“கடவுளை ஏற்கமுடியாது “, “சனாதனத்தை நீக்கவேண்டும் “, “பார்ப்பனியத்தை அனுமதிக்க மாட்டோம் “, “பாரத் மாதா கீ ஜே என சொல்லக்கூடாது ” என பட்டியல் போடுகிறார், லீனா மீனாட்சி. அதனை ஆமோதித்து தலையசைக்கிறார், நடிகை கவுதமி. படத்தின் ஜீவனான உரையாடல்கள் நறுக்கப்படுகிறதே என்னும் வருத்தம் இருந்தாலும், அவர்களை அவ்வாறெல்லாம், ‘முழங்க ‘ வைத்ததற்காக மனதிற்குள் மகிழ்ச்சியடைகிறார், இயக்குனர்.
அரசின் லஞ்சக் கலாச்சாரத்தை அம்பலப்படுத்தக் கூடாது, கார்ப்பரேட்டுகளை விமர்சிக்கக் கூடாது, மதவெறியைக் கண்டிக்கக் கூடாது, ரிசர்வ் வங்கியைக் குற்றவாளியாக்கக் கூடாது, ஒன்றிய அரசைக் குற்றவாளியென அறிவித்து தண்டிக்கக் கூடாது என்பன போன்ற, ‘கூடாதுகளால் ‘ பட்டியல் நிரம்பி வழிந்தது.
ஏறத்தாழ ஒருமணி நேர விவாதத்திற்குப் பிறகு, ஒரு முன்முடிவோடுதான் குழு செயற்படுகிறது என்பதை உணர்ந்து கொண்ட இயக்குனர், ‘பேசிப் பயனில்லை ‘ என்னும் முடிவுக்கு வருகிறார். ‘மக்கள் விரோத அரசியல் ‘, அதன் முகத்தைக் காட்டுகிறது என்பதைப் புரிந்து கொண்ட இயக்குனர், அண்ணல் அம்பேத்கர் புகைப்படத்தைக் காட்டக்கூடாது எனவும், திருக்குறளை உச்சரிக்கக் கூடாது எனவும், சாட்சியம் சொல்வதற்காக ஒரு அமைச்சரை நேரில் அழைக்கும் அதிகாரம் வழக்காடு மன்றத்திற்கு இல்லை எனவும் சொல்லப்பட்டபோது அதிர்ச்சியடைகிறார். தணிக்கைக் குழுவின் ஆணவத்தை எதிர்த்து, ஆவேசமாக, கேள்விகளை எழுப்புகிறார். ஆனாலும், அவர்கள், அவர்களின் நிலையிலிருந்து மாறவில்லை.
ஒருவழியாக, படம், குதறப்பட்டு விட்டது. முன்பு, வெளிப்படையாகத் தடை விதிக்கப்பட்டது. இப்போது, மறைமுகமாகத் தடை விதிக்கப் பட்டிருக்கிறது. அதாவது, வெளியிட இயலாத நிலைக்கு படம் சீரழிக்கப்பட்டு விட்டது.
ஒருசில நாட்களுக்கு முன்புதான், டெல்லியில் இயங்கி வந்த திரைப்படத் தணிக்கைத் தீர்ப்பாயத்தைக் (ட்ரிபூனல்) கலைத்திருந்தது, மோடி அரசு. அதன்மூலம், படைப்பாளிகளின் இறுதி நம்பிக்கை அழிக்கப்பட்டது. மறுஆய்வுக் குழுவின் முடிவினை ஏற்கவில்லையெனில், வழக்காடு மன்றத்திற்குப் போவதுதான், இப்போதைய சூழலில் இருக்கும் ஒரே வாய்ப்பு. வழக்கு நடத்தினால் வெற்றி உறுதி என்றாலும், காலக்கெடு ஏதுமற்ற இந்த வழியில் பயணிப்பதற்கான வலிமை, திரைப்பட நிறுவனத்திற்கு இல்லை. எனவே, வெட்டுகளைக் குறைப்பதற்கான ஆதாரங்களையும் ஆவணங்களையும் கொடுப்பதாக சொல்லிவிட்டு, ‘கலந்தாய்வு ‘ அறையிலிருந்து வெளியேறுகிறார், இயக்குனர்.
