பதே உண்மை. மேலும் சாதிகள் மீதான தீண்டாமைக்கு உணவுப் பழக்கவழக்கம் ஒரு காரணம் என்பதும் ஏற்க முடியாதது. ஏனெனில் மத நிறுவனமயமாக்கல் கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக மட்டுமே உச்சத்தை அடைந்திருக்கின்றது. அதனால் பசுவுக்கு கொடுக்கப்படும் புனிதமெல்லாம் இந்த இடைப்பட்ட காலங்களில் உட்புகுத்தப்பட்டவைதான். அப்படியிருக்கையில் தீண்டாமைக்கான வேர் உழைக்கும் மக்களை அடிமைகளாக நடத்தும் பழக்கத்திலிருந்தே வந்திருக்க முடியும். அதையே மனுவின் வர்ண முறையும் செய்கின்றது. எல்லா சமூகங்களிளும் உற்பத்தி சாதனங்களை கைக்கொண்டிருப்பவருக்கும், உற்பத்தியில் ஈடுபட்டவருக்கும் இடையே ஒரு சிறிய ஒதுக்குதல் (தீண்டாமை) இருந்தே வருகிறது. இதில் பிற நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சியின் போக்கில் அவை ஒழிந்துவிட்டன, எனினும் இந்தியாவில் அப்படியொரு முதலாளித்துவ வளர்ச்சி எட்டப்படவில்லை என்பதே நிதர்சனம்.
இந்திய முதலாளித்துவம் வளர்ந்த காலகட்டத்தில், இந்திய நிலப்பிரபுத்துவம் ரஷ்யாவிலிருந்து படிப்பினைகளை கற்றுக்கொண்டது. 'ரஷ்ய அபாயம்' இந்தியாவைத் தாக்காமல் இருக்க உடனடியாக முதலாளித்துவ சமரசத்தில் ஈடுபட்டது. தொழில் வளர்ச்சி என்ற முதலாளித்துவத்தின் கோஷம் இங்கே நிலப்பிரபுக்களின் கோஷமாகி நிலப்பிரபுக்கள், முதலாளிகளாக மாறி தங்கள் நிலப்பிரபுத்துவ அதிகாரங்களை நீட்டித்துக்கொண்டு அரை முதலாளிகளாகவும், அரை நிலப்பிரபுக்களாகவும் நீடித்துக்கொண்டனர். இந்த சூழலைக் கணக்கில் கொண்டுதான் இந்திய கம்யூனிஸ்ட்கள் வர்க்கப் போராட்டமே சாதி ஒழிப்புக்கு ஒரே வழி என்று வலியுறுத்துகின்றனர். புரட்சி மூலம் உற்பத்தி முறையில் இருக்கும் சுரண்டலை ஒழிப்பதே சமூக மாற்றத்துக்கான ஒரே சாத்தியமான முன்னெடுப்பு என்று கருதுகின்றனர். மாறாக அம்பேத்கர் முதலாளித்துவத்தின் மீது மாபெரும் நம்பிக்கை வைக்கிறார். முதலாளித்துவத்தின் வளர்ச்சியே சாதியை ஒழிக்கும் என்று கருதுகிறார். அதில் பிழையொன்றும் இல்லை. நிலப்பிரபுத்துவத்தை ஒழித்ததில் பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு முதலாளித்துவப் புரட்சிகளின் பங்களிப்பு மறுக்கவியலாதது. ஆனால் பாரிஸ் கம்யூன் மற்றும் ரஷ்யப் புரட்சிக்குப் பின்னால் பாடம் கற்ற முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவதுடன் ஒரு சமரசத்தில் ஈடுபட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம், மேலும் அது இந்திய சூழலுக்கும் பொருந்தியதை கண்டோம்.
அம்பேத்கருக்கு கம்யூனிசம் மீதான வெறுப்புக்குக் காரணம் அதன் 'காட்டுமிராண்டித்தனமான வன்முறைப் பாதை' என்கிறார். ஆனால் உலகம் முழுவதும் முதலாளித்துவப் புரட்சி ஆயுதம் தாங்கித்தான் நடந்தது என்பதை அவர் கணக்கில்கொள்ள மறந்துவிட்டார். ஆலிவர் க்ரோம்வெல், இரண்டாம் சார்லஸ் மன்னருக்கு எதிராக நடத்திய போரும், பிரெஞ்சுப்புரட்சியும் ரோஜாக்களை ஏந்தியா நடந்தது? அப்படியொரு புரட்சி இந்திய மண்ணில் நிகழவேயில்லை என்பதுதான் முதலாளித்துவம் இந்தியாவில் நிலப்பிரபுத்துவதை ஒட்டுமொத்தமாக அழிக்காததன் காரணம். இப்படியொரு சூழலில் தீண்டாமையை ஒழிக்க, அல்லது சாதியை ஒழிக்க அம்பேத்கரிடம் என்ன திட்டம் இருந்தது? கலப்பு திருமணங்கள் என்ற மாற்று வழியை அம்பேத்கர் முன்வைக்கிறார். கலப்புத் திருமணங்கள் மனுவின் காலத்திலிருந்தே இருந்து வருபவைதான். ஏனென்றால் இந்த சமூக கட்டுப்பாடுகள் நூறு சதவீதம் கடைபிடிக்க முடியாதவை. அவ்வாறான கலப்பு மணங்களின் அல்லது உடலுறவுகளின் விளைவாக பிறந்த குழந்தைகளுக்கு புதிய சாதிய வடிவம் கொடுக்கிறார் மனு. இப்படி வருணக்கலப்பு சாதிகளுக்கு பெயர்களும் அவர்கள் செய்ய வேண்டிய ஏவல் தொழில்களும் என்று ஒரு பெரிய பட்டியலையே மனு கொடுக்கிறார்.
