நக்ஸல்பாரி ஒரு கிராமத்தின் பெயர் மட்டுமல்ல- 2 வது பாகம். உயிர்மை இதழில் வந்த கட்டுரை.

 அதிகாரி ஆக்ரோஷமாக பிஸ்டலை எடுத்து என் வாய்க்குள் சொருகினார். ‘தேவடியா பசங்களா! நக்சலைட்டா நீங்க? சுட்டுக் கொன்னு ஜவ்வாது மலக் காட்டுல பொணத்தை வீசிட்டு என்கவுண்டர் கணக்குல எழுதிடுவேன்”

கலவரக் கும்பலில் இருந்தவர்களைப் போலவே உயரம் உடற்கட்டும் கொண்டிருந்த நால்வர் எங்களை விசாரித்தனர். எங்களை வயிற்றிலும் முதுகிலும் சரமாரியாகக் குத்தினர். முகத்தில் ரத்தம் வழிய கீழே விழுந்தவர்களை நால்வரும் சுற்றி நின்று பூட்ஸ்கால்களால் மிதித்தார்கள். உதைத்தார்கள். கை கால் முதுகு என உடல் முழுவதும் ரத்தம் வழிந்தது. வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருப்பதை உணர்ந்தேன்- செம்பூழுதி ப் பாதையில் - வெ ஜீவ கிரிதரன்.
நக்ஸல்பாரி ஒரு கிராமத்தின் பெயர் மட்டுமல்ல- 2 வது பாகம். உயிர்மை இதழில் வந்த கட்டுரை.
சாம்பலிலிருந்து
தியாகிகளே தியாகிகளே
விடுதலைக்கு உயிர் கொடுத்த உங்கள் அனைவருக்கும்
எங்கள் செவ்வணக்கம்
கல்கத்தா தெருக்களிலும்
சிரிகாகுள மலைகளிலும்
தருமபுரி வட ஆர்காட்டில் நீங்கள் சிந்திய
ரத்தம் வித்தானது.
எங்களோட பிள்ளைகட்கும்
எங்கள் தம்பி தங்கையருக்குக்
உங்கள் கதைகளை போதிப்போம்
உங்கள் வழியின் நடக்க வைப்போம்.
விவசாயிகள் தொழிலாளர்கள்
அறிவாளிகள் மாணவர்கள்
துப்பாக்கியைத் தூக்குகின்றனர்
வர்க்கப் போராட்டத்தில் நிற்கின்றனர்
ரத்த வெள்ளம் ஓடினாலும்
நாட்டை நாங்கள் விடுவிப்போம்
அனைவரும் விடுதலை அடைகின்ற வரையிலும் ஆயுதத்தை
நாங்கள் ஏந்தி நிற்போம்
போர் ஆயுதத்தை நாங்கள் ஏந்தி நிற்போம்.
வால்டர் தேவாரம் தலைமையில் நடந்த நக்சல் ஒழிப்பு ஆபரேஷன் அஜந்தாவுக்குப் பிறகு தர்மபுரி பகுதிகளில் மிகவும் பிரபலமாக இருந்த மாவோயிஸ்டு கட்சியின் பாடல்.
1980ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் 6 ஆம் தேதி
திருப்பத்தூர் போலீசார் காலை 4.30 மணிக்கு ஏலகிரி கிராமத்தில் தேடுதல் வேட்டை நடத்தி கிராம மக்கள் மூவரை பேரை நக்சலைட்டுகள் என்று குற்றஞ்சாட்டிக் கைது செய்தனர். போலீசார் அட்டகாசமான நக்ஸல் அறுவடை, ஒரே இடத்தில் மூன்று பேரைக் கைது செய்து விட்டோம் என்று தலைமைக்குத் தகவல் கொடுத்தனர். கைது செய்யப்பட்டவர்களின் ஆடைகளை உள்ளாடை வரை களைந்து, கைகளை பின்புறம் முறுக்கிக் கட்டினர். அவர்களை ஒரு அம்பாசிடர் காருக்குள் திணித்து பின் சீட்டில் கால் வைக்குமிடத்தில் படுக்கப்போட்டு, அவர்கள்மீது கால்களை வைத்து மிதித்தபடி மூன்று போலீசார் உட்கார்ந்துகொண்டனர். முன்சீட்டில் இன்ஸ்பெக்டரும், ஒரு கான்ஸ்டபிளும், போலீஸ் டிரைவரும் இருந்தனர். போலீஸ்காரர்கள் அத்தனைபேரும் தலைமுதல் கால்வரை ஆயுதம் தாங்கியிருந்தனர். கார் திருப்பத்தூர் நகரை நெருங்கிக் கொண்டிருந்தது. சரியாக ஆறு முப்பது மணிக்கு திருப்பத்தூர் காவல் நிலையாம் அருகே அம்பாசிடர் காருக்குள் ஒரு நாட்டு வெடிகுண்டு வெடித்தது. மூன்று போலீசாரும் ஒரு கைதியும் உயிரிழந்தனர்.
போலீஸ் தரப்பு, பிடிபட்ட நக்ஸலைட்டுகளில் ஒருவரான சிவலிங்கம் தனது உள்ளாடையில் ஒரு நாட்டு வெடிகுண்டை ஒளித்து வைத்திருந்தார், அதை எடுத்து முன்சீட்டில் இருந்த போலீஸ்காரர்கள் மீது வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார் என்று அறிவித்தனர். பின்பு இச்சம்பவம் குறித்து ஆய்வு செய்த மக்கள் உரிமைக் கழகம், பியுசிஎல் போன்ற அமைப்புகளின் மனித உரிமை ஆர்வலர்கள் இவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறினர். கைது செய்யப்படுபவர்களை முழுவதும் நிர்வாணமாக்கி, அல்லது வெறும் உள்ளாடையோடு மட்டும் நிறுத்தி சோதிப்பது போலீஸ்காரர்களின் வழக்கம். பின்பு கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு தரையில் உட்கார்ந்து எழும்படி உத்தரவிடப்படுவார்கள். இவ்வாறு செய்யும்போது ஆசனவாயில் ஏதாவது வெடிப் பொருட்களை செருகி வைத்திருந்தால் அது வெளியே வந்துவிடும். பின்பு கைதிகளின் கைகளை முறுக்கிப் பின்னால் கட்டி கொண்டு செல்வதே காவலர்களின் வழக்கம். இந்த சம்பவத்திலும் அதுவே நடந்தது என்று ஏலகிரி கிராம மக்கள் தெரிவித்தனர்.
கைகள் கட்டப்பட்டு நிர்வாணநிலையில் மிதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கைதிகளால் குண்டை எடுத்து முன் சீட்டில் வீசுவது சாத்தியமே இல்லை என்ற முடிவிற்கே இச்சம்பவத்தை ஆராய்ந்த செய்தியாளர்களும், வழக்குரைஞர்களும் வந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக குண்டை வீசியதாகச் சொல்லப்படும் நக்ஸலைட் தலைவர் சிவலிங்கம் ஏலகிரி கிராமத்தில் கைது செய்யப்படவேயில்லை என்று அந்த கிராம மக்கள் திட்டவட்டமாக்த் தெரிவித்தனர். நயினார் என்ற நிலப் பிரபுவின் கொலைவழக்கில் தேடப்பட்டுவந்த நக்ஸலைட் பெருமாள், அவருக்கு ஓரிரவு தங்க இடம் கொடுத்த பதின்ம வயது சிறுவன் செல்வம், பக்கத்து வீட்டுக்காரரான ராஜப்பா என்ற பீடித் தொழிலாளி ஆகியோர் மட்டுமே தங்கள் கிராமத்தில் கைது செய்யப்பட்டனர் என்று மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
குண்டு வெடிப்பில் ராஜப்பா காரிலும், மற்ற இருவரும் மருத்துவமனையிலும் இறந்து போனதாக அறிவிக்கப்பட்டது. அவர்களின் மரணத்திற்கான காரணம் மர்மமாகவே உள்ளது என்று இந்தியா டுடே குறிப்பிட்டது. (India today seven alleged naxalites killed in so called encounters in Tamilnadu).
இந்த மூவரையும் சுட்டுக்கொன்று அவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகளைக் கைப்பற்றியதாகக் கணக்குக் காட்ட போலீசாரே நாட்டு வெடுகுண்டுகளைக் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்றும் அதை தற்செயலாக வெடித்திருக்க வேண்டும் என்றும் கருதப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டரின் தொடை சதை பிய்த்து எறியப்பட்டிருப்பதால் அவர் தனது கால் சட்டை பாக்கெட்டில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்திருக்க வேண்டும் அல்லது வெடிகுண்டு இருந்த பையை மடியில் வைத்திருந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது.
எம்.ஜி.ஆர். அரசு கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் உடலின் மீது அவரது மனைவி புரண்டு அழும் காட்சியைப் புகைப்படமாக எடுத்து மாநிலம் முழுவதும் சுவரொட்டியாக ஒட்டியது. இன்ஸ்பெக்டரின் குழந்தையின் பெயரான அஜந்தாவின் பெயரால் நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையைத் தொடங்குவதாக அறிவித்தது. டி ஜி பி மோகன்தாஸ் இந்த நடவடிக்கையின் பின்னணியில் இருந்து தாக்குதல் நடவடிக்கைகள், உளவு நடவடிக்கைகள், இவற்றுக்குத் தேவையான ஆயுதங்கள், பணம், ஆட்கள், பயிற்சி போன்றவற்றை ஒருங்கிணைத்தார். வால்டர் தேவாரம் நேரடியாகக் களத்தில் இறங்கி ஒவ்வொரு கிராமமமாகச் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டைகளை நடத்தினார். இந்த அனுபவங்களை பின்பு வீரப்பன் வேட்டையில் இன்னும் குரூரமான முறையில் பயன்படுத்தினார் அவர்.
அதற்கு சில காலம் முன்பு ஆந்திர மாநிலத்தில் நடந்த நக்சல் வேட்டைகளில் 380 நக்சலைட்டுகள் கொல்லபட்டதாக ஆந்திர மாநில போலீஸ் அறிவித்திருந்தது. ஆனால் ஒரு போலீஸ்காரர் கூட கொல்லப்படவோ காயம்படவோ இல்லை. அதே பாணியில் ஆபரேஷன் அஜந்தாவை நடத்த எம் ஜி ஆர் தலைமையிலான அதிமுக அரசும் மாநில அதிகார வர்க்கமும் திட்டமிட்டன. தருமபுரி வட ஆற்காடு சேலம் மாவட்டங்களில் பெரும் போலீஸ் படையும், சிறப்பு அதிரடிப்படையும் குவிக்கப்பட்டன. பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள், தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள், வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் போலீசின் மீது குண்டுவீசியவர்கள் என்று கூறப்பட்டு குறைந்தது ஐம்பது பேர் போலி மோதல்களில் கொல்லப்பட்டனர்.
தருமபுரி முழுவதும் நன்கறியப்பட்டிருந்த இளம் போராளியான பாலனுக்கு செப்டம்பர் ஆறாம் தேதி சீரியம் பட்டி கிராமத்தில் கூட்டம் நடத்த காவல்துறை முறைப்படி அனுமதி வழங்கியிருந்தது. கட்சி பாலனை அந்த கூட்டத்திற்கு செல்லவேண்டாம் அவர் தலைமறைவு ஊழியர் அல்ல என்றாலும் நிலைமை ஆபத்தாக மாறிவருகிறது என்று கடுமையாக எச்சரித்தது. இந்த ஒரே ஒரு கூட்டத்திற்கு மட்டும் சென்றுவருகிறேன் என்று கிளம்பிச் சென்ற பாலன் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மேடையிலேயே கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். ஒருமணி நேரத்தில் இடதுகால் உடைந்து படுகாயமடைந்த நிலையில் தருமபுரி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்லாயிரம் மக்கள் மருத்துவமனையை சூழ்ந்து கொண்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக பின்பு சென்னை கொண்டு செல்லப்பட்டு அங்கே மருத்துவமனையில் செப்டம்பர் பனிரெண்டாம் தேதி மரணமடைந்தார்.
இந்தப் படுகொலைகளுக்கு எதிராக மக்கள் உரிமைக் கழகம் என்ற மனித உரிமை அமைப்பின் தலைவரும் புகழ்பெற்ற திருப்பத்தூர் வழக்குரைஞருமான பி வி பக்தவச்சலம் போராடி வந்தார். அவர்மீது தேசத் துரோக வழக்குகள் போடப்பட்டன. இந்நிலையில் தர்மபுரி வட ஆற்காடு மாவட்டஙக்ளில் நடந்து வரும் படுகொலைகளை பற்றி விசாரிக்க பி யூ சி எல் அமைப்பு சார்பாக ஒரு உண்மையறியும் குழு திருப்பத்தூர் வந்திருந்தது. அக்குழுவில் சென்னை வழக்குரைஞர் இப்ரஹீம், சூழலியல் செயல்பாட்டாளர் க்ளாட் ஆல்வாரிஸ், பத்திரிக்கையாளர் முகுந்த் சி மேனன், ஜோதி புன்வானி குழுவில் இடம்பெற்றிருந்தனர். குழு முதல்நாள் திருப்பத்தூர் மருத்துவர்கள், மக்கள் ஆகியோரைப் பேட்டியெடுத்தும், மருத்துவமனை ஆவணங்களைப் பார்வையிட்டும் தங்கள் விசாரணையைத் தொடங்கியது. போலீசார் உணமையறியும் குழுவுக்கு மக்கள் நடுவே கிடைத்த வரவேற்பைப் பார்த்து அதிர்ச்சியடைந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. மறுநாள் காலை குழுவுக்கு மோசமாக விடிந்தது.
‘திடீரென்று லாட்ஜுக்கு வெளியே பெருஞ்கூச்சல். ”நக்சலைட்டுகள் ஒழிக. நக்சல் தலைவன் வக்கீல் பக்தவச்சலம் ஒழிக” மாடியை நோக்கி சரமாறியாகக் கற்கள் வந்து விழுந்தன. லாட்ஜின் வாயிலை நிறைத்துக் கொண்டு நூற்றுக்கும் அதிகமானவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். மாடிப்படிகளிலும் ரிஷப்ஷனிலும் கலவரக்காரர்கள் நிறைந்திருந்தனர். கூட்டத்தைப் பிளந்து கொண்டு சில சீருடை அணிந்த போலீஸார் எங்களை நோக்கி வந்தனர்.
அதற்குள் கூட்டத்தினர் தாக்கியதில் உண்மையறியும் குழுவினர் சிலரின் கண்ணாடிகள் உடைந்தன. சிலருக்கு மூக்கிலும் வாயிலும் ரத்தம் வழியத் தொடங்கியது. கலவரக்காரர்கள் இரண்டு வரிசைகளாகப் பிரிந்து நிற்க போலீஸார் உணமையறியும் குழுவினரை நடுவே கொண்டு சென்றனர். இருபுறமும் இருந்த கலவரக்காரர்கள் உண்மையறியும் குழுவினரை ஓங்கி ஓங்கி முதுகிலும் முகத்திலும் குத்தினர். எதையும் தடுக்காத போலீஸார் குழுவினரை சாக்குப் பைகளைப் போல வேனுக்குள் தூக்கி வீசினர். குழுவினர் பலத்த காயங்களடைந்திருந்தனர்.
சிறுவர்களான நானும் ராஜாராமும் இரண்டாவது மாடிக்கு நழுவ முயன்றோம். அப்போது திடீரென்று முறுக்கு மீசையுடன் ஒரு பெரிய அதிகாரி நிறைய போலீசார் புடைசூழ வந்தார். (தேவாரம்)
“யார் நீங்க, இங்க என்ன பண்றீங்க” என்று மிரட்டும் தோரணையில் கேட்டார்.
நான் வக்கீல் பக்தவச்சலத்தின் மருமகன் என்ற உண்மையை உளறினேன்.