பிறகு, முப்பத்து ஐந்து பக்கங்களில் காட்சிகளுக்கான ஆதாரங்களும் ஆவணங்களும் கொடுக்கப்படுகிறது. சில, ஏற்கப்படுகின்றன. சில, நிராகரிக்கப் படுகின்றன. இறுதியாக, நூற்றுக்கும் அதிகமான வெட்டுகள், இருபத்து நான்கு வெட்டுகளாகக் குறைக்கப்படுகிறது. பதினைந்து நிமிடங்களுக்கான படத்தின் நீளத்தை, விழுங்கி ஏப்பம் விடுகிறது, தணிக்கை முதலை.
இப்படியாக, தணிக்கை வாரியம் பலிகொள்ளவிருந்த ஒரு திரைப்படம் உயிரோடு மீட்கப்பட்டது. ‘மீட்கப்பட்டது ‘ என்னும் ஒரு சொல்லுக்குள் அடங்கியிருக்கும் பாடுகள் ஏராளம். இந்திய மக்களுக்கு அரசியல் சாசனம் அளித்திருக்கும் அடிப்படை உரிமையான கருத்துரிமையை மறுக்கும் பாஜக அரசின் வன்முறைக்குப் பொருத்தமான சாட்சியம்தான், அந்தப் பாடுகள்.
முன்கதைச் சுருக்கம் :
நவம்பர் 8, 2016, இரவு 8 மணிக்கு, தொலைக்காட்சிகளில் தோன்றிய இந்திய ஒன்றிய முதன்மை அமைச்சர் நரேந்திர மோடியின் வார்த்தைகளிலிருந்து பிறந்ததுதான், ‘
அதுமட்டுமல்ல. இந்தப் படத்தில், ஆபாசம் மற்றும் கவர்ச்சி இருக்காது, ரத்தம் தெறிக்காது, இரட்டை அர்த்த உரையாடல்கள் கிடையாது, மது இல்லை, புகை இல்லை, சமூகத்தைச் சீரழிக்கும் அம்சங்கள் எதுவுமே இல்லை. இத்தகைய, ‘ இல்லாமைகள் ‘ பாஜக-வினரின், அதாவது, தணிக்கையாளர்களின் கண்களை உறுத்தியிருக்க வேண்டும். பொழுதுபோக்குக்காக அல்லாமல், பொழுதின் மதிப்பினைக் கூட்டும் படம் என்பதால், மக்களுக்குத் திரையிடும் அனுமதியை அளிப்பதற்கு, ஆட்சியாளர்கள்- தணிக்கை வாரியத்தினர் தயங்கியிருக்க வேண்டும். இத்தகைய, கருத்துரிமை மீதான வன்முறைத் தாக்குதலை முறியடித்து, ஆதிக்கவாதிகளின் தடைகளைத் தகர்த்து மக்களிடம் விரைந்து வரவிருக்கிறது, ‘2000’. ஃபீனிக்ஸ் திரைப்படைப்பகம் தயாரித்திருக்கும் இப்படத்தின் இயக்குனர், ருத்ரன்.
ஒரு முக்கிய குறிப்பு:
பொதுவாக, தணிக்கைச் சான்றிதழ்களின் இறுதியில், மண்டல அலுவலரின் கையொப்பம் இடப்படும். தமிழ் திரைப்பட வரலாற்றில், முதன்முறையாக, தணிக்கைச் சான்றிதழில் இரண்டு இடங்களில் மண்டல அலுவலரின் கையொப்பம் இடம்பெற்ற படம் என்னும் சிறப்பினை, ‘2000’ பெற்றிருக்கிறது. படத்தின் தலைப்பில் உள்ள, ‘ ரூபாய் ‘ என்பதைக் குறிக்கும், ‘
‘ என்னும் குறியீட்டினை அச்சில் அமைக்க முடியவில்லை எனக் கூறிய தணிக்கை வாரியம், ‘தீவிர யோசனைக்குப்’ பிறகு, பேனாவில் எழுதியது. அதனால், அந்த இடத்திலும் மண்டல அலுவலரின் கையொப்பம் இடப்பட்டது. கூடவே, தணிக்கை அலுவலகத்தின் முத்திரையும் வைக்கப்பட்டது. இந்தக் கூடுதல் கையொப்பமும் முத்திரையும் இடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதை, அநீதி இழைத்த தணிக்கை வாரியத்திற்கு, ‘
2000’ திரைப்படம் வழங்கிய தண்டனையாகவே கருதவேண்டியிருக்கிறது.
கட்டுரையை எழுதியவர் படத்தின் இயக்குநர் ருத்ரன்
நிலவும் சமுதாயத்தில்
ReplyDeleteசமூகமாற்றத்திற்க்கான
சிந்தனைகூட பெரும் போராட்டமே
வாழ்த்துகள்