அந்த பட்டியல்:
அனுலோம சாதிகளின் தோற்றம்:
மேல் வருணத்து ஆண்களும், கீழ் வருணத்து பெண்களும் கூடி கலந்து பிறக்கும் குழந்தைகளை அனுலோம சாதியில் வைக்கப்படுவர். இந்த அனுலோம சாதியினர்கள் தந்தையின் வர்ணத்திற்குக் கீழும், தாயின் வருணத்திற்கு மேலான தகுதி வழங்கி பூணூல் அணியும் (உபநயனம்) சடங்கு செய்யும் உரிமை பெறுகின்றனர். மேலும் தர்ம காரியங்களை செய்யவும் அதில் கலந்து கொள்ளவும் உரிமை பெறுகின்றனர். அனுலோம சாதியினர், பிரதிலோம சாதியினரைவிட சமூகத்தில் கூடுதல் தகுதியுடையவர்கள்.
அந்தண தந்தைகளுக்கு, வைசிய மனைவிகள் மூலம் பிறந்த பிள்ளைகளை அம்பஷ்டன் என்பர்.
அந்தண தகப்பன்களுக்கு சூத்திர மனைவிகள் மூலம் பிறந்த குழந்தைகளை நிஷாதன் என்றும் பாரசவன் என்றும் அழைப்பர்.
சத்திரிய தகப்பன்களுக்கு, சூத்திர மனைவிகள் மூலம் பிறந்த குழந்தைகளை உக்கிரன் என்றழைப்பர்.
சத்திரிய தந்தைகளுக்கு, அந்தண மனைவிகள் மூலம் பிறக்கும் பிள்ளைகளை சூதன் என்பர்.
வைசிய தகப்பன்களுக்கு, சத்திரிய மனைவிகள் மூலம் பிறக்கும் பிள்ளைகளை மாதகன் என்பர்.
வைசிய தகப்பன்களுக்கு, அந்தண மனைவிகள் மூலம் பிறந்த பிள்ளைகளை வைதேகன் என்பர்.
பிரதிலோம சாதிகளின் தோற்றம்:
நான்காம் வருண தந்தைக்கும் இருபிறப்பாளர்களான மேல்வருணத்து மனைவிகளுக்கும் பிறக்கும் குழந்தைகளை பிரதிலோம சாதியில் வைக்கப்படுவர். பிரதிலோம சாதி குழந்தைகளுக்கு தந்தையின் வருணத்திற்குண்டான சமூக தகுதி கிடையாது. ஆனால் தாயின் வருணத்திற்கு குறைவான சமூகத் தகுதியுடன் வைக்கப்படுவர். சில கலப்பு வருணத்தில் பிறந்த பிரதிலோம குழந்தைகள் தீண்டத்தகாதவர்கள் பட்டியலில் சேர்த்து அவமானப்படுத்துவர். எடுத்துக்காட்டு: சண்டாளர். பிரதிலோம சாதியினருக்கு பூணூல் அணியும் உபநயனம் சடங்கு செய்ய தகுதி கிடையாது. இவர்கள் அனுலோம சாதியினரைவிட தாழ்ந்தவர்கள் ஆவர்.
நாலாம் வருண தந்தைகளுக்கு வைசிய வருணத்து மனைவிகள் மூலம் பிறக்கும் பிள்ளகளை அயோகவன் எனும் சாதியில் வைக்கப்படுவர்.
நாலாம் வருண தந்தைகளுக்கு சத்திரிய வருணத்து மனைவிகள் மூலம் பிறந்த பிள்ளைகள க்ஷத்தா எனும் சாதியில் வைக்கப்படுவர்.
நாலாம் வருண தந்தைகளுக்கு அந்தண வருணத்து மனைவிகள் மூலம் பிறந்த பிள்ளைகள் சண்டாளர் எனும் சாதியில் வைக்கப்படுவர்.