அதிகாரி ஆக்ரோஷமாக பிஸ்டலை எடுத்து என் வாய்க்குள் சொருகினார். ‘தேவடியா பசங்களா! நக்சலைட்டா நீங்க? சுட்டுக் கொன்னு ஜவ்வாது மலக் காட்டுல பொணத்தை வீசிட்டு என்கவுண்டர் கணக்குல எழுதிடுவேன்”
கலவரக் கும்பலில் இருந்தவர்களைப் போலவே உயரம் உடற்கட்டும் கொண்டிருந்த நால்வர் எங்களை விசாரித்தனர். எங்களை வயிற்றிலும் முதுகிலும் சரமாரியாகக் குத்தினர். முகத்தில் ரத்தம் வழிய கீழே விழுந்தவர்களை நால்வரும் சுற்றி நின்று பூட்ஸ்கால்களால் மிதித்தார்கள். உதைத்தார்கள். கை கால் முதுகு என உடல் முழுவதும் ரத்தம் வழிந்தது. வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருப்பதை உணர்ந்தேன்.
பின்பு எங்களை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றனர். எங்களை அடித்த கலவரக்காரர்களே போலீஸ்காரர்களாக ஸ்டேஷனில் இருந்தனர்” (செம்புழுதிப் பாதையில்- வெ. ஜீவகிரிதரன்).
திருப்பத்தூர் வந்திருந்த உண்மையறியும் குழு கலவரக்காரர்கள் போல வேடமிட்டிருந்த போலீஸ்காரர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு வட ஆற்காட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது. அன்றைய தினமே வழக்குரைஞர் பக்தவச்சலத்தையும் உள்ளூர் சமூக விரோதிகளைக் கொண்டு தாக்கிக் கொல்ல முடிவு செய்திருப்பதாக அவருக்குத் தகவல் வந்தது. பக்தவசலம் தன் மனைவி மக்களை வீட்டுக்குள் பூட்டி அவர்கள் கையில் வெட்டுக் கத்தியைக் கொடுத்து தாக்குபவர்களத் தாக்கும் படியும், போரிட்டு சாகும் படியும் சொல்லி விட்டுத் தான் மட்டும் வெளியே ஆயுதத்துடன் கலவரக்காரர்களை எதிர்நோக்கி நின்று கொண்டிருந்தார் என்கிறார் வெ. ஜீவகிரிதரன். ஆனால் கலவரம் செய்ய போலீஸார் ஏற்பாடு செய்திருந்தவர்கள் வக்கீலைத் தாக்க மறுத்ததால் அந்தத் திட்டம் அப்போதைக்குக் கைவிடப்பட்டது.
பின்பு வழக்குரைஞர் நீதிமன்றத்துக்கு காரில் செல்லாமல் நடந்து செல்லத் தொடங்கினார். அவர்கள் தன்னை லாரி மோதி கொன்று விட்டு விபத்து என்று நாடகமாடாமல் தடுக்க இவ்வாறு செய்தாராம். தன்னை கொல்ல வேண்டுமானால் ஆயுதத்துடன் நேராக வந்து கொல்ல வேண்டும். அது கொலை என்று எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பது பக்தவச்சலத்தின் நோக்கமாகவிருந்தது.
பக்தவச்சலம், சென்னை வழக்குரைஞர் இப்பரஹீம், சூழலியல் செயல்பாட்டாளர் க்ளாட் ஆல்வாரிஸ், பத்திரிக்கையாளர் முகுந்த் சி மேனன், ஜோதி புன்வானி போன்ற நாடு அறிந்த அறிவுத் துறையினருக்கு திருப்பத்தூர் நகரின் மையத்தில் இது நடந்தது என்றால் எட்டாக்கையிலுள்ள கிராமங்களில் கல்வியறிவற்ற, வெளியுலகத் தொடர்பு இல்லாத அப்பாவி மக்களுக்கும், அரசு இயந்திரத்தின் பரம விரோதிகளான நக்சலைட்டுகளுக்கும் என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்வது எளிது.
இந்த கொடூரமான கொலைவெறித் தாண்டவத்தில் பலியானவர்களில் அப்போது சிபிஐ எம் எல் மக்கள் யுத்தம் கட்சியின் ஊழியர்களும் அதிலிருந்து பிரிந்து சென்ற கண்ணாமணி குழுவினரும் இருந்தனர். ஆனால் அந்தக் கட்சிகளைச் சேராத இந்திய பொதுவுடமைக் கட்சி மாநில அமைப்புக் கமிட்டி என்ற இன்னொரு நக்சல் அமைப்பின் ஆதரவாளரான பி வி பக்தவச்சலமும் அவரது குடும்பத்தினரும் போலீஸ் அடக்குமுறைகளுக்கு எதிராக தோழர்களைப் பாதுகாக்க நின்றது இந்திய அளவில் புதிய முன்னுதாரணமாகும்.
----------------------------------
நக்சல்பாரி இரண்டாவது அலையின் உச்சகட்டம் தருமபுரி, சேலம், வட ஆற்காடு நிகழ்வுகள். தமிழ் நாட்டில் மாலெ இயக்கம் இந்த இடத்துக்கு வந்து சேர்ந்த வரலாற்றைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
எல். அப்பு என்றழைக்கப்பட்ட அற்புதசாமி கோவையில் ஏஐ டியுசி தொழிற்சங்கத்தின் மிக முக்கியமான தலைவராக இருந்தவர். முனிசிபல் தொழிலாளர் சங்கம், ஓட்டல் பணியாளர் சங்கம், மில் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பொறுப்பாளராகவும் இருந்து வந்தார்.
பின்பு ஒன்றுபட்ட பொதுவுடமைக் கட்சியின் போக்கில் அதிருப்தி அடைந்து ஏ கே கோபாலனின் ஆலோசனையின் பேரில் தீக்கதிர் இதழைத் தொடங்கினார். அது அப்போது வார இதழாகவே தொடங்கப்பட்டது. முதல் முறை கட்சி உடைந்த போது சிபிஎம் சென்ற கோவை தோழர்கள் நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு சிபிஐ எம் எல் அமைப்பில் இணைந்து கொண்டனர்.
இந்தக் காலகட்டத்தில் சி பி ஐ எம் கட்சியுடனான விவாதங்களுக்குப் பிறகு கோவை மாவட்டத்தில் மட்டும் 21 மாவட்டக் குழு உறுப்பினர்களில் 14 பேர் சிபிஐ எம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அப்பு, சாரு மஜும்தாரைச் செயலாளராகக் கொண்டிருந்த சி பி ஐ மா லெ அமைப்பின் மையக் குழு உறுப்பினரானார்.
அப்பு தமிழ்நாட்டில் சிபிஐ எம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தோழர்களை ஒருங்கிணைத்து தமிழ்நாடு ஒருங்கிணைப்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கினார். இது சி பி ஐ எம் எல் கட்சிக்கான அடித்தளமாக அமைந்தது. கோவையின் இன்னொரு புகழ்பெற்ற, வீரம்மிகுந்த பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத் தலைவரான கண்ணாமணி, சென்னை வழக்குரைஞரும் முன்னணி தொழிற்சங்க தலைவருமான ஏ எம் கோதண்ட ராமன் ஆகியோர் சிபிஐ எம் கட்சியை விட்டு வெளியேறியவர்களின் முதன்மையானவர்களாவார்கள். (தோழர் எல் அப்பு குன்றா பெருநெருப்பு- பாவல் இன்பன். கீற்று இணைய தளம்)
வர்க்க விரோதிகளின் ரத்தத்தில் கை நனைக்க வேண்டும் என்ற அன்றைய நக்சல்பாரி அரசியலுக்கு ஏற்ப தனிநபர் அழித்தொழிப்புகளில் கட்சி ஈடுபடத் தொடங்கியது. தஞ்சையிலும், உடுமலைப் பேட்டையிலும் வெறுக்கத்தக்க நிலப்பிரபுக்கள் சிலர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் 1970 ஆம் ஆண்டு அப்பு ஒரு தனியார் விடுதியில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. காவல்துறை அதை மறுத்தது. அப்பு ஆந்திரா கொண்டு செல்லப்பட்டு போலி மோதலில் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் அப்பாராவ் என்று பெயர் சூட்டப்பட்டு போலீசால் தகனம் செய்யப்பட்டு விட்டதாகவும் மூத்த தோழர்கள் நினைவு கூர்கின்றனர்.
மாலெ அமைப்பின் இன்னொரு முக்கிய தலைவரான கண்ணாக் குட்டி இயக்கத்திலிருந்து விலகிச் சென்று திமுகவில் இணைந்தார். அவரது தன்வரலாறான ”போராட்டம் என் வாழ்க்கை” நூலில் தான் ஒருபோதும் நக்சல் அரசியலை ஏற்றுக் கொண்டதில்லை என்றே குறிப்பிடுகிறார். (போராட்டம் என் வாழ்க்கை –கண்ணாக் குட்டி. பொன்னுலகம் பதிப்பகம்)
இருந்த போதிலும் பதினான்குமணி நேர வேலை, அற்ப கூலி, அரைப்பட்டினி என்று இருந்த கோவை தொழிலாளர்களின் வாழ்க்கையை தனது வீரம்மிக்க, தன்னலமற்ற போராட்டத்தின் மூலம் மாற்றிய கண்ணாக் குட்டியைத் தங்கள் அன்புக்குரிய தோழராகவே கோவை பாட்டாளி வர்க்கம் கொண்டாடி வந்தது. அவரது மரணத்தின் போது அவரது உடல் செங்கொடிகள் போர்த்தப்பட்டே அடக்கம் செய்யப்பட்டது. அவர் மனதளவில் கம்யூனிஸ்டாகவே வாழ்ந்தார் என்பதை உணர்ந்திருந்த உள்ளூர் திமுகவினரும் அதை ஆட்சேபிக்கவில்லை.
அப்புவின் மரனத்துக்குப் பிறகு ஏ எம் கே என்றழைக்கப்பட்ட கோதண்டராமன் மாலெ இயக்கத்தின் தமிழ்நாடு பிரிவுக்குச் செயலராகத் தோர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் 1973 ஆம் கைது செய்யப்பட்டார். சாரு மஜூதாரின் மரணத்துக்குப் பின்பு தோன்றியிருந்த பிளவுகள் கோதண்ட ராமனின் கைதுக்குப் பின்பு தமிழ் நாட்டில் தீவிரமடைந்தன.
இந்தியா முழுவதிலும் நடந்ததைப் போலவே தமிழ்நாட்டிலும் மார்க்சிய லெனினிய கட்சியானது மூன்று துண்டுகளாக உடைந்தது. புரட்சியானது பல கட்டங்களாக நடக்கும், இப்போது ஆயுதப் போராட்டம் நடத்துவதற் கான சூழ்நிலை இல்லை. எனவே பிரச்சாரத்தில் ஈடுபட்டு மக்களை புரட்சிக்குத் தயார் செய்ய வேண்டும் என்ற நிலையெடுத்த தமிழகத்தின் மேற்குப் பகுதியில் இயங்கிய தோழர்கள் மேற்கு பிராந்திய குழு என்றழைக்கப்பட்டனர். இந்தக் குழுவினர் பின்பு தங்களை இந்திய பொதுவுடமைக் கட்சி ( மா லெ ) (மாநில அமைப்புக் கமிட்டி) என்ற பெயரில் ஒரு கட்சியாக அமைத்துக் கொண்டனர். இது பிரச்சார கட்டம் என்பதால் மக்களிடம் பிரச்சாரம் செய்ய மக்கள் கலை இலக்கிய கழகம் – ம க இ க என்ற அமைப்பை ஏற்படுத்தினர். புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் போன்ற இதழ்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினர். பின்பு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் சங்கம், கீழைக் காற்று பதிப்பகம் போன்ற அமைப்புகளை நிறுவியது இந்தக் கட்சி. மாற்று ஊடகங்கள் என்ற முறையில் இக்கட்சியின் இதழ்களும், பதிப்பகமும், பாடல்களும் மிகப் பரந்த அளவில் மக்களைச் சென்று சேர்ந்தவையாகும். ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்திலும் மிக முக்கியமான பங்கு வகித்தது இந்தக் கட்சியால் தலைமை தாங்கப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பு.
சமீப காலங்களில் வேகமாக வளர்ந்து வந்த இந்தக் கட்சி அண்மையில் பெரிய பிளவைச் சந்தித்த பின்பு மறு சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆயுதப் போராட்டப்பாதையைத் தேர்ந்தெடுத்து அந்த வழியில் சென்று கொண்டிருந்தவர்களுக்கும், தேர்தல் பாதையில் இயங்கியவர்களுக்கும் நடுவே தனது தனித்தன்மையைக் காத்துக் கொண்டு ஒரு முக்கியமான வரலாற்றுத் தேவையை நிறைவு செய்தது இந்த அமைப்பு.
இதிலிருந்து பிரிந்து சென்ற ஒரு குழு 1983 இல் தன்னை இந்திய பொதுவுடமைக் கட்சி (மா லெ) (தமிழ்நாடு அமைப்புக் கமிட்டி) என்ற பெயர் சூட்டிக் கொண்டது. கேடயம் குழு என்ற அறியப்பட்டிருந்தது இந்த அமைப்பு. முதலில் ஈழப் போராட்டம் சரியல்ல. தமிழ் பாட்டாளியும் சிங்கள பாட்டாளியும் இணைந்து போராட்ட வேண்டும் என்பது போன்ற நிலைபாடுகள் கொண்டிருந்த இந்தக் கட்சி பின்பு இந்திய புரட்சி சாத்தியமில்லை, தனித் தமிழ்நாடே லட்சியம் என்று முடிவெடுத்து தமிழ்நாடு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி என்று பெயர் மாற்றிக் கொண்டது.
சாருவின் பாதையை அப்படியே பின்பற்றிய குழுவானது கிழக்கு பிராந்திய குழு என்றழைக்கப்பட்டது. இந்தக் குழு பின்பு வினோத் மிஸ்ரா தலைமை தாங்கிய லிபரேஷன் அமைப்புடன் இணைந்து தமிழ் நாட்டில் பெரிய மார்க்சிய லெனினிய அமைப்பாக மாறியது. இந்த அமைப்பானது தஞ்சை, நெல்லை தூத்துக்குடி, சென்னை, உளுந்தூர் பேட்டை பகுதியில் தீவிரமாக இயங்கியது. இந்தக் கட்சியினர் கூலி விவசாயிகள் சங்கம், ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் போன்ற என்ற மக்கள் திரள் அமைப்புகளை உருவாக்கினர். அதே நேரம் ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபட்டு அழித்தொழிப்புகளை நடத்தினர். பல்வேறு அழித்தொழிப்புகளில் ஈடுபட்ட லிபரேஷன் அமைப்பின் மச்சக்காளை போன்ற முன்னணி தோழர்கள் போலி மோதல்களில் கொல்லப்பட்டனர். இந்தியாவில் நடந்த மிகப் பெரிய தலித் படுகொலையான கீழ வெண்மணி தலித் படுகொலையை முன்னின்று நடத்திய கோபால கிருஷ்ண நாயுடுவை இந்த அமைப்பின் தோழர்கள் அழித்தொழித்தனர். லிபரெஷன் தற்போது தேர்தலில் பங்கெடுத்து வருகிறது. கட்சி தமிழ்நாட்டில் அண்மையில் பெரிய பிளவைச் சந்தித்தாலும் கட்சியின் தொழிற்சங்கமான ஏ ஐ சி சி டி யூ தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது.
----------------------------
தர்மபுரி, சேலம், வட ஆற்காடு தென் ஆற்காடு ஆகிய பகுதிகளில் இயங்கிய நக்சல்பாரித் தோழர்கள் தங்களைக் கூட்டக்குழு என்றழைத்துக் கொண்டனர். இந்தப் பிரிவு ஆந்திராவில் கொண்டப்பள்ளி சீத்தாராமைய்யா வந்தடைந்த முடிவுகளை தனது அனுபவத்தில் கண்டுகொண்டிருந்தது. ஆயுதப் போராட்டத்துடன் மக்கள் போராட்டங்களையும் நடத்த வேண்டும், மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கும் போராட வேண்டும், மக்களை அமைப்பாக வேண்டும் என்ற முடிவுகளுடன் இயங்கிய தோழர்கள் மக்கள் கூட்டமாக இணைந்து செயல்படுவதை முன்னிலைப் படுத்தியதால் கூட்டக் குழு என்றழைக்கப்பட்டனர்.