நால்வர்ணத்தினர், அனுலோம - பிரதிலோம சாதிகளுடன் திருமண உறவினால் தோண்றிய சாதிகள்
அனுலோம மற்றும் பிரதிலோம சாதிகளுடன் திருமண உறவினால் உண்டான புதிய சாதிகளின் தோற்றம்:
அந்தண தகப்பனுக்கு உக்கிரன் எனும் சாதியைச் சேர்ந்த (அனுலோம சாதி) மனைவியின் மூலம் பிறந்த குழந்தைகளை ஆவிரதன் என்ற சாதியிலும்; அந்தணனுக்கும் அம்பஷ்டன் சாதியைச் சேர்ந்த மனைவி மூலம் பிறந்த குழந்தைகளை அபீரன் என்ற சாதியிலும்; அந்தணனுக்கும் அயோகவன் சாதியைச் சார்ந்த மனைவி மூலம் பிறந்த பிள்ளைகளை திக்வணன் எனும் சாதியில் சேர்த்தனர்.
நிஷாதன் எனும் சாதியைச் சார்ந்த ஆடவனுக்கும் நாலாம் வருணத்தை சார்ந்த மனைவி மூலம் பிறந்த பிள்ளைகளை புற்கசன் எனும் சாதியிலும்; நாலாம் வருணத்தை சார்ந்த ஆடவனுக்கும் நிஷாத சாதி மனைவிக்கும் பிறக்கும் பிள்ளைகளை குக்குடகன் என்ற சாதியிலும் வைத்தனர்.
க்ஷத்தா சாதி ஆடவனுக்கும் உக்கிரன் சாதியைச் சார்ந்த மனைவிக்கும் பிறக்கும் பிள்ளைகளை சுவபாகன் என்ற சாதியிலும்; வைதேகன் சாதியைச் சேர்ந்த ஆடவனுக்கும் அம்பஷ்டன் சாதியை சார்ந்த மனைவிக்கும் பிறக்கும் பிள்ளைகள வேணன் என்ற சாதியில் சேர்க்கின்றனர்.
வைதேக சாதி ஆடவன் அயோகவ சாதிப் பெண்ணுடன் கூடிப் பெறுகின்ற பிள்ளை மைத்திரேயன் சாதியினர் ஆவான்.
தஸ்யூ ஆடவனுக்கும் அயோகவன் சாதி பெண்ணிற்கும் பிறந்த பிள்ளைகள் சைரந்திரன் சாதியினர் ஆவான்.
நிஷாத சாதி ஆடவனுக்கும் அயோகவ சாதிப் பெண்ணிற்கு பிறந்த பிள்ளைகள் மார்க்கவன் சாதியினர் ஆவான்.
நிஷாத சாதி ஆடவனுக்கும் விதேக சாதி பெண்ணிற்கும் பிறக்கும் பிள்ளைகளை கார்வாரன் சாதியினர் ஆவர்.
நிஷாத சாதி ஆடவனுக்கும் வைதேக பெண்ணிற்கும் பிறக்கும் பிள்ளைகளை ஆகிண்டிகன் சாதியினர் ஆவர்.
சண்டாள ஆடவனுக்கும் வைதேக சாதி பெண்ணிற்கு பிறக்கும் பிள்ளைகள் பாண்டு எனும் சாதியை தோற்றுவிக்கின்றனர்.
சண்டாள ஆடவனுக்கும் புற்கசன் சாதி பெண்ணிற்கு பிறக்கும் பிள்ளைகள் சோபகன் எனும் சாதியை தோற்றுவிக்கிறான்.
சண்டாள ஆடவனுக்கும் நிஷாத சாதிப் பெண்ணிற்கு பிறக்கும் பிள்ளைகள் அந்தியாவசாயி எனும் சாதியை தோற்றுவிக்கின்றனர்.
இவற்றில் ஆவிரதன், அபீரன், திக்வணன், புற்கசன், குக்குடகன், சுவபாகன் மற்றும் வேணன் ஆகிய கலப்பு சாதிகளை அந்தராள சாதியினர் என்று மனு கூறுகிறார்.
பாகிய சாதிகள்
அனுலோம - பிரதிலோம ஆகிய சாதியினர்கள் தமக்குள் சம்பந்தம் செய்து கொண்டு பிறக்கும் குழந்தைகள் பாகிய சாதியர் என்று மநு குறிப்பிடுகிறார். மேலும் இவர்கள் தீண்டத்தகாதவர் ஆவர். அனுலோம மற்றும் பிரதிலோம ஆடவர்கள் நால் வருணத்துப் பெண்களிடம் கூடிக் கலந்து பெறும் பிள்ளைகள் 15 வகையினரான மிகத் தாழ்ந்த பாகிய சாதியர் ஆவர்.
விராத்திய சாதியினர்
இருபிறப்பாளர்களான அந்தணர், சத்திரியர் மற்றும் வைசியர்களுக்கு சுய வர்ணத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கு சாத்திரப்படி உபநயனம் முதலிய வைதீக கடமைகள் ஆற்ற தகுதி இல்லாமல் போனால் அவர்களை காயத்திரி மந்திரம் கூற தகுதியற்ற விராத்திய சாதியினராக கருதப்படுவர். நால்வருணத்திலும், கற்புநெறி தவறுவதாலும், சொந்த கோத்திரத்தில் மணம் புரிவதாலும், ஜாதகர்மா முதலிய சமயச் சடங்குகள் செய்யாமையாலும் கலப்பு சாதிகள் தோண்றுவதற்கு இந்த விராத்திய சாதியர்களே காரணமாயினர்.
விராத்திய அந்தண சாதி ஆடவனுக்கும், அந்தணப் பெண்னுக்கும் பிறக்கும் குழந்தைக்கு பூர்ஜகண்டன், என்றும் மேலும் பல நாட்டில் அவர்களை ஆவந்தியான், வாடதானன், புஷ்பதன், சைகன் எனப் பல பெயரால் அழைக்கப்படுகிறர்கள் என்று மனு கூறுகிறார்.
விராத்திய சத்திரிய சாதி ஆணுக்கும் சத்திரியப் பெண்னுக்கும் பிறக்கும் குழந்தைகளை சல்லன் சாதியினர் என்பர். இவனுக்கு நாடுகள் தோறும் மல்லன், நிச்விநடன், கரணன், கசன், திரவிடன் என வேறு பெயர்களும் வழங்கப்படுகிறது.
விராத்திய வைசிய சாதி ஆணுக்கும் வைசியப் பெண்ணுக்கும் பிறப்பவர்களை சுதன்வா சாதியினர் என்பர். இந்த சுதன்வாவை, தச்சன், காரூசன், விஜன்மா, மைத்திரன், சாத்துவதன் என பல இடங்களில் பல பெயர்களால் பல பகுதிகளில் அழைக்கப்படுகிறான்.
சூதன், வைதேகன், சண்டாளன், மாகதன், க்ஷத்தா மற்றும் அயோகவன் சாதி ஆடவர்கள் தத்தமது வகைப் பெண்டிரிடமும், மற்ற நால்வர்ணப் பெண்டிரிடமும் கூடிப் பிறக்கும் குழந்தைகள் தங்கள் தந்தையின் சாதியைச் சாருவர்.
கலப்பு சாதியினர்களின் தொழில்கள்:
அனுலோம மற்றும் பிரதிலோம சாதியினர் இருபிறப்பாளர்களான முதல் மூன்று வர்ணத்தாருக்கு ஏவல் தொழில் செய்து பிழைக்க வேண்டும்.
சூதர் சாதியினர் தேரோட்டிகளாகவும், தேர்க் குதிரைகளுக்கு பயிற்சி அளிப்பவர்களாகவும் ; அம்பஷ்டர் அறுவை மருத்துவர்களாகவும், ஆண்களுக்கு முடி திருத்துபவராகவும்; வைதேகர் அந்தப்புரக் காவல் காப்பவர்களாகவும்; மாகதர் கடல் கடந்தும், கடற்கரையிலும் வாணிகம் செய்பவராயும் வாழ்வர். மாகதர் என்போர் வாழ்த்துப் பாடுவோர்.
நிஷாதர் சாதியினர் மீன் பிடித்தும்; அயோகவர் சாதியினர் தச்சு வேலையும்; மேதன், ஆந்திரன், செஞ்சு ஆகிய சாதியினர்களின் தொழில் காட்டு விலங்குகளை வேட்டையாடி விற்றலே.
சத்தா சாதியினர் எலி, உடும்பு பிடித்தல்; உக்கிரன், புற்கசன் சாதியினர் தோல் வியாபாரம் செய்தல்; திக்வணனுக்கும், வேணனும் இசைக் கருவிகள் வாசித்தலே தொழில்.
சண்டாளன் பிணத்தை எரித்தல், மரண தண்டனை நிறைவேற்றுதலே தொழில்.
சைரந்திரன் சாதியினர் செய்யும் தொழில்கள்:- எண்ணெய் தேய்த்தல், கை, கால் பிடித்து விடுதல், வலை வீசுதல்.
மைத்திரேயன் மணியடித்துக் கொண்டு, அனைவரையும் போற்றி பிச்சை எடுத்தலே தொழில்.
மார்க்கவன் எனும் செம்படவ சாதியினருக்கு நதிகளில் ஓடம் விடுதலே தொழில்.
பாண்டு சாதியினர் மூங்கில் தொடர்பான வேலைகள் செய்வது.
ஆகிண்டிகன் சாதியினர் குற்றவாளிகளை அடித்தல், கட்டுதல், மரணம் உண்டாக்கலே தொழில்.