தமிழரசன், பாலன், சீராளன், தமிழ்வாணன், கண்ணாமணி போன்ற பல புகழ்பெற்ற போராளிகளைக் கொண்டிருந்த இந்த அமைப்பில் ஏராளமான இளைஞர்கள் இணைந்திருந்தனர். தனிநபர் அழித்தொழிப்பே ஒரே போராட்ட வடிவம் என்பதை இந்த அமைப்பு நிராகரித்தது. ஆயுதப் படைகள் மக்கள் போராட்டங்களிலிருந்தே உருவாக வேண்டுமென்ற முடிவுக்கும் வந்திருந்தது. தமிழரசன் இக்குழுவின் செயலராகவிருந்தார்.
பெரும் நிலப்பிரபுக்களின் அறுவடையைக் கைப்பற்றி மக்களுக்குப் பிரித்து அளிக்கும் இயக்கம் இந்த அமைப்பால் பல இடங்களில் நடத்தப்பட்டது. பணப்பயிர்களை இரவு நேரங்களில் கொள்ளையிட்டு விற்பனை செய்து மக்களுக்குப் பகிர்ந்து ஒரு முறை. அல்லது மக்களை திரட்டி இரவு நேரங்களில் அறுவடை செய்வது இன்னொரு முறை. வட ஆர்காட்டில் கண்ணாமணி தலைமையிலான குழு இவ்வகையான அறுவடையைக் கைப்பற்றும் இயக்கங்களை பெரிய அளவில் முன்னின்று நடத்தியது. தென் ஆற்காட்டில் புலவர் கலியபெருமாள் தலைமையில் மக்களை திரட்டிக் கொண்டு பகல் நேரங்களில் நேரடியாகச் சென்று அறுவடையை கைப்பற்றும் இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.
புலவர் கலிய பெருமாள் தென்னார்க்காட்டில் கரும்பு விவசாயிகளின் உரிமைக்கான போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.
கரும்பு தோட்டத்திலே ஏழை மக்கள் களை எடுக்கையிலே
கருக்கருவா போல சோகை கைகளைக் கிழிக்கும்
கசியும் வேர்வை காயத்தில் பட்டு கனலாய் எரியும்
உடம்பு தணலாய் தகிக்கும்
போன்ற அற்புதமான மக்கள் பாடல்கள் இந்தப் போராட்டங்களில் உருவாகி அந்தப் பகுதி முழுவதும் பெரும்புகழ் பெற்றன.
வட தமிழகத்தில் ஏரிகளில் கோடைகாலத்தில் நீர் வற்றும் போது மீன் பிடி திருவிழா நடக்கும். முதல்நாள் பெருந்தனக்காரர்கள் மீன் பிடிப்பார்கள். இரண்டாம் நாள் பாசனக்கட்டு விவசாயிகள் அதாவது இடைநிலைச் சாதிகளைச் சேர்தவர்கள் மீன் பிடிப்பார்கள். மூன்றாம் நாளே தலித்துகள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள். முதல் இரண்டு நாட்களில் நல்ல மீன்கள் பிடிக்கப்பட்டு அசரை எனப்படும் சிறு சிறு பொடி மீன்களே தலித்துகளுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் கிடைக்கும். அப்போது ஏரி கலங்கி மோசமான நிலையிலிருக்கும்.
கூட்டக் குழு சமத்துவ மீன் பிடிக்கும் போராட்டங்களை முன்னின்று நடத்தியது. தமிழரசன் இத்தகைய பல போராட்டங்களைத் தலைமை வகித்து நடத்தினார். முதல் நாளே திட்டமிட்ட முறையில் தலித்துகள் உட்பட அனைவரும் மீன் பிடிக்க வழி செய்தார். அதுவரை ஒதுக்கப்பட்டு வந்த வயதானவர்களும், ஊனமுற்றோருக்கு சரியான பங்கு பெற உதவினார்.
(தமிழ் நாட்டில் மாலெ கட்சி உடைந்த 1973 ஆம் ஆண்டிலிருந்து 1978 ஆம் ஆண்டுவரை கூட்டக் குழுவிலும், லிபரேஷன் அமைப்பிலும் என்ன நடந்தது என்பது பற்றி கால வரிசையில் தெரிந்து கொள்ள எழுத்து பூர்வமான பதிவுகள் கிடைப்பதில்லை. நூல்கள் எதுவும் எழுதப்பட்டது போலவும் தெரியவில்லை. எனவே தோழர்களுடனான உரையாடல்களிலிருந்தே வரலாற்றை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. படிக்கும் நண்பர்கள் இது முழுமையான வரலாறு அல்ல என்பதை மனதில் கொண்டே படிப்பார்கள் என்று நம்புகிறேன்)
நக்சல்பாரி எழுச்சி தோன்றிய காலகட்டத்தில் தோழர் ஏ எம் கே சென்னையில் வளர்ந்து வந்த இளம் தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். டன்லப், டி ஐ சைக்கிள், டி வி எஸ் போன்ற தொழிற்சாலைகளில் நிர்வாகங்களின் அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்களை சமூக விரோதிகளைக் கொண்டு தாக்குவது வழக்கமாகவிருந்தது. இந்த வன்முறைக்கு எதிராக தொழிலாளர்களும் திருப்பித் தாக்கினர். ஒவ்வொரு தெருவிலும் சண்டைகள் நடந்தன. இந்த அடக்குமுறைகளை தொழிலாளர்கள் வெற்றி கொண்டனர். இவற்றின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்த ஏ எம் கே இத்தகைய சூழலை எதிர்கொள்ளத்தக்க போர்க்குணமிக்க ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அவசியம் என்ற முடிவுக்கு வந்திருந்தார்.
நக்சல்பாரியின் அழைப்பை ஏற்று சிபிஐ எம் கட்சியிலிருந்து வெளியேறி அப்பு போன்ற தோழர்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் மாலெ இயக்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். அப்பு கொல்லப்பட்ட பிறகு 1973 வரை கட்சியை நடத்தினார். பின்பு கோதண்ட ராமன் ஒரு கொலை வழக்கில் சேர்க்கப்பட்டு பத்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். நீதிமன்றங்களைப் புறக்கணிக்க வேண்டும், வக்கீல் வைத்து வழக்கு நடத்தக் கூடாது. சிறையை உடைத்தே வெளியே வர வேண்டும் என்பது அப்போதைய எம் எல் கட்சியின் நிலைபாடாக இருந்தது. ஆனால் ஏம் எம் கோதண்ட ராமன் கட்சியின் நிலைக்கு எதிராக வழக்குரைஞர் மூலம் தன் வழக்கை நடத்தினார் என்ற விமர்சனம் அவர் மீது எழுந்தது. அவர் வழக்குரைஞரை அமைர்த்தவில்லை. அவர் மீது அன்பு கொண்ட வழக்குரைஞர் ஒரு அவருக்காக அவரது அனுமதி இல்லாமலேயே நீதிமன்றத்தில் வாதாடினார் என்று தியாகு சுவருக்குள் சித்திரங்கள் நூலில் கூறுகிறார். வழக்கின் இறுதியில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 313ன் கீழ் அவரிடம் நீங்கள் இந்தக் கொலையை செய்தீர்களா என்று கேட்ட போது நாங்கள் தான் செய்தோம், அது எங்கள் கடமை என்று கோதண்ட ராமன் பதிலளித்ததாக தியாகு குறிப்பிடுகிறார். அடிப்படையான விஷயம் என்னவெனில் கோதண்ட ராமன் போன்ற தோழர்கள் நீதிமன்றங்களை புறக்கணிப்பது போன்ற அதிசாகசவாத நடவடிக்கைகளின் மேல் அதிருப்தி கொண்டிருந்தனர் என்பதை இந்த வழக்கு காட்டியது. பின்பு எல்லா மா லெ இயக்கங்களின் தோழர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நீதிமன்றப் புறக்கணிப்பைக் கைவிட்டனர். ஆனால் அதற்கு முன்பு கைதான தியாகு, கலிய பெருமாள் போன்ற பல தோழர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து தூக்கு தண்டனை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது பின்பு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. ஒரு வேளை இந்தத் தோழர்கள் வழக்கு நடத்தியிருந்தால் இத்தனை ஆண்டுகள் சிறையிலிருந்திருக்க வேண்டிய நிலை வராமலும் இருந்திருக்கக் கூடும்.
அவசர நிலை விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஜனதா அரசு பல அரசியல் கைதிகளை விடுதலை செய்தது. அப்போது கோதண்டராமனும் விடுதலை செய்யப்பட்டார்.
அவர் சிறை சென்ற போது ஒன்றாக இருந்த கட்சி இப்போது மூன்றாக இயங்கிக் கொண்டிருந்தது. கோதண்டராமன் அப்போது வீச்சாக இயங்கிக் கொண்டிருந்த கூட்டக் குழுவினருடன் இணைந்து கொண்டார். அதே நேரம் ஆயுதப் போராட்டத்தைக் கைவிடாமல், மக்கள் திரள் அமைப்புகள் கட்டுதல், நீதிமன்றம் போன்ற சட்டரீதியிலான அமைப்புகளைப் பயன்படுத்துதல், பாராளுமன்ற அரசியலைப் புறக்கணித்தல், தேவை ஏற்பட்டால் மட்டுமே தாக்குதல் நடத்துவது, வாய்ப்புக் கிடைத்த இடங்களில் எல்லாம் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடாமல், அரசு அமைப்புகள் பலவீனமாக இருக்கும் காட்டுப் பகுதிகள், தொலைதூர கிராமப்புறங்கள் ஆகியவற்றில் ஆயுதப் போராட்டத்துக்கான தளம் அமைக்க திட்டமிட்ட முறையில் வேலை செய்தல் ஆகிய முடிவுகளுக்கு வந்து சேர்திருந்த கொண்டபள்ளி சீத்தாராமைய்யா இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு மாலெ அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஒருக்கிணைப்புக்கு முயன்று வந்தார்.
கொண்டபள்ளி சீத்தாராமைய்யா குழுவும், தமிழ் நாட்டு கூட்டக் குழுவும் இணைந்து சிபிஐ (எம் எல்) (மக்கள் யுத்தம்) என்ற கட்சியை உருவாக்கின.
இந்த அமைப்பு தர்மபுரி, வட ஆற்காடு, சேலம் மாவட்டங்களுக்கு விரிந்து பரவியது. ஆயுதப் போராட்டமாகவும் இல்லாமல், அதே நேரம் குறிப்பிட்ட இடங்களில் கூடிக் கலையும் அடையாளப் போராட்டமாகவும் இல்லாமல் போர்க்குணமிக்க போராட்டங்கள் நடத்தப்பட்டன.
தர்மபுரி மாவட்டம் முழுவதும் மக்கள் கந்து வட்டிக் கொடுமையால் அவதிப்பட்டு வந்தனர். தங்களுக்குச் சொந்தமான சொற்ப நிலத்தையும், பண்ட பாத்திரங்களையும் அடகு வைத்து பணம் பெற்றுக் கொண்டு விஷம் போலும் ஏறும் வட்டியைக் கொடுக்க முடியாமல் சொத்துக்களையும், வாழ்க்கையையும் இழப்பது வழக்கமாகவிருந்தது.
மக்கள் யுத்தக் கட்சியின் முன்னணி அமைப்பான முற்போக்கு இளைஞரணி தோழர்கள் ஊர் மக்களை ஊர்வலமாக அழைத்துச் வட்டிக்காரர்களை இழுத்து வந்து அடமானப் பத்திரங்களைக் கைப்பற்றி கிழித்து எறிவதை ஒரு இயக்கமாகவே நடத்தினர்.
சந்தைகளில் விற்பனை செய்வதற்கான பொருட்களை தலைச்சுமையாகக் கொண்டு வரும் விவசாயிகளிடம் பெரிய தொகை கட்டணமாக வசூலிக்கும் முறை இருந்து வந்தது. இடைவிடாத போராட்டங்களின் விளைவாக கட்டணம் குறைக்கப்பட்டது. விவசாயப் பொருட்களை குறைந்து விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று வந்த கமிஷன் மண்டிகளின் ஆதிக்கம் தகர்க்கப்பட்டது.
நிலப்பிரச்சினைகள் மக்கள் நீதிமன்றங்களில் சுமுகமாகத் தீர்க்கப்பட்டன. இது குறித்து ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. ஒரு விவசாயி தனது நிலப்பிரச்சினைக்கு தீர்வு கோரி குறி சொல்பவரை அணுகினாராம். குறிசொல்பவர் அவரை நாயக்கன் கொட்டாய் சென்று தோழர்களைப் பார்க்கும் படி குறி சொன்னாராம்.
உயர் சாதிகளைச் சேர்ந்த கந்து வட்டிக்காரர்கள், நிலப்பிரபுக்கள் மக்கள் நீதிமன்றங்களில் நிறுத்தப்படும் போது விசித்திரமான சூழல்கள் ஏற்பட்டன. ஒருமுறை சில செங்கல் சூளை முதலாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி பத்து தோப்புக் கரணம் போட வேண்டும் என்ற தண்டனை விதிக்கப்பட்டது.
முதலாளிகள் தாங்கள் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் செலுத்திவிடுவதாகவும், தோப்புக் கரண தண்டனையை ரத்து செய்யும் படியும் கோரினர். மக்களில் சிலர் அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று விருபிய போது நக்சல் தோழர்கள் தோப்புக்கரண தண்டனையின் அவசியத்தை விளக்கினர். நிலப்பிரபுக்களின் போலி கௌரவத்தையும், பரம்பரை திமிரையும் ஒடுக்க இந்த தண்டணை தேவைப்படுகிறது. அதானாலேயே பணத்தை இழந்தும் உடல்ரீதியிலான தண்டனைகளைத் தவிர்க்க இவர்கள் விரும்புகின்றனர் என்று விளக்கினர். பின்பு தண்டனை செயல்படுத்தப்பட்டது.
மக்கள் நீதிமன்றங்கள் முற்றிலும் அமைதியாகவும் நடந்து விடவில்லை. வர்க்க விரோதிகளைஅழித்தொழிப்பது மட்டுமே ஒரே போர்முறை என்பதை மக்கள் யுத்தக் கட்சி ஏற்றுக் கொள்ளா விட்டாலும் போராட்டங்களின் தீவிரம், மக்கள் விரோதிகளின் மூர்க்கம் ஆகியவற்றின் காரணமாக ஆங்காங்கே அழித்தொழிப்புகள் நடக்கவும் செய்தன.
பெரிய செட்டி என்ற ஒரு வட்டிக்காரர் மக்களின் ரத்தத்தை எலும்புவரை உறிஞ்சுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்தப் பகுதி முழுவதும் மிகத் தீவிரமாக வெறுக்கப்பட்டவர் இவர். இவர் மக்கள் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டு பொதுமக்களால் தீர்ப்பளிக்கப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டார். கட்சி செயல்பட்ட இடங்களில் எல்லாம் இந்தப் போராட்டங்கள் மக்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்தது.
வேறு சில இடங்களிலும் நிலப்பிரபுக்களும், கள்ளச்சாராயக் காரர்களும், கந்துவட்டிக்காரர்களும், கொத்தடிமைகளை வைத்திருந்தவர்களும் எதிர்த்துப் போராட முன்ற போது தவிர்க்க இயலாத விதத்தில் கட்சியால் கொல்லப்பட்டனர்.
அதே நேரம் தேனீர் கடைகளில் இரட்டை குவளை முறை போன்றவற்றை ஒழிக்கும் நடவடிக்கைகள் மிகுந்த கவனத்துடன் நடைபெற்றன. சாதாரண மக்களைப் போலவே வருமையிலிருக்கும் இந்த சிறுகடைக்காரர்கள் முதலில் எச்சரிக்கப்பட்டனர். பின்பு உள்ளூர் இடைநிலைசாதியினர், தலித்துகள் அடங்கிய ஊர்வலம் நடத்தப்பட்டு தனிக்குவளைகள் ஒழிக்கப்பட்டன.
கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி பெற தோழர்கள் செல்லும் போதும் மக்கள் கூட்டமாக இணைந்து கொள்ள அவை ஊர்வலங்களாக மாறின.
மூன்று மாவட்டங்களில் மக்கள் யுத்தக் கட்சியின் வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஆளும் வர்க்கத்தினர் நக்சல்களை ஒடுக்க தீவிர நடவடிகை எடுக்கும் படி அப்போதை ஆளும் கட்சியான அதிமுகவுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வந்தனர். அரசும், அதிகார வர்க்கமும், காவல்துறையும் மக்கள் யுத்தக் கட்சி முன்னேறுவதை கவலையும் பார்த்துக் கொண்டிருந்தனர். போட்டி அரசு நடப்பதாக வலதுசாரிகள் கூச்சலிட்டனர்.