சோபாகன் சாதியினர் மரண தண்டனை நிறைவேற்றலே தொழில்.
அந்தியாவசாயி சாதியினர் இடுகாட்டை காத்தலே தொழில்.
இப்படியாக, வர்ணக்கலப்பால் சாதிகள் ஒழிவதென்றால் அது மனுவின் காலத்திலேயே ஒழிந்திருக்க வேண்டும். மாறாக புதிய சாதிப்பிரிவினையையும் அதற்கேற்ற தொழிலையும் மனு வகுத்தளிக்கிறார். இப்படியிருக்க, அம்பேத்கர் முன்வைக்கும் கலப்புத்திருமணம் எப்படி சாதியை ஒழிக்கவல்ல அருமருந்தாகும்? ஒருவேளை அது சரியான வழி என்று வைத்துக்கொண்டாலும் நடைமுறையில் அது சாத்தியமா? உயர்சாதிகளாய் தங்களை சொல்லிக்கொள்கிற பிரிவினர் தாமாக முன்வந்து முழுமனதுடன் தாழ்த்தப்பட்டவர்களுடன் திருமண உறவில் சேர ஒப்புக்கொள்வார்களா? ஒப்புக்கொள்ளவில்லை என்பதை இந்திய சமூகம் இன்றுவரை நிரூபித்துக்கொண்டிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழும் அதிசயங்கள் சமூக மாற்றத்துக்கு எந்தப் பலனையும் தந்துவிடவில்லை. மேலும் சமூகம் இப்படி சாதிகளாய் பிளவுற்றிருப்பதையே ஆளும் வர்க்கமும் அரசும் விரும்புகிறது எனும்போது அந்த ஆளும் வர்க்கத்திடம் பரிந்து பேசி கிடைக்கும் சட்டப்பூர்வமான உரிமைகளைப் பெற்றுத்தருவதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் விடுதலை சாத்தியமா? இல்லை என்று இன்றுவரை இந்திய சமூகம் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.
அம்பேத்கர் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க உளமார பாடுபட்டார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆயினும், அம்பேத்கரின் சிக்கலே அவர் அரசதிகாரத்துடன் சமரசம் செய்துகொண்டு அதனிடம் வேண்டி உரிமைகளைப் பெற்றுவிட எண்ணியதுதான். ஆனால் அரசதிகாரம் என்றால் என்ன? இந்திய காவியங்களில் வருவதுபோல் ஒற்றை அரசன் எடுக்கும் தீர்மானங்கள் எல்லோராலும் பணிந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று அப்பாவித்தனமாக நம்புவதுபோல் அரசு இயங்கவில்லை. எந்தவித சமூகமாய் இருந்தாலும் அரசு என்பது உற்பத்தியைக் கைக்கொண்டவர்களின் பிரதிநிதியாக இருப்பதுதான். அந்த உற்பத்தி சக்திகளை திருப்திப்படுத்தவே சட்டங்கள், நீதிமன்றங்கள் எல்லாமே இருக்கின்றன. ஒருகாலத்தில் நிலப்பிரபுத்துவ சமூகத்தில் உற்பத்திக்கு பல தடைகள் இருந்தன. உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு ஏற்றுமதி செய்யவும், விற்கவும்கூட பல சட்டப்பூர்வ இடைஞ்சல்கள் இருந்தன. இந்தக்குறுக்கீடுகளை களைய முதலாளிகள் தங்களது பிரதிநிதிகளுக்கு அரசமைப்பில் பிரதிநிதித்துவம் கேட்டனர். இந்த பிரதிநித்துவங்கள் முதலாளிகளின் அதிகாரத்தை நிலைநாட்டியதுடன் நிலப்பிரபுக்களின் வீழ்ச்சிக்கும் வழிகோலியது. அதுபோன்றதொரு பிரதிநிதித்துத்துவத்தைக் கூட இரட்டை வாக்குரிமை போன்ற வழிகளில் அம்பேத்கர் பெற்றுவிட உயர்சாதியினர் அனுமதிக்கவில்லை என்பதும், அரசும் அதிகாரமும் அவர்களுக்குத் துணையிருந்தன என்பதும் அம்பேத்கர் கணக்கில் கொள்ளாதவை.