மெல்ல மெல்ல நக்சல்பாரி அமைப்பின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களை அரசும் காவல்துறையும் ஒருங்கிணைத்து பதில் தாக்குதல்கள் நடத்தத் தொடங்கின. அதுவரை பெரும்பாலும் ஆயுதமில்லாமல் இயங்கிக் கொண்டிருந்த தோழர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வைத்துக் கொள்ள வேண்டுமென்றும், நெருக்கடி ஏற்படும் போது உயிருக்கு ஆபத்து இல்லாத இடத்தில் வீசி பீதி ஏற்படுத்தி விட்டு பின்வாங்கிவிடும் படியும் கட்சி அறிவுறுத்தியது. போலீஸுடனான நேரடி மோதல்களைத் தவிர்க்க கட்சி முயன்று வந்தது. கட்சி முழுமையாக ஆயுதப் போராட்டத்துக்குத் தயாராகாத நிலையில் அரச படைகளை நேரடியாக எதிர்கொள்ள வேண்டிய நிலை வந்தால் நக்சல்பாரி, கோபிபல்லப்பூர், போஜ்பூர், ஸ்ரீகாகுளம் பகுதிகளில் நிகழ்ந்ததைப் போன்ற பேரழிவு நடக்க வாய்ப்பிருந்தது என்பதை கட்சி உணர்ந்திருந்தது.
அதே நேரம் கட்சியும் அதன் முன்னணி அமைப்புகளும் முழுமையாகத் தலைறைவாகி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது என்ற கருத்தும் ஒருபிரிவினரிடையே இருந்தது. இந்த விவாதம் குறித்த திட்டவட்டமான தகவல்கள் இல்லை என்ற போதிலும் கட்சித் தலைமை இன்னும் வெளிப்படையாகச் செயல்பட வாய்ப்பு இருக்கிறது என்ற முடிவுக்கு வந்ததாக மூத்த தோழர்கள் கூறுகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் தான் ஏலகிரி கிராமத்திலிருந்து போலீஸ்காரர்கள் சென்ற காரில் குண்டு வெடித்தது. அரசு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த சம்பவம் நிகழ்ந்து விட்டது. தமிழ்நாட்டில் இதற்கு முன்கண்டிராத விதத்தில் வெறியாட்டம் தொடங்கியது. கிராமங்கள் துவம்சம் செய்யப்பட்டன. எண்ணற்றவர்கள் பெரும்பாலும் அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.
மக்கள் யுத்தக் கட்சி தமிழ்நாட்டில் போலீஸ் மீது எதிர்த்தாக்குதல் நடத்தவில்லை, அதே நேரம் தொடர்ச்சியான மக்கள் திரள் போராட்டங்கள், இயக்கத்தை இன்னும் விரிவாக எடுத்துச் செல்வது ஆகியவற்றின் மூலம் அடக்குமுறையை எதிர்கொண்டது. கலைஞர்கள், எழுத்தாளர்களை இணைத்து புரட்சிப் பண்பாட்டு இயக்கம் (பு ப இ) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பின்பு பெரும் புகழ் பெற்ற பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் இதில் அங்கம் வகித்தனர். செந்தாரகை, சமரன் போன்ற இதழ்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன. ஜனநாயக விவசாயிகள் சங்கம் போன்ற புதிய அமைப்புகள் கட்சியின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டு வளர்ச்சி பெற்றன. அடக்குமுறையை தமிழக அரசு தொடர்ந்து அதே வீச்சில் எடுத்துச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. மக்கள் யுத்தக் கட்சி மட்டுமே இந்த மூன்று மாவட்டங்களில் முப்பது தோழர்களை இழந்தாலும் கட்சியின் மக்கள் ஆதரவுத் தளம் வடகிழக்கு இந்தியாவில் நடந்ததைப் போல சிதைக்கப்படவில்லை. கட்சி அடக்குமுறையைக் கடந்துவிட்டது போலத்தான் தோன்றியது. ஆனால் பிரச்சினை வேறு இடத்திலிருந்திலிருந்து தோன்றியது.
இந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுவதிலும், ஈழத்திலும் தேசிய இனப்போராட்டங்கள் எழுச்சி பெற்றன. மக்கள் யுத்தக் கட்சி தமிழ் தேசிய இன விடுதலையைக் கணக்கில் கொள்ளவில்லை என்று கூறி தமிழரசனும், புலவர் கலியபெருமாளும் கட்சியை விட்டு வெளியேறி தமிழ்நாடு விடுதலைப் படையை அமைத்தனர். தென்னாற்காடு மாவட்டத்தில் கட்சி பலவீனப்பட்டது. தமிழக வரலாற்றில் முக்கிய இடம்பெற்று விட்ட முந்திரிகாட்டுப் போராட்டம் தொடங்கியது.
1984 வாக்கில் மக்கள் யுத்தக் கட்சியின் தமிழ் நாடு குழு, ஆந்திராவில் கட்சியில் முக்கிய தலைவராக இருந்த சத்திய மூர்த்தி, மஹாராஷ்ட்ரா கட்சியின் செயலராக இருந்த கோபட் காந்தி ஆகியோர் கொண்டபள்ளி சீத்தாராமைய்யாவுடன் முரண்பாடு கொண்டனர். இந்தப் பிளவு ஆந்திராவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் தமிழ்நாட்டில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
----------------------------------------------
சத்ய நாராயண் சிங் பிஹாரின் புகழ்பெற்ற நக்சலைட் தலைவராவார். 1968-69 ஆம் ஆண்டுகளில் பிஹாரில் முஷாஹரி பகுதியில் நடந்த விவசாயிகள் எழுச்சியை தலைமை வகித்து நடத்தினார். பல்லாயிரம் விவசாயிகள் பங்கு கொண்ட அந்த எழுச்சியானது பின்பு கெரில்லாப் போராட்டமாக மாறியது. அந்தக் காலகட்டத்திலிருந்தே சத்யநாராயண் சிங் சாரு மஜும்தாரின் தனிநபர் அழித்தொழிப்பு நடவடிக்கை மேல் அதிருப்தியும் விமர்சனமும் கொண்டிருந்தார். இது பயங்கரவாதம் என்று குற்றம் சாட்டினார். 1971 இல் சத்யநாராயண் சிங் தலைமையிலான தோழர்கள் போட்டி தலைமைக் குழு அமைத்து சாரு மஜும்தாரை கட்சியிலிருந்து வெளியேற்றியதாக அறிவித்தனர்.
சிங் ஜெயபிரகாஷ் நாராயணன் நடத்திய அவசர நிலை எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்தார். அவசர நிலைக்குப் பின்பு சிங்கின் நிலை மேலும் மென்மையடைந்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் செய்தார். இதெல்லாம் நக்சல் அரசியலில் நினைத்தே பார்க்க முடியாதவையாகும். அடுத்து சிங் தேர்தலில்களில் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தவும் செய்தார்.
---------------------------------------
போஜ்பூரில் மிகப் பெரிய எழுச்சியை நடத்தியது சி பி ஐ எம் எல் லிபரெஷன் கட்சி ஆகும். இதன் தலைவராக ஜோஹரும் மேற்கு வங்க செயலராக வினோத் மிஸ்ராவும் இருந்தனர்.
1970 ஆம் ஆண்டு இருபத்தி மூன்று வயதேயாகியிருந்த வினோத் மிஸ்ரா நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு துர்க்காபூர் கட்சிக்குழுவின் செயலரானார். அங்கு கைது செய்யப்பட்ட அவர் போலீசால் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு 1972 ஆம் ஆண்டு எந்த நிபந்தனையும் இல்லாமல், விசாரணை இல்லாமல் விடுதலை செய்யப்பட்டார். இது கட்சியில் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே பர்துவான் மாவட்டத்திலுள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் பணி செய்ய அனுப்பி வைக்கப்பட்டார். கட்சியில் ஏற்பட்ட பல பிளவுகளுக்கு பிறகு 1974 ஆம் ஆண்டு தோழர் ஜோஹருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். ஜோஹர், வினோத் மிஸ்ரா, ரகு ஆகியோர் இணைந்து சி பி எம் எல் லிபரேஷன் அமைப்பை உருவாக்கினர்.
இந்தக் கட்சியின் மேற்கு வங்க செயலராக வினோத் மிஸ்ரா இயங்கி வந்தார். அவரது தலைமையில் பல கெரில்லாக் குழுக்கள் உருவாகி செயல்பட்டு வந்தன. 1975ல் ஜோஹர் கொல்லப்பட்ட பிறகு வினோத் மிஸ்ரா கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1979 ஆம் ஆண்டு டார்ஜிலிங் மாவட்டத்தில் போலீசால் சுற்றி வளைக்கப்பட்டார். தொடர்ந்து நடந்த துப்பாக்கி சண்டைகளில் அமோல் என்ற முக்கிய தலைவர் கொல்லப்பட்டார். வினோத் மிஸ்ரா படுகாயப்படுத்தபப்ட்டாலும் நேமு சிங் என்ற கெரில்லா குழுத் தலைவர் போலிஸ் முற்றுகையை உடைத்து வினோத் மிஸ்ராவைக் காப்பாற்றினார்.
1976 ஆம் ஆண்டு லிபரேஷன் கட்சியானது ஆயுதப் போராட்டத்துடன் காங்கிரஸ் எதிர்ப்பு ஜனநாயக முன்னணியையும் உருவாக்கி இணைத்து நடத்த வேண்டும் என்ற நிலை எடுத்தது.
1977 ஆம் ஆண்டு லிபரேஷன் அமைப்பானது வெளிபடையாக இயங்கக் கூடிய இந்திய மக்கள் முன்னணி என்ற அமைப்பை உருவாக்கியது. முன்னணி அதன் முன்னணி அமைப்பாக இருந்தது. இதன் மூலம் கட்சி லிபரேஷன் கட்சி தலைமறைவுக் கட்சியாக இருக்க இந்திய மக்கள் ஜனநாயகவாதிகள், காங்கிரஸ் எதிர்புக் கட்சிகள், ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. காந்தியவாதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் இந்திய மக்கள் முன்னணியில் இணைந்தாலும், அரசியல் கட்சிகளிடையே இந்திய மக்கள் முன்னணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அது தனித்து வளர முடியாத நிலையில் கட்சியின் முன்னணி அமைப்பாகவே இருந்து வந்தது.
1992 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த பேரணியில் வினோத் மிஸ்ரா 25 ஆண்டுகால தலைமறைவு வாழ்க்கையைக் கைவிட்டு வெளியே வந்தார். இன்று லிபரேஷன் அமைப்பு இந்தியாவின் மூன்றாவது பெரிய இடதுசாரி கட்சியாகவுள்ளது. பிஹாரில் வலிமைவாய்ந்த அமைப்பாக இயங்கி வருகிறது. இன்றைய இந்திய சூழலில் இடதுசாரி கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் பரவலாக இயங்கும் அமைப்பாகவும், முக்கியமான தொழிற்சங்கங்களைக் கொண்ட அமைப்பாகவும் லிபரெஷன் உள்ளது.
---------------------------------
நக்சலைட் இயக்க வரலாற்றில் பஞ்சாபின் கதை விசித்திரமானது.
1970 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் தேதி ஜலந்தர் போலீஸ் தாங்கள் ஒரு நக்சலைட்டை சுட்டுக் கொன்று பெரிய தலைவர்களை கொல்லும் சதியை முறியடித்து விட்டதாகப் பரபரப்பு செய்தி வெளியிட்டது.
கொல்லப்பட்டவர் பெயர் பாபா பூஜ்ஜா சின். அவருக்கு வயது 82.
புஜ்ஜா சிங் 1930களில் கதர் புரட்சிகர இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய சுதந்திர போராட்ட வீரர். பகத் சிங்கின் மாமாவான அஜீத் சிங்கின் தோழர். பின்பு கிர்தி கட்சி என்ற கட்சியைத் தொடங்கினார். பிரிட்டிஷ் அரசு அந்தக் கட்சியைத் தடை செய்தது. பின்பு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1960 களில் நக்சல்பாரி இயக்கம் தொடங்கிய போது புஜ்ஜா சிங் அதில் இணைந்து கொண்டார்.
தோழர்களுக்கு மார்க்சிய வகுப்பு எடுக்க புஜ்ஜா சிங் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது போலீசால் பிடித்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். புஜ்ஜா சிங்கின் கொலை பஞ்சாப் முழுவதும் கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. அவரது கொலையை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்ட போதும் அது நடைமுறையில் இழுத்தடித்து காலம் கடத்தி மறக்கச் செய்யும் நடவடிகையாகவே அமைந்தது.
புஜ்ஜா சிங்கப் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களும், பப்பர் அகாலி அமைப்பை சேர்ந்தவர்களும் நக்சல் இயக்கத்தில் இணைந்து செயலாற்றினர். லட்சியவாதம், வீரம், தூய்மை ஆகிய குணங்களில் ஒத்தவர்களாக இருந்த இந்த மூத்த தோழர்களுக்கும், நக்சல் இளைஞர்களுக்கும் ஆழமான தோழமை தோன்றியது. பஞ்சாபில் நக்சல் இயக்கம் சீக்கிய மதத்தை சேர்ந்த தலித்துகள் நடுவிலும், வறுமையில் வாடும் விவசாயிகள் நடுவிலும் செல்வாக்கு பெற்றிருந்தது. பசுமைப் புரட்சியின் காரணமாக பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி பெருமளவு பஞ்சாபில் அதிகரித்திருந்தது.
சாருவின் காலத்தில் வர்க்க விரோதிகளை அழித்தொழிக்கும் செயல்திட்டத்தை நிறைவேற்றிய நக்சல்பாரிகள் பின்பு பஞ்சாபிய சமூகத்தையும், விவசாயிகளையும் வாட்டி வதைத்து வந்த அடிப்படை பிரச்சினைகளுக்காக வெளிப்படையான மக்கள் திரள் அமைப்புகளை உருவாக்கினர். இந்த அமைப்புகள் மிக விரைவில் வளர்ச்சியடைந்து பஞ்சாபில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல், அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை வீச்சுடன் நடத்தத் தொடங்கின.
எந்த ரகசியத் தன்மையும் இல்லாமல், ஆயுதப் போராட்ட வழியைக் கைவிட்டு வெளிப்படையாக இயங்கிய நக்சல் அமைப்புகளின் மீது அரசும் அதன் கூலிப்படைகளும் நடத்திய தாக்குதல்களில் சில தலைவர்கள் கொல்லப்பட்டு அமைப்புகள் முற்றிலும் சிதைக்கப்பட்டன. நக்சலைட்டுகளை பொது அரசியலுக்கு இழுப்பதற்கு பதில் அந்த இயக்கங்களின் செயல்பாடுகளை இரக்கமின்றி ஒடுக்கிய அரசின் செயல் வேறு விதமாக அதன் தலையிலேயே விடிந்தது.
விவசாயிகளின் அமைப்புகள் நாசமாக்கப்பட்டு விட்டன. ஆனால் அவர்களின் பிரச்சினைகள் தீரவில்லை. அதைப் பேசவும் விவசாயிகளுக்குக் குரல் கொடுக்கவும் பஞ்சாபில் ஒருவரும் இல்லாத நிலை தோன்றியது. அரசியல் களத்தில் ஒரு வெற்றிடம் உருவாகியது.
அந்த வெற்றிடத்தை ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே தலைமையிலான காலிஸ்தான் பிரிவினைவாதிகள் நிரப்பினர். பஞ்சாப் விவசாயிகளின் பிரச்சினைகளோடு பஞ்சாபி மொழி, சீக்கிய மதம் ஆகியவற்றை இணைத்து தனி நாட்டுக்கான போராட்டத்தை தொடங்கினர் காலிஸ்தான் பிரிவினைவாதிகள்.