அம்பேத்கர் ஒரு முதலாளித்துவவாதி. அதில் பிழையொன்றும் இல்லை. அது அவரது சொந்த முடிவு. அவரது கண்ணோட்டத்தில் நிலப்பிரபுத்துவத்தால் அழுகி நாறிப்போன இந்திய சமூகத்துக்கு முதலாளித்துவ சமூகம் முற்போக்கான சமூகமாகவும் புரட்சிகர சமூகமாகவும் தெரிந்ததில் வியப்பேதுமில்லை. முதலாளித்துவமே சாதிய கொடுமைகளுக்கு தீர்வளிக்கும் என்று அவர் உளமார நம்பியதில் பிழையொன்றும் இல்லை. அவர் முதலாளித்துவ பார்வைகளும், லட்சியங்களும் கொண்டிருந்தவர். இந்திய முதலாளித்துவ வளர்ச்சிக்காக தன்னாலியன்ற பங்களிப்பை செய்தவர். அதனாலேயே, அந்த முதலாளித்துவப் பார்வையினாலேயே அவருக்கு கம்யூனிஸ்ட்கள் மீது இயல்பாகவே வெறுப்பு இருந்தது. கம்யூனிஸ்ட்கள் தொழிலாளர்களை சுரண்டுபவர்கள் என்பது தொடங்கி பல்வேறுவகைகளில் கம்யூனிஸ்ட்களை வசைபாடினார். சோவியத் யூனியன் மீது வெறுப்பைக் கக்கினார். ஆனால் அவருடைய முதலாளித்துவ விசுவாசத்துக்கு துரோகமே பதிலாகக் கிடைத்தது. இந்திய ஆளும் வர்க்கம் அம்பேத்கரையும் சுரண்டியதுதான் மிச்சம். நிதர்சனம் இப்படி இருக்கையில், அரசாங்கத்திடம் வேண்டி விரும்பிக் கேட்பதன் மூலம் உரிமைகளைப் பெற நினைப்பதும், உயர்சாதியினர் தாங்களாகவே முன்வந்து கலப்புத் திருமணங்கள் மூலம் சாதி ஒழிப்புக்கு வழிகோலுவார்கள் என்று நம்புவதும் கற்பனாவாதமன்றி வேறென்னவாக இருக்க முடியும்?
அடுத்ததாக இந்து மதம்தான் எல்லாவித ஒடுக்குமுறைகளுக்கு காரணம் என்று முடிவெடுத்து மதம் மாறுவதாக முடிவு செய்தார். 1936ல் அம்பேத்கர் அறிவித்து 1956ல் பௌத்தம் தழுவும் வரை ஏதோவொரு சமரசத்துக்கு சாதி இந்துக்கள் வந்திருக்கலாம். ஆயினும் அம்பேத்கருக்கு துரோகம் செய்த அதிகார வர்க்கம் அப்படியெல்லாம் பணிந்து போகவில்லை. போகவும் போகாது என்பதுதான் யதார்த்தம். கடைசியில் பௌத்தம் மாறியது எந்த வகையில் சாதி ஒழிப்புக்கு துணை போனது. சட்டப்பூர்வமான தலித்துகளுக்கு உரிமைகள் இருந்தும் நடைமுறையில் உரிமைகள் மறுக்கப்படுவது போல், சட்டப்பூர்வமாக பௌத்தம் தனி மதமாக இருந்தாலும் அது நடைமுறையில் இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே உள்ளது. அதனால் மதம் மாறுவதும் சாதி ஒழிப்புக்கு தீர்வில்லை என்பது நடைமுறையில் தெளிவாகிறது. அம்பேத்கரின் மதம் குறித்த பார்வையும் தவறானது. மனிதனின் ஆன்மாவுக்கு மதம் கண்டிப்பாய் தேவை என்பதும், மதம் இல்லாவிட்டால் மனிதன் நல்லொழுக்கமின்றி போய்விடுவான் என்பதும் சுரண்டலுக்கு அடைக்கலம் தேடும் முதலாளித்துவப் பார்வைகளேயன்றி வேறொன்றும் இல்லை.