இந்தியாவில் நக்ஸல்பாரி இயக்கம் வெடிப்பதையும் அது ஒடுக்கப்படுவதையும் பாகிஸ்தான் கையறு நிலையில் பார்த்துக் கொண்டிருந்தது. லட்சியவாதிகளான நக்ஸலைட்டுகள் பாகிஸ்தான் அரசையும் அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ அடக்குமுறை அரசு என்றே வகைப்படுத்தியிருந்தனர். இது போன்ற அரசுகளுடன் உறவுகொள்வதை கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. சீனாவுடனான நக்சல்பாரி அமைப்புகளின் உறவும் கூட தத்துவார்த்த அடிப்படையிலேயே இருந்தது. பணமோ ஆயுதங்களோ பயிற்சியோ தங்கிடமோ பெறுவதற்காக நக்சலைட்டுகள் ஒருபோதும் சீனாவை நாடியதில்லை.
ஆனால் பிந்தரன்வாலேவையும், அவருடனிருந்த காலிஸ்தான் தீவிரவாதிகளையும் ஒழிக்க இந்திய ராணுவம் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கும் நுழைந்து தாக்குதல் நடத்திய பிறகு உருவான காலிஸ்தான் போராளிகள் பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றனர். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற விதத்தில் தங்கள் தனிநாடு கோரும் போராட்டத்துக்கு பாகிஸ்தானை பின்புலமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். பாகிஸ்தானும் தாராளமாக ஆயுத பண உதவிகளை இந்த காலிஸ்தான் அமைப்புகளுக்குச் செய்தது.
காலிஸ்தான் போராட்டம் இந்திரா காந்தி உட்பட இந்திய ஆளும் வர்க்கங்களில் ஏராளமானவர்களைப் பலிவாங்கியது. டெல்லியும், மற்ற அதிகார மையங்களும் தாக்குதலுக்குள்ளாகின. காங்கிரஸ் தலைவர்களும் அமைச்சர்களும் இருப்புச் சட்டைக்களுக்குள்ளும், கண்ணாடிக் கூண்டுகளூக்குள் அடைக்கலம் புகுந்தனர். இந்தப் போராட்டம் பஞ்சாப்பையே ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது.
பஞ்சாப் நக்ஸலைட்டுகளில் ஒருபகுதியினர் காலிஸ்தான் போராளிகளாக மாறினர். இன்னொரு பகுதியினர் காலிஸ்தான் எதிர்ப்பாளர்களாயினர். பிந்தரன்வாலே நாத்திகர்கள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்று கூறியதால் எல்லா கட்சிகளையும் சேர்ந்த சுமார் முன்னூறு கம்யூனிஸ்டுகள் காலிஸ்தான் தீவிரவாதிகளால் பஞ்சாப் முழுவதும் கொல்லப்பட்டனர்.
நட்சத்தர் சிங் ரோடே என்பவர் ஒரு முக்கியமான நக்சல் தலைவராவார். இவர் பிந்தரன்வாலேவின் ஆதரவாளராகி காலிஸ்தான் போராளியாக மாறினார். இந்துத்வ இதழான இந்த் சமாச்சாரின் ஆசிரியர் ஜகத் நாராயணனை சுட்டுக் கொன்றார். இதிலிருந்தே பஞ்சாபில் காலிஸ்தான் போராளிகளின் அழித்தொழிப்பு நடவடிக்கைகள் தொடங்கின. ரோடே வைப் போல பல நக்சல்கள் காலிஸ்தான் போராளிகளாக, கிராமப்புறங்கள் போர்க்களங்களாயின.
பாஷ், ஜெய்மால் சிங் போட்டா என்ற இரண்டு நக்சல் தலைவர்கள் காலிஸ்தான் போராளிகளுக்கு எதிரான நிலையெடுத்தனர். இவர்கள் இருவரும் சீக்கியர்களுக்கு எதிரான அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டித்தவர்கள். அப்பாவி சீக்கியர்கள் ராணுவத்தாலும் போலீசாலும் வேட்டையாடப்படுவதை எதிர்த்து ஓய்வில்லாமல் போராடியவர்கள். அதே நேரம் மதவாத சீக்கிய போராட்டத்தை நோக்கிக் கேள்விகளும் எழுப்பினர். இவர்கள் இருவரும் காலிஸ்தான் போராளிகளால் கொல்லப்பட்டனர்.
பஞ்சாப் நக்சலிசமும், காலிஸ்தான் போராட்டமும் வெவ்வேறு விதமானவை என்றாலும் இரண்டுக்கும் ஒற்றுமைகளும் இருந்தன. ரோடே கைது செய்யப்பட்டவுடன் கொடுத்த வாக்குமூலம் இதைத் தெளிவுபடுத்துகிறது. சிறுவிவசாயியான தான் தனது பொருளாதார பிரச்சினைகளினால்தான் நக்சல்பாரி இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டதாகவும், நக்சல் இயக்கம் ஒடுக்கப்பட்ட பின்பு போராடியே தீர வேண்டிய அரசியல் சூழலில் காலிஸ்தான் போராட்டத்தை தேர்ந்தெடுத்ததாகவும் கைது செய்யப்பட்ட பிறகு வாக்குமூலம் அளித்தார். நக்சல் இயக்கம் இந்தியாவை தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்று வரையறுத்ததிருந்ததால் தான் தனது கொள்கைகளுக்கு எதிராக மாறவில்லை என்றார்.
காலிஸ்தான் போராளிகள் நக்சலைட் அமைப்புகளின் செயல்களை அப்படியே பின்பற்றத் தொடங்கினர். மக்கள் நீதிமன்றங்களை நடத்தினர். தேர்தல்களை புறக்கணித்தனர். தங்கள் மத நம்பிக்கை இடம் கொடுத்தவரை சமூக சீர்திருத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்திய அரசானது மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்காமல் அவற்றைப் பற்றிப் பேசியவர்களை ஒழித்துக் கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் நக்சல்பாரி எழுச்சியை விட பன்மடங்கு உக்கிரமான, பன்னாட்டுத் தன்மை கொண்ட காலிஸ்தான் போராட்டத்தச் சந்திக்க நேர்ந்தது. பலியான எண்ணற்ற உயிர்களைப் பற்றி யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை. இந்தியா போன்ற நாடுகளில் ஒரு மரணம், கொலை என்பது மரத்திலிருந்து இலை உதிர்வதைப் போன்றது.
-----------------------------------------
குறிப்பு: இக்கட்டுரையில் தமிழ் நாடு தொடர்பான விவரங்களை அறியத் தந்த தோழர்கள் Vinaya Gam , ஞானம் Gnam ஆகியோருக்க மனமார்ந்த அன்பும் நன்றியும். எனது கேள்விகளுக்கு பொறுமையுடன் பதிலளித்த இத்தோழர்களின் விலைமதிப்பற்ற உதவியினாலேயே இக்கட்டுரை சாத்தியமானது.
All reactions:
Vchinnadurai Durai, Tholar Velan and 151 others
47
26
Like
Comment
Share

நக்சல்பாரி ஒரு கிராமத்தின் பெயர் மட்டுமல்ல -3 இரா.முருகவேள்

 நக்சல்பாரி ஒரு கிராமத்தின் பெயர் மட்டுமல்ல தொடரின் மூன்றாவது பகுதி. வட தெலங்கானா நக்சல் இயக்கம், கொண்டபள்ளி சீதாராமையா, ஜனநாட்டிய மண்டலி, பழங்குடி மொழிகள், பண்பாடு, தண்டகரண்யம், ஈ...ழ..ப் போராளிகள் . . . . தோழர் இரா. முருகவேள் பதிவு.

நன்றி - உயிர்மை.
நக்சல்பாரி ஒரு கிராமத்தின் பெயர் மட்டுமல்ல -3
கொண்டலு பகலேசினம் (மலைகளையே பிளந்துட்டோம்)
இரா.முருகவேள்
“நாங்கள் ஆறுகளைக் கடந்தோம், மலைகளைக் கடந்தோம். பள்ளத்தாக்குகளையும், இருண்ட கானகங்களையும் கடந்து சென்றோம். மாநிலங்களின் எல்லைகளைத் துடைத்து அழித்தோம். தடையாக நின்ற மொழிகளை வசப்படுத்தினோம். அந்தக் காடுகளையும், மலைகளையும், ஆறுகளையும் போலவே கோண்டு மொழியும் எங்களுடன் தோழமை பூண்டது. அந்த மக்களின் உள்ளங்களைப் படிக்கக் கற்றுக் கொண்டோம். அவர்களோடு ஒன்று கலந்தோம்
மக்கள் எங்களுக்குக் காடுகளின் புவியியலையும், பழங்குடிப் பண்பாட்டையும், மொழிகளையும், கலைகளையும் கற்றுத் தந்தனர். அவர்கள், தங்கள் துப்பாக்கிகளில் குண்டுகளை நிரப்புகின்றனர். வில் அம்புகளைப் போருக்குத் தயார் செய்கின்றனர். தண்டகாரண்யத்தில் முன்னேறும் ஒவ்வொரு அடிக்கும் எதிரி தனது ரத்தத்தை விலையாகத் தரவேண்டுமென்பதைத் தங்கள் வீரஞ்செறிந்த எதிர்ப்பால் காட்டிவருகின்றனர்”.
பழங்குடி மொழிகளில் புரட்சிகர இலக்கியம்-
முன்னோடி வெளியீடு 1994.
நக்சல் இயக்கம் மாவோவைத் தங்கள் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட இயக்கம். அதாவது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலினுக்கு அடுத்த தலைவராக மாவோவை ஏற்றுக் கொண்ட இயக்கம்.
மார்க்சியத்துக்கு மாவோவின் பங்களிப்பை தெரிந்து கொள்வது இக்கட்டுரையில் பேசப்படும் விஷங்களைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். மாவோ தலைவராவதற்கு முன்பு சீனக் கம்யூனிஸ்டு கட்சி ரஷ்யக் கம்யூனிஸ்டு கட்சியின் பாதையை அப்படியே பின்பற்றி வந்தது.
ரஷ்யா போன்ற ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்டு கட்சிகள் தொழிற்சங்க இயக்கங்கள் கட்டுவது, தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடுவது, போராட்டங்கள், கிளர்ச்சிகள் மூலம் அரசை பலவீனப்படுத்துவது, ஒரு பெரும் மக்கள் எழுச்சியின் மூலம் அரசைக் கைப்பற்றுவது என்ற திட்டத்தின் அடிப்படையில் இயங்கின. பெரும்பாலான மக்கள் நகரங்களில் தொழிலாளர்களாக இருந்த நாடுகளில் இது பொருத்தமானதாக இருந்தது.
சீனா அன்று மாபெரும் விவசாய நாடு. எண்ணிக்கையில் மிகக் குறைவானதாகவிருந்த நகர்ப்புற பாட்டாளி வர்க்கத்தால் மட்டும் புரட்சியை சாதிக்க முடியாது,பெரும்பான்மை விவசாயிகள் புரட்சியில் பங்கு கொள்ள வேண்டும் என்று கருதினார் மாவோ. நகரங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில் நகரங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும் நிலையில் நகர்ப்புற எழுச்சி மட்டுமே ஒரு அரசை குலைத்து விடாது என்றார் மாவோ.
கிராமங்கள் பரந்து விரிந்த நிலப்பரப்பில் இருப்பதால் அங்கே ஒரே நேரத்தில் எழுச்சி என்பது சாத்தியமில்லை. அரசுக்கு அவசியமான போக்குவரத்து வசதிகள் இல்லாத, அரசானது நேரடியாக இல்லாமல் நிலப்பிரபுக்கள் மூலம் ஆட்சி நடத்தும் நிலப்பகுதிகளில் கெரில்லாக் குழுக்களைக் கொண்டு தளப் பிரதேசத்தை உருவாக்குவது, அந்தப் பகுதியை முழுமையாக அரசின் பிடியிலிருந்து விடுவிப்பது, அங்கிருந்து விரிவுபடுத்தி நகரங்களைச் சுற்றி வளைத்து இறுதியாக அரசைக் கைப்பற்றுவது என்பது மாவோ வகுத்த செயல்திட்டம். அரசின் பலம் அதிகமாக இருக்கும் வரை ஒருபோதும் ஒரு கெரில்லா படை நேரடி யுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்றார் மாவோ. எதிரி முன்னேறும் போது பின்வாங்குவதும், எதிரி பின்வாங்கும் போது முன்னேறுவதும், எதிரியை அலைக்கழித்து அவர்களின் பலத்தை வீணடிக்கச் செய்வதும் கெரில்லா படையின் தந்திரமாகவிருக்க வேண்டும் என்றார் அவர்.
எதிரியின் பத்து விரல்களையும் காயப்படுத்துவதை விட ஒரு விரலை வெட்டியெறிவது பலத்த சேதத்தை ஏற்படுத்தும். எதிரி பலவீனமாக இருக்கும் பகுதிகளில் தொடர்ந்து கெரில்லா தாக்குதல்கள் நடத்தி மூலம் அதை விடுவிக்க பகுதியாக மாற்ற வேண்டும். அதே நேரம் விடுவிக்கப்பட்ட பகுதிகள் மிகவும் பலம்வாய்ந்த எதிரியால் தாக்கப்பட்டால் அவற்றைக் கைவிடவும் தயாராக இருக்க வேண்டும் என்றார் மாவோ.
போரின் இறுதிக் கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சீன கம்யூனிஸ்ட் படை மிகுந்த பலத்துடன் இருந்த போது சியாங்கை ஷேக்கின் படை அதைத் தாக்கியது. இந்தப் பகுதி மீதும், அழகிய நகரின் மீதும் உணர்வுபூர்வமான நேசத்தைக் கொண்டிருந்த செம்படைத் தோழர்கள் தாங்களால் சியாங்கய் ஷேய்க்கின் படைகளை எதிர்த்துத் தாக்க முடியும், அதைக் கைவிட வேண்டாம், உயிரைக் கொடுத்து செந்தளப் பிரதேசத்தைக் காப்போம் என்று மாவோவிடம் மன்றாடினர்.
மாவோ சிரித்துக் கொண்டே நாம் சியாங்கை சேக்குக்கு ஒரு நகரைக் கொடுப்போம். அவர் நமக்கு சீனாவைக் கொடுப்பார் என்றார். புரட்சி என்பது ஒரு நிதானமான அறிவுச் செயல்பாடு, வீரம் தியாகத்தை மட்டும் சார்ந்ததல்ல என்பதில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார் மாவோ.
இரண்டாம் உலகப் போரின் போது பிரான்ஸின் காலனியாகவிருந்த வியட்நாமை ஜப்பான் கைப்பற்றியது. அதை எதிர்த்துப் போரிட்டு வந்த வியட்னாம் கம்யூனிஸ்ட் கட்சி ஜப்பான் உலகப் போரில் சரணடைந்ததும் வியட்னாமை மிச்சம் மீதியிருந்த ஜப்பானிய படைகளிடமிருந்து விடுதலை செய்து சைகோனில் ஆட்சியை நிறுவியது. ஆனால் ஜப்பான் சரணடைந்ததும் வியட்நாம் மீது திரும்பவும் உரிமை கொண்டாடிய பிரான்ஸ் அதை ஆகிரமிக்கத் தன் படைகளை அனுப்பியது. இந்த நேரத்தில் ஹோசி மின்னுக்கும் வியட்நாம் செஞ்சேனையின் தலைமைத் தளபதி ஜெனரல் கியாப்புக்கும் நடந்ததாக ஒரு உரையாடலைச் சொல்வார்கள்.
ஹோசிமின்: தலைநகர் சைகோனில் நம்மால் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்க முடியும்?
ஜெனரல் கியாப்: ஒருவாரம்.
ஹோசி மின்: நகருக்கு வெளியே உள்ள கிராமங்களுக்குப் பின்வாங்கினால் எவ்வளவு நாள் போரிட முடியும்?
ஜெனரல் கியாப்: ஒரு மாதம்.
ஹேசிமின்: அதற்கும் அப்பால் உள்ள காடுகளுக்கும் மலைகளுக்கும் பின்வாங்கினால் நாம்மால் எவ்வளவு காலம் போரிட முடியும்?
ஜெனரல் கியாப்: உலகம் உள்ளவரை.
இது பெரும்பாலும் கற்பனையாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றாலும் சாரம்சத்தில் இதுதான் மாவோ முன்வைத்த நீண்டகால மக்கள் யுத்தக் கோட்பாடு.
அதே போல விவசாயிகள், தொழிலாளர்களால் மட்டுமே புரட்சியை சாதித்துவிட முடியாது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். நடுத்தர வர்க்கம், சிறு முதலாளிகள், சிறு, நடுத்தர விவசாயிகள், வெளிநாட்டு மூலதனத்தால் பாதிக்கப்படும் உள்ளூர் முதலாளிகள் (தேசிய முதலாளிகள்) ஆகியோர் இணைந்தே பன்னாட்டு மூலதனத்தோடு உறவு கொண்டு நாட்டைக் காட்டிக் கொடுத்துவரும் தரகு முதலாளிகளையும், மிகவும் பிற்போக்கான நிலப்புரபுக்களையும் ஒழித்து புரட்சியை சாதிக்க முடியும். அது சோஷலிச புரட்சி அல்ல. பல்வேறு வர்க்கங்கள் இணைந்து நடத்தும் புதிய ஜனநாயகப் புரட்சி என்றார்.
இந்தியாவில் மா லெ இயக்கம் மாவோவை தலைவராக ஏற்றுக் கொண்டதாக இருந்த போதிலும் அதீத உணர்வெழுச்சியுடன் தன்னிலை மறந்து இயங்குவதாகவும் இருந்தது. மாவோ குறிப்பிட்ட முக்கியமான ஒரு அம்சம் ஆளும் வர்க்கங்களுக்குள்ளும் முரண்பாடு இருக்கிறது. அதை ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி பயன்படுத்த வேண்டுமென்பதாகும். மற்ற வர்க்கங்களையும் இணைத்து செயல்பட வேண்டும் என்றும் மாவோ கூறினார்.
இவையனைத்தும் மா லெ இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்டன. கெரில்லாத் தளமாக மாற்றவும் ஆயுதப் போராட்டம் நடத்தவும் ஏதுவான இடங்களா என்ற கவலை இல்லாமலேயே வாய்ப்புக் கிடைத்த இடங்களில் ஆயுதப் போராட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தொழிற்சங்கங்கள், மாணவர், இளைஞர் அமைப்புகள் ஆகியவை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டன. Expand anywhere and everywhere என்பதே சாருவின் முழக்கமாகும்.
சாரு மஜும்தாரின் மரணத்துக்குப் பிறகு கட்சியில் இது குறித்து விரிவான விவாதங்கள் நடந்தன. மகாதேவ் முகர்ஜியின் தலைமையில் சாருவின் பாதையை அப்படியே தொடர விரும்பியது ஒரு பிரிவு. சத்யநாரயண் சிங் தலைமையிலான பிரிவு ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு மக்களைத் திரட்டும் வழியில் செல்ல முடிவு செய்தது. இரண்டுக்கும் நடுவே ஒரு பாதையைத் தேர்வு செய்தது சர்மா தலைமையிலான குழு. இக்குழுவில்தான் கொண்டப்பள்ளி சீத்தாராமைய்யா இருந்தார்.
கொண்டபள்ளி சீத்தாராமையா பழைய ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1914 ஆம் ஆண்டு பிறந்தார். தெலங்கானா புரட்சியின் போது கிருஷ்ணா மாவட்ட செயலராக இருந்து எழுச்சியில் தீவிர பங்காற்றினார். 1964 ஆம் ஆண்டு கட்சி உடைந்த போது சீதாராமைய்யா அரசியலில் இருந்து விலகி ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். நக்சல்பாரி எழுச்சி தொடங்கியதும் அதில் இணைந்து கொண்டார். நக்ஸல்பாரி இயக்கம் பல துண்டுகளாக உடைந்ததும் செண்ட்ரல் ஆர்கனைசிங் கமிட்டி சி பி ஐ எம் எல் என்ற அமைப்பில் இணைந்து அதன் மூன்று மாநிலக்குழு உறுப்பினர்களில் ஒருவரானார்.
இக்குழுவின் தலைவர் ஜகஜித் சிங் சோஹல் மக்கள் திரள் போராட்டங்கள், ஆயுதப்போராட்டம் இரண்டையும் இணைக்கும் வழியை முன்மொழிந்தார். சீனாவின் தலைவர் எங்கள் தலைவர் என்பதைப் போன்ற முழங்கங்களை மறுதலித்தார். இந்தக் குழு பலவேறு மாநில குழுக்களுடன் தொடர்பு கொண்டு கட்சியை சீரமைக்க முயன்றது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நக்சல் குழுக்கள் இத்துடன் இணைந்த போதும் எல்லோரையும் ஒருங்கிணைக்கும் வல்லமையை இந்தக் குழு பெற்றிருக்க வில்லை. அப்பலசூரி போன்ற தலைவர்கள் தேர்தலில் பங்கெடுக்க வேண்டுமென்றும் கோரினர்.
1977 ஆம் ஆண்டு இக்குழுவிலிருந்து கொண்டபள்ளி சீத்தாராமைய்யாவும் ஏராளமான தோழர்களுடன் வெளியேறினார்.ஆந்திர கமிட்டியும், கொண்ட பள்ளி சீத்தாராமைய்யாவும், தமிழ் நாட்டில் இயங்கிய கூட்டக் குழு என்ற குழுவும் இணைந்து சி பி ஐ எம் எல் மக்கள் யுத்தம் என்ற கட்சி உருவானது.
-------------------------
நிற்க நேரமின்றி காட்டாறு போல ஓடிக் கொண்டிருந்த நக்சல் அமைப்புகளில் நின்று நிதானித்து ஆழமாகச் சிந்தித்து இயக்கத்தை வேர்பிடிக்கச் செய்தவர் கொண்டபள்ளி சீத்தாராமைய்யாதான். எழுச்சி, அழிவு பிளவு என்று மட்டுமே இயங்கிக் கொண்டிருந்த நக்ஸல்பாரி அமைப்புகளின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டவரும் கொண்டபள்ளி சீத்தாராமைய்யாதான்.
வாய்ப்புக் கிடைந்த இடத்திலெல்லாம் அமைப்பு உருவாக்குவது, ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுவது என்ற நிலையை மாற்றி ஆயுதப் போராட்டத்தில் இறங்குவதற்கு ஏற்ற சூழல் எங்கே இருக்கிறதோ அங்கே அமைப்பு உருவாக்குவது என்ற திசைவழியை அவரே முன்வைத்தார். தேர்தெடுக்கப்பட்ட பகுதி (Perspective area), கெரில்லா மண்டலம் (guerrilla zone), விடுவிக்கப்பட்ட பகுதி (Liberated zone ) என்று திட்டமிட்ட முறையில் அமைப்பு இயங்க வேண்டும் என்று வரையறுத்தார். கெரில்லாக் குழுக்களும் கூட முதலில் சிறு தாக்குதல்களில் ஈடுபடும் பின்பு பல குழுக்கள் இணைந்து நகரும் போர்முறைக்கு (Mobile warfare)க்கு மாறிச் செல்லும், அதன் பின்பி ஒரு பகுதி விடுவிக்கப்படும், புரட்சி அலையலையாகவே முன்னேறும், முன்னேறும் போதே பினாவாங்கவும் தயாராக இருக்க வேண்டும், உடனடித் தீர்வுகள் சாத்தியமில்லை. விடாப்பிடியான நீண்டகால மக்கள் யுத்தமே இறுதி விடுதலையைத் தரும் என்றார் கொண்டபள்ளி சீத்தாராமைய்யா. இது மாவோயிச போர்த்தந்திரங்களின் டெக்ஸ்ட் புக் வடிவம். இதை இந்திய நிலைமைகளுக்குப் பொருத்தியதில் கொண்டபள்ளி சீத்தாராமைய்யாவின் தனித் திறன் வெளிப்பட்டது.
ஆயுதப் போராட்டம் என்பது நோக்கமாக இருந்தாலும் உள்ளூர் சட்டங்களும் அரசு அமைப்பும் அனுமதிக்கும் எல்லைவரை சட்டபூர்வமான போராட்ட வடிவங்களைப் பயன்படுத்துதல் மக்கள் அமைப்புகளை உருவாக்குதல் போன்ற புதிய வடிவங்களை பரிசீலித்துப் பார்க்கும் முறையையும் அவர்தான் உருவாக்கினார். முடிந்தவரை அரசுடனான நேரடி மோதல்களைத் தவிர்ப்பது, அரசின் அதிகாரம் எட்டாத, நிலப்பிரப்புக்களின் ஆதிக்கத்தில் உள்ள கிராமங்களில் முதலில் அமைப்புகள் உருவாக்குவது என்று சீத்தாராமையா உருவாக்கிய மக்கள் யுத்தக் கட்சி இயங்கியது.
கொண்டபள்ளி சீதாராமைய்யா இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்த ஒத்த கருத்துடைய இயக்கங்களை சந்தித்து ஒற்றுமைக்கான முயற்சிகளை தொடங்கினார். கட்சியின் அரசியலை விட்டு விலகமால் புதுபுது வடிவங்களையும், பிரச்சார முறைகளையும் பரிட்சித்துப் பார்க்க இடமளித்தவர் கொண்டபள்ளி சீத்தாராமைய்யா. அதுவரை விவசாயிகளின் காதுகளில் கிசுகிசுப்பது, துண்டுப்பிரசுரம் வெளியிடுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்று இருந்த நக்சல் பிரச்சார உத்திகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியவர் இவர்.
கத்தார் போன்றவர்கள் தெலங்கானா கிராமங்களில் மக்களிடையே வழக்கத்திலிருந்த புர்ர கதா, கேல் என்ற நாட்டிய நாடக வடிவம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அவற்றின் மூலம் புரட்சிகர அரசியலை பிரச்சாரம் செய்யும் உத்தியை பரீட்சித்துப் பார்த்த போது அதை ஆர்வத்துடன் ஆதரித்து ஊக்குவிக்கும் நெகிழ்வுத் தன்மை கொண்டபள்ளி சீதாராமைய்யாவிடமிருந்தது. நக்ஸல்பாரி இயக்கம் ஒற்றைப் பரிமாணம் கொண்ட வறட்டு இயக்கம் என்ற தோற்றத்தை மாற்றியது மக்கள் யுத்தக் கட்சி. புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தில் வரவர ராவ், கல்யாண் ராவ் உள்ளிட்ட பல கவிஞர்களும், எழுத்தாளர்களும் முக்கிய பங்காற்றினர். எண்ணற்ற நாவல்களும், கட்டுரைகளும், கவிதைகளும் வெளியாகின. சாகேத் ராஜன் போன்ற அற்புதமான வரலாற்றறிஞர்களும், அறிவியலாளர்களும் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருக்க முடிந்தது.
--------------------------
ஸ்ரீகாகுளத்தில் ஆயுதப் போராட்டம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டதும் கொண்டபள்ளி சீத்தாராமைய்யா இருந்த சிபிஐ எம் எல் ஆந்திர மாநில குழு தெலங்கானா பகுதியில் கவனம் செலுத்தத் தொடங்கியது. அந்தப் பகுதி கெரில்லா மண்டலமாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி என்று கருதப்பட்டது. இந்தப் பகுதிகளில் ஜமீந்தார்கள் சாதாரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வைத்திருந்தனர். விவசாயம் வணிகமயமாகி விளை பொருட்களை பெருநகரங்களில் விற்று லாபம் ஈட்ட வாய்ப்புகள் அதிகரித்ததும் நிலப்பிரபுக்கள் பண்ணையாட்களின் வேலை நேரத்தை அதிகரித்தனர். ஆண்டையின் நிலத்தில் கூலி இல்லாமல் வேலை செய்யும் வெட்டி என்ற முறை ஏற்கெனவே குத்தகை விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து வந்தது. தவிர பசுமைப் புரட்சியின் போது அரசு பல நீர்ப்பாசன திட்டங்களை உருவாக்கியது. எனவே நிலப்பிரபுக்களின் பாசன நிலங்களின் பரப்பு அதிகரித்தது. அவர்களுக்கு அதிக வேலையாட்கள் தேவைப்பட்டது. ஆனால் நிலப்பிரபுக்கள் உரிய ஊதியம் கொடுக்க பிடிவாதமாக மறுத்து வந்தனர்.
ஏற்கெனவே இருந்து வந்த அடக்குமுறையுடன் இந்த புதிய கொடுமைகளும் ஒரு வெடிப்புக்கான சூழலை ஏற்படுத்தியிருந்தன. தெலங்கானாவில் ஏற்கெனவே ஒரு மாபெரும் எழுச்சி நடந்த அனுபவமுமிருந்தது. இரண்டாவது, மூன்றாவது தலைமுறை பொதுவுடமையாளர்கள் இங்கே ஏராளமாகவிருந்தனர். மக்களுக்கு அரசியல் உணர்வூட்டவும், அவர்களைப் போர்க்குணம் கொண்டவர்களாக வளர்த்தெடுக்கவும் சாதகமான சூழ்நிலை நிலவியது. நக்சல்பாரி இயக்கத்தின் ஆந்திர மாநிலக் கமிட்டி ஏற்கெனவே தெலங்கானா பகுதிகளில் வேலை செய்து வந்தாலும் கொண்டபள்ளி சீத்தாராமைய்யா அந்தப் பகுதியை கெரில்லாப் போராட்டத்துக்கான தளமாக வளர்த்தெடுக்கவும், மக்கள் ஆதரவுத் தளத்தை விரிவு படுத்தவும் திட்டவட்டமான முயற்சிகள் மேற்கொண்டார். அப்பகுதி மக்களை அணிதிரட்ட ரயது கூலி சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
அடிலாபாத், கரீம்நகர் மாவட்டங்களின் கிராமப் பகுதிகளில் கூலி, ஏழை விவசாயிகளுக்கு மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட்டன. இயக்க ஆதரவாளர்களும் அரசியல் பயிற்சியளிக்கப்பட்டவர்களுமான பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கொண்டு கிராமங்களுக்குச் செல்வோம் இயக்கம் நடத்தப்பட்டது. அங்கே தீவிரமாக இயங்கி வந்த முற்போக்கு மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிறு குழுக்களாக கிராமங்களுக்குச் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி விவசாயிகள் நடுவே புரட்சிகர அரசியலை பிரச்சாரம் செய்தனர். ரயத்து கூலி சங்கத்தில் இணையும் படி விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட ஜன நாட்டிய மண்டலி என்ற கலை இலக்கிய அமைப்பு தனது பாடல்கள், நிகழ்ச்சிகள் மூலம் புரட்சிகர அரசியலை கிராமம் கிராமமாக மக்களிடம் எடுத்துச் சென்றது. வங்கபந்து, கத்தார் நரசிங்க ராவ் ஆகியோர் இணைந்து ஜன நாட்டிய மண்டலியை உருவாகினர். ஜன நாட்டிய மண்டலி பின்பு இந்திய புரட்சியின் முன்னணிப்படை என்றழைக்கப்பட்டது. புரட்சிகர அழகியல் என்ற ஒரு தனி வகைமையே தெலுங்கு இலக்கியத்தில் உருவானது. ஜனநாட்டிய மண்டலி கலைஞர்கள் ஒவ்வொரு கிராமமாகச் சென்று கலை நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடத்தி மக்களை புரட்சிகர அரசியலின் பால் ஈர்த்தனர்.
செக்கச் சிவந்த நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் வேட்டியும், விவசாயிகளின் போர்வையும், தடியுமாக தோன்றி “கொண்டலு பகலேசினம்- மலைகளையே பிளந்துட்டோம், பாறைகளைப் பிழிந்திட்டோம் ரத்தத்தையே கலவையாக்கி அணைகளையே கட்டினோம், உழைப்பு யாருது செல்வது யாருது என்று இடிக்குரலில் முழங்கும் கலைஞனின் உருவம் நக்ஸல்பாரி பிரச்சாரத்தின் அடையாளமானது.
இந்தப் படல்கள் மக்களுக்கு மிக அறிமுகமான மொழியில் எளிமையான கேள்விகளை வைத்தன. அவர்களை அமைப்பாக செயல்படத் தூண்டின. அமைப்பை மக்களுக்கு மிக அருகில் கொண்டு சென்றன. நிகழ்வின் இறுதியில் சுற்றி நின்று மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் போலீஸ்காரர்களுக்கும் கத்தார் சில பாடல்கள் வைத்திருப்பார்.
எஸ் பிக்கும் டிஸ்பிக்கும் அழகழகா பங்களா இருக்கு
குதிரலாயம் போன்ற குவார்ட்டார்ஸில் உங்குடும்பம்
ஓண்டிக் கெடக்குது
நீயும் நானும் ஒண்ணா சேர்ந்துட்டா ஓ போலீசண்ணா . . .