இதையெல்லாம் ஒரு புறம் வைத்துவிட்டு அம்பேத்கரைட்டுகளிடம் அம்பேத்கரியம் என்ன சொல்கிறது என்று கேட்டால் அதற்கு உருப்படியான பதில் எதுவும் கிடைப்பதில்லை. ஏனென்றால் அப்படி ஒன்று இல்லவேயில்லை. அதிகபட்சமாக கொண்டுவரக்கூடிய இஸம் 'கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய்'தான். அன்பு அம்பேத்கரிஸ்ட்களே, இது கோஷம். இஸம் எனப்படும் சித்தாந்தம் இதற்கெல்லாம் மேற்பட்டது. அப்படியொரு சித்தாந்தம் அம்பேத்கரால் வகுத்தளிக்கப்பட்டுள்ளதா என்றால் அப்படியொன்றும் இல்லை. ஒருவேளை திருக்குறள் போல கற்பி ஒன்று சேர் புரட்சிசெய் என்பதையே விரித்து பார்க்க வேண்டுமெனில், கற்பி என்றால் யாருக்குக் கற்பிக்க வேண்டும், எதனைக் கற்பிக்க வேண்டும் என்பதெல்லாம் குறித்த தெளிவு இல்லை. ஒன்று சேர் என்றால் யாருக்கு எதிராக ஒன்று சேர வேண்டும். யாருக்கும் எதிராக இல்லை என்பதுதான் பரிதாபம். சுரண்டலுக்கு எதிராக ஒன்று சேர வேண்டுமா இல்லை ஒன்று சேர்ந்து அமைப்பாக்கப்பட்ட வகையில் சுரண்டப்பட அனுமதிக்க வேண்டுமா என்றால் இரண்டாவதையே அம்பேத்கர் தேர்ந்தெடுப்பார். ஏனெனில் அவர் நம்பும் முதலாளித்துவம் அதையே சொல்கிறது. புரட்சி செய்ய வேண்டுமெனில் அது என்ன வகையான புரட்சி, யாருக்கு எதிரானது? அது என்ன சமூக மாற்றத்தைத் தருவிக்கும் வகையிலான புரட்சி என்பது குறித்த தெளிவான முன்வைப்புகள் எதுவும் இல்லை. ஒரு முரண்பாடுகள் நிறைந்த சமூகத்தில், முரண்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு அரசமைப்புக்கு எந்த பங்கமும் ஏற்படுத்தாமல் என்ன மாதிரியான புரட்சியை செய்துவிட முடியும் என்பதில் அம்பேத்கருக்கும், அம்பேத்கரைட்டுகளுக்கும் எந்த விளக்கமும் கொடுக்க முடியவில்லை என்பதே கசப்பான நிஜம்.
மேலும் அம்பேத்கரைட்டுகளுக்கு கம்யூனிசம் என்பது ஏழைகள் பணக்காரர்களாவது என்று ஆழ்மனதில் சென்று யாரோ நம்ப வைத்திருக்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தைத் தாண்டியது. அதைக் குறைப்பதற்காக இந்திய அரசாங்கம் புத்திசாலித்தனமான நடவடிக்கை ஒன்றை எடுத்தது. அதாவது வறுமைக்கோட்டுக்கான நிபந்தனைகளை குறைத்து, குறைந்த வருமானம் பெற்றாலும் வறுமைக்கோட்டுக்கு மேலே இருப்பதாய் கணக்கு காட்டியது. இதுபோன்ற ஒரு செயல்திட்டத்தில் வர்க்கம் ஒழிந்தால் ஏழைகள் எல்லாரும் சொடக்கு போடும் நேரத்தில் பணக்காரர்களாகிவிடுவார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சமூகவிதிகளின் அடிப்படைகூட தெரியவில்லை என்பதுதான் சோகம். புரட்சியின் மூலம் நிகழும் சமூக மாற்றம் என்பது உற்பத்தி முறையில் நிகழ்த்தப்படும் மாற்றமாகும். நிலப்பிரபுத்துவ சமூகத்தில் உற்பத்தியானது குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டுமேயான உற்பத்தி முறை, ஆனால் முதலாளித்துவத்தின் வளர்ச்சி சந்தைக்குத் தேவையான உற்பத்தியைக் கோருகின்றது. சந்தைக்கான உற்பத்திக்கு நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைகள் போதுமானதாக இல்லை. அதனால் முதலாளித்துவப் புரட்சி நிலப்பிரபுத்துவதை ஒழித்துவிட்டு சந்தைக்கான பெருமளவிலான உற்பத்தியைத் தொடங்கியது. ஏனெனில் அதிக உற்பத்தி என்பது, அதிக சுரண்டலுக்கு வழிவகுக்கும். சுரண்டலின் மூலம் மட்டுமே முதலாளித்துவம் ஜீவித்திருக்கின்றது. முதலாளித்துவ உற்பத்தியில் உபரி உழைப்பானது லாபமாக கருதப்படுகிறது. அந்த சுரண்டல் முறையை ஒழிப்பதே சோஷலிச புரட்சியாகும். அதுதான் வர்க்க ஒழிப்பு. இதற்கும் ஏழைகள் பணக்காரர்களாவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரவர் உழைப்புக்கு ஏற்ற கூலியை எவ்வித சுரண்டலுமின்றி நேர்மையாகப் பெற முடியும் என்பதுதான் அதன் அர்த்தம். இப்படியொரு சுரண்டலற்ற சமூகத்தில் சாதிகளுக்கான கூறுகள் அழிந்து போகின்றன. ஏனெனில் இயல்பாகவே உழைக்கும் வர்க்கமாக இருக்கும் தலித்துகள்தான் இந்தப் புரட்சியின் முன்னணிப்படையில் நிற்பவர்கள். புரட்சியின் பங்குதாரர்களும் அவர்கள்தான். ஏனெனில் மார்க்ஸ் சொன்னதுபோல் உற்பத்தி சாதனங்களை தொழிலாளர்கள் கைப்பற்றுவதில்தான் புரட்சி தொடங்குகிறது. இந்த உண்மை புரியாமல் தலித்துகளில் பணக்காரர்களானவர்களைக் கைகாட்டி அவர்கள் வர்க்க மாற்றமடைந்து விட்டனர், ஆயினும் சாதிய ஒடுக்குதலுக்கு ஆளாகிறார்கள் என்று சொல்வது அறியாமையன்றி வேறென்ன. மீண்டும் ஒருமுறை சொல்கிறேன், சுரண்டல் சமூகம் இருக்கும்வரையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்வரையில் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை.