என்ற பாடல் உள்ளூர் கவலர்களை நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைக்கு அரசு பயன்படுத்தி வந்த காலங்களில் மிகவும் பிரபலமாகவிருந்தது. அந்தக் காலங்களில் மக்களிடையே மூடநம்பிக்கைகளைப் பரப்பி வந்த சத்ய சாய்பாவைக் கிண்டல் செய்தும் அம்பலப்படுத்தியும் ஜனநாட்டிய மண்டலி நிகழ்வுகளை நடத்தியது. புரட்சிக்காக உக்கிரமாக அறைகூவி அழைப்பதற்கு எந்த அளவுக்கு ஜன நாட்டிய மண்டலி முக்கியத்துவம் கொடுத்ததோ அதே அளவுக்கு சற்றே குறும்பும் வேடிக்கையும் விளையாட்டும் கலந்த மொழியில் உள்ளூர் அரசியல் பேசுவதற்கும் இடமளித்தது.
ஜகித்யாலா தாலுக்காவில் முதல் வெடிப்பு நிகழ்ந்தது. கட்சி முதலில் நிலப்பிரபுக்கள் மேல் நேரடித் தாக்குதல் நடத்தவில்லை. புறம்போக்கு நிலங்கள், நிலப்பிரபுக்கள் சட்டவிரோதமாக ஆகிரமித்திருந்த நிலங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றி நிலமற்ற மக்களுக்கு வினியோகிக்கும் நடவடிக்கையைத் தொடங்கியது. இது அப்ராம் ஜோஹ் அதாவது பலாத்கார விவசாயம் என்று அரசால் அழைக்கப்பட்டது. ஆனால் அந்த சிறிய அளவு சமரசத்தை கூட நிலப்பிரபுக்கள் செய்து கொள்ள மறுத்தனர். தங்கள் எண்ணற்ற அடியாட்களைக் கொண்டு மக்கள் மீதும் கட்சித் தோழர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தினர்.
நிலப்பிரபுக்களின் அடக்குமுறையையும் சுரண்டலையும் இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் ஆயிரமாயிரம் விவசாயிகள் கிளர்ந்தெழுந்தனர். அடியாட்படைகள் துவம்சம் செய்யப்பட்டன. போலீஸ் இந்தப் பெருங்கோபத்தைக் கண்டு தலையிடத் தயங்கி தங்கள் காவல் நிலையங்களுக்குள் முடங்கியது. இது போன்ற கோபத்தையும், ஒற்றுமையையும் முன்கண்டிராத அடியாட்கள் கிராமங்களை விட்டு ஓட்டம் பிடித்தனர். பிடிபட்ட அடியாட்கள் மக்கள் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டனர். தங்களை துரைகள் என்றழைத்துக் கொண்டு குறுநில மன்னர்களைப் போல நடமாடி வந்த ஆண்டைகளின் ஆதிக்கம் தவிடுபொடியானது. துரைகளை மக்கள் கிராமங்களை விட்டு விரட்டியடித்தனர். பெரும் பண்ணைகளின் நிலங்கள் தரிசாகக் கிடந்தன. பிரம்மாண்டமான மாளிகைகள் வெறிச்சோடிப் போயின.
ஜகித்யாலா எழுச்சி சிர்சில்லா, லோட்டனூரு, மாத்தனூரு, சின்ன மேட்டுப்பள்ளி என்று விரித்து பரவியது. அதுவரை துரைகளின் வீடுகளில் கொத்தடிமையாக இருப்பது அல்லது தண்டம் கொடுப்பது என்பதைத் தவிர வேறு எதையும் அறியாதிருந்த மக்கள் துரைகளை சமூகப் புறக்கணிப்புச் செய்தனர். அவர்களுக்கு உணவும் நீரும் மறுக்கப்பட்டன.
“ஜகித்யாலா விவசாயிகள் போராட்டத்தில் ஒரு மைல்கல்லானது. தெலுங்கு இலக்கியம் ஜகித்யால் இயக்கத்தால் செழுமைப்பட்டது. நவீன படைப்பிலக்கியத்தின் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது ஜகித்யால்” (பழங்குடி மொழிகளில் புரட்சிகர இலக்கியம்).
அரசு இன்னொரு ஸ்ரீகாகுளம் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளதென்று பயந்து விரைந்து இயங்கியது. ஜகித்யாலா, சிர்சில்லா தாலுக்காக்கள் கலவரப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. புதுபுது காவல் நிலையங்களும், முகாம்களும் திறக்கப்பட்டன. போலீஸ் கிராமங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு துரைகளை மீண்டும் அவர்களின் மாளிகைகளில் அமர்த்த முயன்றது. ஆனால் கோபம் கொண்ட மக்கள் மீண்டும் மீண்டும் மாளிகைகள் மீது தாக்குதல் நடத்தினர். போலீஸ் மக்கள் மீது பதில் தாக்குதல்கள் நடத்தியது.
துரைகள் தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்ப நகரங்களுக்கு ஒடினர். அரசு மேலும் போலீஸ் படைகளைக் குவித்தது. இந்தக் காலகட்டத்தில் தமிழ் நாட்டின் கூட்டக் குழுவுடன் இணைந்து ஆந்திரமாநிலக் கமிட்டி தன்னை இந்திய பொதுவுடமைக் கட்சி (மா லெ) (மக்கள் யுத்தம்) ஆக மாற்றிக் கொண்டிருந்தது. எழுபதுகளில் நக்சல்பாரி எழுச்சியின் போது கலகம் மையம் கொண்டுள்ள கிராமங்களை அரச படைகள் தாக்கும் போது பதிலுக்குத் திருப்பித் தாக்கி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே வழக்கமாகவிருந்தது. இது பேரழிவை விளைவித்தது.
மக்கள் யுத்தக் கட்சி தெலங்கானாவிலும், தமிழ் நாட்டிலும் வேறுவிதமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. சரியான தயாரிப்பு இல்லாமல், சூழல் இல்லாமல் அரச படைகளின் மீது பதில் தாக்குதல் நடத்துவது என்பது அழிவையே கொண்டு வரும். அதற்கு பதில் மேலும் பல தளப்பிரதேசங்களை உருவாக்கி அடக்குமுறையை சிதறடிப்பதே சிறந்த வழி என்று கட்சி கருதியது. பீடம்பள்ளி, மந்தனி, ஹுசூராபாத், பரகலா, ஜனகம், காமாரெட்டி, பத்ராசலம், சிங்கரேணி, லக்ஸேத்திபெட், கானாபூர், சிர்பூர் ஆகிய பகுதிகளுக்கு இயக்கத்தை விரிவுபடுத்தியது.
சிங்கரேணி என்பது மிகப் பெரிய நிலக்கரி சுரங்கங்கள் உள்ள பகுதியாகும். சுமார் ஒரு லட்சம் மக்கள் இங்கே பணி செய்து வந்தனர். மக்கள் யுத்தக் கட்சி இங்கே சிங்கரேணி கார்மிக சமக்யா (Singareni Karmika Samakya) என்ற தொழிற்சங்கத்தை வெற்றிகரமாகக் கட்டியெழுப்பியது. இது பழைய நக்ஸல் பாதையிலிருந்து மிகப் பெரிய முறிவு ஆகும். சாரு தொழிற்சங்கங்கள் அமைப்பதை எதிர்த்தார். அவை பொருளாதாரப் போராட்டங்களுக்கானவை என்ற கருத்தே இருந்தது.
சிகாஸா தனது முதல் மாநாட்டை கோதாவரிக்கனி என்ற இடத்தில் 1982 ஜூனில் நடத்தியது. சிகாஸா சுரங்கங்களில் அதுவரை புறக்கணிப்பட்ட பணிப்பாதுகாப்பு, வேலை செய்யும் நிலைமைகளில் முன்னேற்றம், கூலி, ஆகியவற்றுக்காக தொடர்ந்து போராடியது. 56 நாட்கள் நடந்த வேலை நிறுத்தம் மிக முக்கியமானதாகும். சுரங்கப்பகுதிகளில் மது விற்பனையை தடை செய்யவும் சிகாசா தொடர்ந்து போராடியது. ஒப்பந்ததாரர்க்கள் சுரங்கத் தொழிலாளர்களை கொள்ளையடிப்பது, அடியாட்களை வைத்து மிரட்டுவது ஆகியவற்றுக்கு முடிவு கட்டியது சிகாஸா.
சிகாஸா 1992 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது.
கட்சி ஆயுத நடவடிக்கைகளைத் தவிர்க்க முயன்றாலும் மக்கள் எழுச்சிகளின் போது அழித்தொழிப்புகள் தவிர்க்க முடியாதவையாகவிருந்தன. அதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்த கோபம் பேரலையாக வெடித்து சுற்றிலுமிருந்த அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்கியது.
அரசால் கிராமங்களில் தனது அதிகாரம் தகர்வதை நீண்டநாட்கள் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது, இது நிச்சயம் அரசு அடக்குமுறையைக் கொண்டு வந்தே தீரும் என்பதை கொண்டபள்ளி சீத்தாராமைய்யா உணர்ந்திருந்தார். அதுவரை ஆயுதப் போராடடத்தைத் தவிர்த்து வந்தாலும் அது இனிமேலும் தவிர்க்க முடியாத கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் துலக்கமாகத் தெரிந்தது. நிலப்பிரபுக்களின் அடியாட்படைகள் ஏறக்குறைய முறியடிக்கப்பட்டு விட்டன. நிலப்பிரபுக்கள் முழுமையாக அரசையும் போலீசையும் சார்ந்து இருக்கத் தொடங்கினர். ஒவ்வொரு போராட்டத்திலும் போலீஸ் தலையிட்டது. கிராமங்களை தங்கள் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
மக்கள் யுத்தக் கட்சி கிராமங்களில் உருவாக்கியிருந்த ஊர்சபைகள், பகிர்ந்து அளித்திருந்த நிலங்கள், எழுச்சியின் போது எட்டப்பட்ட சுதந்திரம், விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றையும் பாதுகாக்க வேண்டியிருந்தது. எனவே அரச படைகளை நேரடியாக எதிர்கொள்ள வேண்டிய சூழல் வந்தே வந்து விட்டது.
எழுச்சி நடந்து மக்களின் அதிகாரம் நிலைநாட்டப்பட்ட இடங்களில் அரசு போலீஸ், துணைராணுவப் படைகள் ஆகியவற்றைக் கொண்டு பெரும் தாக்குதல் நடத்தும் போது கெரில்லாக் குழுக்களால் அவற்றைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லை. எண்ணிக்கையிலும் ஆயுத பலத்திலும் பெரும் வலிமை கொண்ட படைகளை நேரடியாக எதிர்த்து நிற்பது என்பது பேரழிவையே ஏற்படுத்தும். எனவே குறிப்பிட்ட சிலரைத் தவிர பெரும்பாலான ஆயுதக் குழுக்கள் போர்ப் பகுதிகளிலிருந்து பின்வாங்குவதே ஆயுதப் போராட்ட அமைப்பு தனது பலத்தையும் அணிகளையும் காத்துக் கொள்ளும் வழியாகும். வெற்றி அல்லது வீர மரணம் என்ற மரபுரீதியிலான போர் முழக்கம் கெரில்லா போராட்டத்து பொருந்தாததாகும். அரசின் தாக்குதல் கடுமையாக இருக்கும் போது அந்தப் பகுதிகளிலிருந்து பின்வாங்குவதும், பின்பு சாதகமான சூழல் ஏற்பட்டதும் முன்னேறுவதும் உலகம் முழுவதும் கெரில்லா இயக்கங்கள் கடைப்பிடித்து வரும் செயல் தந்திரமாகும்.
நக்ஸல்பாரி, ஸ்ரீகாகுளம், போஜ்பூர், கோபிபல்லப்பூர் போன்ற இடங்களில் தோன்றிய எழுச்சிகள் அடக்கப்பட்டதற்குக் காரணம் அரசு பதில் தாக்குதல் நடத்தும் போது புரட்சிகர குழுக்களும், கட்சியும் பின்வாங்க பாதுகாப்பான இடமில்லாதிருந்ததாகும் என்ற முடிவுக்கு சீத்தாராமைய்யா வந்தார். 1940க்களின் இறுதியில் நடந்த தெலங்கானா புரட்சியின் போது இதே போன்ற சூழலை இந்திய பொதுவுடமைக் கட்சி எதிர்கொண்டிருந்தது.
இதன் படி தெலங்கானா புரட்சியின் போது இந்திய பொதுவுடமைக் கட்சி வடக்கு நோக்கி, அதாவது காடுகள் நிறைந்த மத்திய பிரதேசத்தின் பஸ்தர் மாவட்டத்தை நோக்கி பின்வாங்குவது என்று முதலில் முடிவு செய்திருந்தது. ஆனால் அந்தப் பகுதிகளை ஆய்வு செய்ய அனுப்பப்ட்ட குழுவானது அங்கே உள்ள மக்கள் மிக மிக பின்தங்கி உள்ளனர். அங்கு வாழ்பவர்கள் வெளியுலகத் தொடர்பே இல்லாத, ஆடை கூட அணியாத பழங்குடி மக்கள். சமவெளிப்பகுதி மக்களுக்கு அறிமுகமற்ற பல்வேறு மொழிகள் பேசுபவர்கள். அவர்களுடன் தொடர்பு கொள்வது சாத்தியமற்றது. தவிர மலேரியா போன்ற நோய்கள் நிறைந்ததாக உள்ளது அந்தப் பகுதி, எனவே அங்கே கட்சி அமைப்புகள் உருவாக்குவதும், அங்கு பின்வாங்கும் தோழர்கள் தாக்குப் பிடித்து நிற்பதும் சாத்தியமில்லை என்று அறிக்கையளித்தது. (வீரத் தெலங்கான்- சுந்தரய்யா). எனவே இந்திய பொதுவுடமைக் கட்சியானது தெற்கு நோக்கி அதாவது கிழக்கு கோதாவரி காடுகளுக்குப் பின்வாங்குவது என்று முடிவு செய்தது.
கிழக்கு கோதாவரி காடுகள் பல ஆயிரம் கெரில்லா வீரர்கள் நிலைகொள்வதற்கு ஏற்றவையல்ல. அரசு படைத்தளங்களுக்கும், சாலை வசதியுள்ள இடங்களுக்கும் அருகேயுள்ளது அந்தப் பகுதி. எனவே கட்சி கடும் சேதத்தை சந்தித்தது.
இதை ஆய்வு செய்த கொண்டபள்ளி சீத்தாராமைய்யா என்ன விலை செலுத்தியாவது வடக்கே பஸ்தர் உள்ளிட்ட தண்டகரண்யக் காடுகளை நோக்கிப் பின்வாங்கியே வேண்டும் என்று முடிவு செய்தார். என்ன காரணங்களால் இந்தியப் பொதுவுடமைக் கட்சி பஸ்தர் பகுதிக்கு பின்வாங்குவது சாத்தியமில்லை என்று கருதியதோ அதே காரணங்களால்தான் அது பின்வாங்க ஏற்ற பகுதி என்று மக்கள் யுத்தக் கட்சி தீர்மானித்தது.
பஸ்தர் மாவட்டம் கேரளா அளவுள்ளது. 67 சதவீதப் பகுதி காடுகளால் நிரம்பியது. கோண்டு பழங்குடி மக்களே அங்கு வாழ்ந்து வந்தனர். பஸ்தர் முழுவதும் ஐந்து சிறிய நகரங்களே அப்போது இருந்தன. பழங்குடி மக்கள் பீடி இலை சேகரித்து ஒப்பந்தக்காரர்களிடம் விற்பனை செய்வது வழக்கம். இந்தத் தொழிலில் கடுமையான சுரண்டல் நிலவியது. நூறு மூட்டை பீடி இலைகளை சேகரித்தால் இரண்டு ரூபாய் மட்டுமே கூலி என்ற நிலை இருந்தது. பெண்கள் வனத்துறையாலும், மபியா கும்பல்களாலும், சுரங்கங்கள், ம்ரம் வெட்டும் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் அடியாட்களாலும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தனர். பழங்குடி மொழிகளூம், கலை வடிவங்களும் அழிந்து வந்தன. எனவே பஸ்தரில் மட்டுமல்லாமல் தண்டகரண்யம் என்றழைக்கப்பட்ட மத்திய இந்திய காட்டுப் பகுதி முழுவதிலும் புரட்சிகர பணி செய்வதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுகிறது, அது அந்த மக்களின் நலனில் இருந்தும், சமவெளிப் போராட்டத்துக்கும் அவசியமானது என்று மக்கள் யுத்தக் கட்சி முடிவு செய்தது.