இந்தியாவில் அம்பேத்கரிய இயக்கங்கள் 1980களில் தொடங்கியது. தலித் பேந்தர்ஸ் ஆப் இந்தியா என்ற அமைப்பின் தொடக்கம் பிளாக் பேந்தர்ஸ் என்ற அமெரிக்க கறுப்பினத்தவர்களின் இயக்கத்தை வழியொட்டி வந்தது. அது ஒரு மார்க்சிய லெனினிய இயக்கம். பிரெட் ஹேம்டன் வரலாறு தெரிந்தவர்களுக்கு அவ்வியக்கத்தின் வரலாறும் தெரியும். சோவியத் திருத்தல்வாதங்களின் விளைவாய் வீழ்ந்ததன்பிறகு உலகமயம் இந்தியாவிலும் தனது கரங்களை விரிக்கத் துவங்குகிறது. அதன்விளைவாய் தலித் பேந்தர்ஸ் போன்ற இடதுசாரி அமைப்புகளுக்கு எதிராக NGOக்கள் வழியாக பிற அமைப்புகளை உருவாக்குகின்றன. அந்த அமைப்புகளின் வழியாக பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளும், ராம்விலாஸ் பஸ்வான் போன்றவர்களும் உருவாயினர். இன்று அவர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதிலிருந்தே அவர்கள் எவ்வளவு பெரிய வலதுசாரி சக்திகளாக உருவெடுத்துள்ளனர் என்பது புரியும். இதே தலித் பேந்தர்ஸ் ஆப் இந்தியாவில் இருந்து பின்னர் புதிய கட்சியை ஆரம்பித்தவர்தான் திருமாவளவன். இருப்பினும் சனாதன எதிர்ப்பு என்ற தமிழகத்தின் நாடித்துடிப்பை உணர்ந்தே திருமாவளவன் செயல்படுகிறார். அதனால் அவருக்கு எதிராய் ஒரு சக்தியை தமிழகத்தில் உருவாக்க, தமிழகத்துக்கான ஒரு ராம்விலாஸ் பஸ்வானை உருவாக்க NGOக்கள் முயல்கின்றன என்பதுதான் உண்மை.
ரஷ்யாவில் புரட்சியின்போது முதலாளித்துவவாதிகளின் கை ஓங்கியிருந்தபோது மென்ஷ்விக்குகள் முதலாளித்துவப்புரட்சிக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்தனர். சமூக விதியின்படி நிலப்பிரபுத்துவ ஜார் அரசாங்கத்தை ஒழித்துவிட்டு முதலாளித்துவ அரசு அமைந்த பின்னரே சோஷலிச அரசு அமையும் என்று ஏட்டுச்சுரைக்காய்களாய் இருந்தனர். ஆனால் லெனின் மிகத் தெளிவாய் 'முதலாளித்துவப் புரட்சியில் பாட்டாளிகள் பங்கேற்கத்தேவையில்லை' என்று அறிவித்தார். ஜார் அரசு எவ்வளவுக்கெவ்வளவு தொழிலாளர்களுக்கு எதிரியோ அதற்கு சற்றும் குறைவில்லாத அளவு முதலாளிகளும் எதிரிகள் என்றார். அந்த தீர்க்கமான பார்வைதான் சோஷலிசப் புரட்சியை நடத்திக்காட்டியது. மாறாக சமூகம் தனது போக்கில் மாறும் என்ற நம்பிக்கையுடன் இருந்திருந்தால் லெனினும் ஒரு கற்பனாவாத சோஷலிஸ்ட்டாகியிருப்பார். மறுபுறம் அம்பேத்கர் நம்பிய முதலாளித்துவம் அவருக்கு துரோகம் செய்தது. அவரது முதலாளித்துவ சீர்திருத்தங்களை இந்திய பார்ப்பன தலைமை தன்னுடைய வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டது. அவரே சொன்னதுபோல் 'அவர்களுக்கு ராமாயணம் எழுத ஒரு வால்மீகி தேவைப்பட்டான், வால்மீகியைப் பயன்படுத்திக்கொண்டனர். அவர்களுக்கு சட்டம் எழுத அண்ணல் அம்பேத்கர் தேவைப்பட்டார், அவரையும் பயன்படுத்திக்கொண்டனர்.'
23You, Vchinnadurai Durai, Kanagu Kanagraj and 20 others
5 Comments
5 Shares
Like
Comment
Share
No comments:
Post a Comment