தெலங்கானா பகுதிகளில் கட்சி ஊழியர்கள் தனி நபர்களாகவோ, சிறு குழுக்களாகவோ இயங்குவது வழக்கம். தேவையானால் மட்டுமே உள்ளூரில் கிடைக்கும் ஆயுதங்களை மறைத்து எடுத்துச் செல்வதும் வழக்கம். மக்கள் நடுவே கலந்து மறைந்து கொள்வது சாத்தியம் என்பதால் அதற்கு மேல் தேவைப்படவில்லை. ஆனால் பலநூறு கிலோமீட்டர் பரந்து விரிந்துள்ள அடர் காடுக்களுக்குள் அமைந்திருக்கும் வெளியுலகத் தொடர்பற்ற பழங்குடி கிராமங்களுக்கு தனித் தனி கட்சி ஊழியர்களை அனுப்புவது என்பது சாத்தியமில்லை என்பதை கட்சி உணர்ந்திருந்தது.
எனவே தண்டகரண்யத்தில் கட்சிப்பணி செய்ய மக்கள் யுத்தக் கட்சி பச்சை சீருடையும், துப்பாக்கியும், தொப்பியும், கெரில்லா முதுகுப் பையும் தாங்கிய குழுக்களை உருவாக்கியது. இவை பின்பு தளங்கள் என்று அழைக்கப்பட்டன. கட்சி இந்த குழுக்களை செஞ்சேனையின் முன்னோடிகளாகக் கருதியது.
முதலில் தண்டகராண்யதின் ஒரு பகுதியான கட்சிரோலி மாவட்டத்தில் நுழைந்த கெரில்லாக் குழுக்கள் பழங்குடி மக்களை உணர்வூட்டி அணிதிரட்ட ஜன நாட்டிய மண்டலியின் தெலுங்கு பாடல்களைப் பயன்படுத்தினர். அது அந்த மக்களுக்குப் புரியவேயில்லை. கடும் முயற்சிக்கும் போராட்டத்துக்கும் பின்பு கெரில்லாக்கள் அப்பாடல்களை கோண்டு மொழியில் மொழிபெயர்த்தனர். இந்த போதிலும் சமவெளிப்பகுதிகளில் மக்களிடையே மிகவும் புகழ்பெற்றிருந்த பாடல்கள் பழங்குடி மக்களுக்கு அன்னியமாகவே இருந்தன.
ஏன் என்று தேடியவர்களுக்கு விசித்திரமான பதில்கள் கிடைத்தன. பழங்குடி மக்கள் ஒருவர் பாட அடுத்தவர் அமர்ந்து ரசிக்கும் வழக்கம் இல்லாதவர்கள். அவர்களது பாடல்கள் நடனத்துடன் இணைந்திருக்கும். எல்லா மக்களும் நடன நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள். பார்வையாளர்கள், பங்கேற்பவர்கள் என்ற வேறுபாடு அங்கே இருக்கவில்லை. இந்த சிக்கலைப் புரிந்து கொண்டதும் நக்சல் தோழர்கள் கோண்டு மக்களின் இசையையும், பாடல்களையும் புரிந்து கொள்ளும் கடுமையான பணியில் இறங்கினர். நீண்ட கோரசிலோ, உரையாடல்களிலோ தொடங்கும் அவர்களின் பாடல்களைப் புரிந்து கொள்ள நீண்ட காலம் பிடித்தது. இதிலிருந்த சிரமங்கள், காட்டு வாழ்க்கையின் கடுமை சில முக்கியமான தோழர்களை அமைப்பிலிருந்து விலகிப் போகச் செய்தாலும் மற்றவர்கள் தொடர்ந்து முன்னேறினர்.
“நாங்கள் ரிலோ என்றோம். ரெலோ என்றோம். (பழங்குடி பெண்கள் ரிலோ என்றும் ஆண்கள் ரெலோ என்றும் பாடல்களைத் தொடங்குவார்கள்) பழங்குடி இளைஞர்களும் யுவதிகளும் எங்களோடு இணைந்து கொண்டார்கள். அவர்கள் இயற்கை உருவாக்கிய கலைஞர்கள். கவிதை அவர்களின் குருதியில் கலந்திருந்தது. புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சி, நோக்கங்கள், மக்கள் வாழ்க்கை பற்றி நூற்றுக்கணக்கான பாடல்கள் தண்டகரண்ய வானில் எதிரொலிக்கத் தொடங்கின.” (people’s struggles- a perspective. RWA publication).
தண்டக்கரண்யாத்தில் நுழைந்த கெரில்லாக்கள் ஆதிவாசி கிஸான் ஸெட்மஜூர் சங்காதனா’ என்ற பழங்குடி விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் அமைப்பை மிக விரைவில் கட்டியெழுப்பினர். முதலில் மஹாராஷ்ட்ராவின் கட்சிரோலி மாவட்டத்தில் தொடங்கிய இந்த அமைப்பு விரைவில் பஸ்தர், பண்டாரா, பால்காட், கோராபுட், சந்திரபூர், மாண்டலா, ராஜநந்தகம், கிழ்க்கு கோதாவரி, விசாகப்பட்டணம் என்று பங்களாதேஷைப் போல இரண்டு மடங்குள்ள பகுதிக்கு விரிந்து பரவியது.
1980 லிருந்து தொடர்ச்சியாக நடத்தப்பட்ட போராட்டங்களில் 100 மூட்டை பீடி இலைக்கு 2 ரூபாயாக இருந்த கூலி பதினேழு ரூபாயாக உயர்ந்தது. வனத்துறையும், பல்வேறு ஒப்பந்தக்காரர்களும் பழங்குடி மக்கள் மேல் செலுத்தி வந்த அதிகாரம் பெருமளவு சிதைந்து போனது. அடுத்து வந்த சில ஆண்டுகளில் தண்டகரண்யப் பகுதி முழுவதும் இயங்கி வந்த மக்கள் யுத்தக் கட்சியின் அமைப்புகள் தண்டகரண்யப் பழங்குடி விவசாயிகள், தொழிலாளர்கள் சங்கம் (DAKMS) என்ற பெயரில் ஒன்றிணைந்தன.
1981 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதிஅடிலாபாத் மாவட்டம் இந்திரவல்லி என்ற கிராமத்தில் ஒரு பழங்குடி மக்கள் மாநாடு நடத்தப்பட இருந்தது. அதற்கு ஒருநாள் முன்பு மாநாடு தடை செய்யப்பட்டது. அதை அறியாமல் அடர்காடுகளிலிருந்து மாநாட்டுப் பகுதிக்கு வந்த மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. குறைந்தது அறுபது பேர் கொல்லப்பட்டனர். நக்சல் வரலாற்றில் இந்திரவல்லிப் படுகொலை என்று இது அழைக்கப்படுகிறது. இது பழங்குடி மக்களை பயந்து விலகச் செய்வதற்கு பதில் மேன்மேலும் மக்கள் யுத்தக் கட்சியுடன் இறுகப் பிணைத்தது.
நக்சல்பாரி இயக்கம் முன்கண்டிராத அளவுக்கு விரிந்த பகுதியில் ஆழமாக நிலைகொண்டது. அரசும் துணைராணுவப் படைகள் உள்ளிட்ட பெரும் படைகளைக் குவித்து, தயாரிப்புகளைச் செய்து முடித்து தாக்குதலுக்கு தயாரானது. அதுவரை மக்கள் யுத்தக் கட்சிக்கு நக்சல் அமைப்புகளின் வழக்கப்படி உள்ளூர் தயாரிப்புகளான துப்பாக்கிகள், நாட்டு வெடிகுண்டுகள் போன்றவை மட்டுமே பிரதான ஆயுதங்களாக இருந்தன. கட்சியில் இணைந்து கொண்டிருந்த சில முன்னாள் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் அளித்த ஆரம்ப கட்ட பயிற்சிகள் இருந்தன. இவை மரபுரீதியிலான ராணுவத்துக்கான பயிற்சிகளாக மட்டுமே இருந்தன. எண்ணிக்கையிலும், பயிற்சியிலும், ஆயுத பலத்திலும் மேம்பட்ட அரசு படைகளுடன் போரிடுவதற்கான பயிற்சிகளாக இவை இருந்திருக்கவில்லை. அரசு நடத்த இருந்த தாக்குதலை இவற்றை மட்டுமே கொண்டு கட்சி எதிர்கொண்டிருந்தால் விளைவு என்னவாகியிருக்குமோ தெரியாது. ஆனால் வரலாறு வேறு வழியில் இழுத்துச் சென்றது.
------------------------------------
1983 ஜூன் மாதம் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த பெரும் படுகொலைக்கு பிறகு விடுதலைக்குப் போராடும் ஈ-ழ -ப் போராளிகள் தமிழ் நாட்டுக்கு ஆயுதங்களும், தங்கிடமும், பயிற்சியும் தேடி வந்து குவிந்தனர். இலங்கை அரசை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய இந்திய அரசானது இலங்கைக்கு அழுத்தம் தருவதற்காக வி –டு – த - லைப் பு – லி – க -ள், டெலோ, பிளாட், ஈபிஆர் எல் எஃப், ஈரோஸ் ஆகிய அமைப்புகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கத் தொடங்கியது. இந்த அமைப்புகளின் உறுப்பினர்களை இந்திய நக்சல் அமைப்புகளுடன் எந்தத் தொடர்புகளும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று இந்திய உளவு அமைப்புகள் கடுமையாக எச்சரித்திருந்தன.
ஈழத்தைச் சேர்ந்த என் எல் எஃப் டி, ஈழ பாட்டாளி வர்க்க முன்னணி போன்ற மார்க்சிய லெனினிய இயக்கங்களைச் சேர்ந்தவர்களை நக்சல்களை நடத்துவது போலவே இந்திய உளவுத் துறைகள் நடத்தின. அவற்றுக்கு பயிற்சிகள், ஆயுத, பண, தங்கிட உதவிர்கள் அளிக்கப்படாததோடு கண்காணிப்பு போன்ற தொல்லைகளுக்கு உட்படுத்தவும் பட்டன. இந்தியா தனக்கு அடியாட்களை உருவாக்கவில்லை, ஈழத் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை ஆதரிக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக அந்த இயக்கங்களை இந்தியாவில் இருக்க அனுமதித்தது. ஆனால் அவற்றின் செயல்பாடுகளை முடிந்த அனைத்து வழிகளிலும் கட்டுப்படுத்தியது.
அந்த இயக்கங்களும் இந்தியா தேசிய இன விடுதலைக்கு எதிரான நாடு. அது தற்காலிக அரசியல் தேவைகளுக்காக போராளிகளுக்கு பயிற்சியளித்தாலும் ஏதோ ஒரு கட்டத்தில் காட்டிக் கொடுத்துவிடும் என்ற கருத்துக் கொண்டிருந்தன. இப்படிப்பட்ட ஒரு இயக்கத்துடன் தங்களுக்குத் தொடர்புகள் ஏற்பட்டன என்று கொண்டபள்ளி சீத்தாராமைய்யா இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார். இந்தத் தொடர்பு மக்கள் யுத்தக் கட்சியின் போர்த்தந்திரங்களிலும் ஆயுத பலத்திலும் பயிற்சியிலும் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தியது.
முழுவதும் ராணுவத் தன்மை கொண்ட ஈழப் போராளிகளிடம் பயிற்சி பெற்ற அனுபவங்கள் பற்றிய பல நகைச்சுவைக் கதைகளை முன்னாள் போராளிகள் கூறுகின்றனர்.
மக்கள் யுத்தக்கட்சியின் ஆயுதக் குழுக்களிலிருந்த பொருளாதார நிபுணர்கள், அடர் காட்டில் போர்வையைப் போர்த்துக் கொண்டு அதற்குள் மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் எழுதும் கவிஞர்கள், பழங்குடி கலை இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருந்த மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள், மாற்று அரசியல் தவிர வேறொன்றையும் நினைத்துப் பார்த்திராதவர்கள், ஜே என் யூ, பிட்ஸ் பிலானியில் படித்த அறிவியலாளர்கள் என்று பலவகையான அறிவுஜீவிகளை ஈழப் போராளிகள் போர்ப் பயிற்சிகளில் புரட்டி எடுத்தனர். பயிற்சியின் போது தவறிழைத்தவர்களுக்கு விதிவிலக்கின்றி அடி விழுந்தது.
முறைத்துப் பார்த்தாலே கமிட்டி கூட்டி மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, செண்டூஷி, ஊழியர் கொள்கை என்று விமர்சனம் வைக்கும் நக்சலைட்டுகளுக்கு இதெல்லாம் முற்றிலும் புதிதாகவிருந்தது. நக்சல் அறிவுஜீவிகள் இளம் ஈழப் போராளிகளின் அதிரடி நடவடிக்கைகளை புன்னகையுடன் எதிர் கொண்டனர்.
புரட்சி என்பது உணர்வெழுச்சி, தியாகம், வீரம், அர்ப்பணிப்பு, அரசியல் என்பதிலிருந்து ஆயுதப் போராட்டத்துக்கான உடல் தகுதி, உணவு ஆகியவை குறித்து முதல் முதலாக நக்சல் இயக்கம் சிந்திக்கத் தொடங்கியது அந்தக் காலகட்டத்தில் தான்.
இந்திய அரசு இலங்கை அரசுக்கு தொல்லை கொடுக்க ஈழப் போராளிகளுக்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்தது. அதே ஈழப் போராளிகளின் இன்னொரு பிரிவால் தனக்குத் தானே தீராத தலைவேதனையைத் தேடிக் கொண்டது.
--------------------------------------
வட தெலங்கானாவின் காடுகளில் ஒரு போலீஸ் குழு நக்சல் வேட்டையில் ஈடுபட்டிருந்தது. சுமார் பத்து பேர் கொண்ட அந்தக் குழுவின் மீது காட்டில் மறைந்திருந்த மக்கள் யுத்தக் குழுவைச் சேர்ந்த நக்சலைட்டுகள் திடீர்த்தாக்குதல் நடத்தினர். அதில் போலீசார் அனைவரும் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த திடீர் தாக்குதல் என்பது நக்சல்பாரி இயக்கத்தைப் பொறுத்தவரை புதிய உத்தியாகும். அதுவரை போலீசாரைக் கண்டால் சுட்டுக் கொண்டே பின்வாங்கிவிடுவது நக்சலைட்டுகளின் வழக்கம். இப்போது ambush எனப்படும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது நக்சல்பாரி இயக்கம் இன்னொரு பரிமாணத்தை அடைந்து விட்டது என்பதைக் காட்டுகிறது என்று ராணுவ நிபுணர்கள் எழுதினர்.
பின்பு அடுத்தடுத்து காவல்துறை, துணைராணுவ படைகள் சென்ற வாகனங்கள் மீது கண்ணிவெடித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அது இந்தியாவின் வடகிழக்கு மற்றும் பஞ்சாபில் ஆயுதப்போராட்டங்கள் நடந்து வந்த நேரம். அந்தப் பகுதிகளை விட தெலங்கானா கிராமங்களில் அரசு இத்தகைய ஒவ்வொரு தாக்குதலிலும் கொத்துக் கொத்தாக தனது வீரர்களை இழந்தது. மக்கள் துணை ராணுவப்படை வீரர்களை லாரிகளில் கூட்டமாகச் சாவதற்குச் செல்லும் கோழிகள், சிக்கன் என்று கிண்டலாக அழைக்கத் தொடங்கினர்.
இத்தாக்குதல்களின் காரணமாக கிராமங்களின் மீதான போலீஸ் தாக்குதல் குறைந்தது. கட்சி மூச்சு விடுவதற்கும் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கும் நேரம் கிடைத்தது.
இக்கட்டுரை எழுதுவதற்கு தோழர் Vinaya Gam அவர்களுடனான உரையாடல்கள் மிகுந்த உதவியாக இருந்தன. தோழருக்கு நன்றியும் அன்பும்.
All reactions:
You, சிலம்பரசன் சே, Kanagu Kanagraj and 30 others

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...