(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
6. “யதார்த்தத்தை இரக்கமற்ற முறையில் விமர்சனம் செய்தல்”
மக்கள் தங்களைப் பற்றியே பயம் அடையும்படி கற்பித்தால் தான் அவர்களுக்குத் துணிவு ஏற்படும்.
-கார்ல் மார்க்ஸ் (1)
முன்னுரை: இந்த அத்தியாயத்தில் பல்கலையில் டாக்டர் பட்டம் முடித்து விட்டு சமூகத்திற்குள் நுழையும் மார்க்சை பார்க்கிறோம். அவரிடம் இந்த ‘பட்டம்’ துளியளவேனும் எந்த விதமான கௌரவத்தையும் வழங்கிவிடவில்லை. வழக்கமான குறும்புத்தனம், இரக்கமற்ற விமர்சனத்துடன் துடிப்பான இளைஞராக தொடர்கிறார் மார்க்ஸ். இவரைப் போன்ற ஒரு ’விட்டேத்தி’க்கு தந்தையின் சொத்தை தரமாட்டேன் என்கிறார் மார்க்சின் தாயார். இதனால் ஜென்னி மார்க்சின் குடும்பத்துடன் முரண்பாடு வருகிறது. ஆனால் தத்துவத்தை சமூக இயக்கத்துடன் ஒன்றிணைய வைத்தல் என்ற பாதையில் கார்ல் மார்க்ஸ் இக்குடும்ப பிரச்சினைகளால் சலிப்படையவில்லை. குண்டுச் சட்டி வாழ்க்கையான பல்கலை ஆசிரியர் பணி அதற்கு இடையூறாக இருக்குமென்று கருதுகிறார். மற்றபடி இந்த கலகக்காரருக்கு எவரும் உடனே வேலை கொடுத்து விடுவதில்லை.
பிரஷ்யாவின் புதிய அரசரும் ஒரு பழைய பிற்போக்கான அரசரே என்று தெரிந்ததும் பலரும் ஏமாறுகின்றனர். காரல் மார்க்சோ முடிவைக் கண்டு அச்சமடையாத ஆய்வுப் பணியும், அரசர்களை கண்டு அஞ்சாத செயலும்தான் தன்னுடைய இரக்கமற்ற ஆய்வுப் பணி என்று குறிப்பிடுகிறார். இறுதியில் ஒரு அரசு அதிகாரியின் கொடூரத்தன்மை என்பது அவரது தனிப்பட்ட பண்பு நலனால் உருவாதில்லை என்பதை அறிகிறார். ஆம். மார்க்சியத்தின் நுழைவாயிலுக்கு வந்து விட்டார்.
படித்துப் பாருங்கள்!
- வினவு
நீண்ட கால உழைப்புக்குப் பிறகு தத்துவஞானத்தில் டாக்டர் பட்டத்தைப் பெற்ற மார்க்ஸ் 1841ம் வருடத்தின் வசந்தகாலத்தில் சொந்த ஊரான டிரியருக்குச் சென்றார்; புரூனோ பெளவர் அவரை பானுக்கு வரும்படி பல மாதங்களாக அழைத்துக் கொண்டிருந்த காரணத்தால் டிரியரிலிருந்து அங்கே சென்றார்.
டிரியரில் மார்க்சுக்கும் அவருடைய உறவினர்கள் மற்றும் தாயாருக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டது. மார்க்சின் தாயார்; மகன் உதவாக்கரை என்று கூறித் தகப்பனாருடைய சொத்தில் அவருடைய பங்கைக் கொடுப்பதற்கு மறுத்தாள். மார்க்சின் தாயாருக்கும் வெஸ்ட்ஃபாலன் குடும்பத்துக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதன் விளைவாக ஜென்னி மிகவும் துன்பமடைந்தாள். குடும்பம் நடத்துவதற்குத் தனக்கு வருமானம் இல்லாதபடியால் ஜென்னியைத் திருமணம் செய்து கொள்ள முடியாமற் போகலாம் என்ற நிலை மார்க்சுக்கு வேதனையைக் கொடுத்தது.
இந்த சோக நிலைமை மார்க்சின் திருமணம் நடைபெறுகின்ற வரை நீடித்தது என்ற போதிலும் அவரிடம் பலம், உணர்ச்சி, உற்சாகம் முழு அளவில் இருந்தன. தன்னுடைய திறமைகளையும் அறிவையும் தகுந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து அவருடைய இதயத்தில் சுடர்விட்டெரிந்தது; அவர் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாகப் பங்கெடுக்க விரும்பினார்.
மார்க்சுக்கு இருபத்து மூன்று வயதாகி விட்டது. ஆனால் கெளரவமிக்க தத்துவஞான டாக்டர் பட்டம் குதூகலமான இந்த இளைஞனிடத்தில் எவ்விதமான “கெளரவத்தையும்” கூடுதலாக ஏற்படுத்தியதாகத் தோன்றவில்லை. அவர் எப்பொழுதும் போலவே குறும்புச் செயல்களில் ஈடுபட்டிருந்தார், வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைக் கண்டு சிரிப்பதற்குத் தயாராக இருந்தார்.
மார்க்ஸ் முன்பிருந்ததைப் போலவே குதூகலமான கூட்டங்களின் இதய ஒலியாக இருந்தார், அவரிடம் ஒருவர் இதயந்திறந்து பேசலாம், உற்சாகமாகச் சிரிக்கலாம். ஆனால் அவருடைய குத்தலான கிண்டலும் “இரக்கமில்லாதபடி கொட்டும்”, அது எப்பொழுதுமே புண்படுத்தக்கூடியது அல்ல என்று சொல்ல முடியாது. ஆனால் ஒழுக்கக் குறைவு, அடிமைத்தனம், கீழ்மை சிறிதளவே காணப்பட்டாலும் அவருடைய நகைச்சுவை இரக்கமற்றதாக மாறிவிடும். அப்பொழுது அவருடைய “மிகச்சிறந்த நண்பர் கூடத்” தப்ப முடியாது.

மார்க்ஸ் சுயேச்சையான நடவடிக்கைக்குப் பல திட்டங்களைத் தயாரித்தார். 1841ம் வருடத்தின் வசந்தகாலத்தின் போது புரூனே பெளவருடன் சேர்ந்து Archiv des Atheisms (“நாத்திக சஞ்சிகை”) என்ற தீவிரவாத இதழை நடத்துகின்ற எண்ணம் அவரிடம் ஏற்பட்டது. மிதவாத முதலாளி வர்க்கத்தின் தலைவர்களில் ஒருவரான அர்னோல்டு ரூகே அப்பொழுது Deutsch-Jahrbucher (“ஜெர்மன் வருடாந்தர சஞ்சிகை”) என்ற இதழை நடத்தி வந்தார்.
அவர் இதைப் பற்றி 1841 செப்டெம்பரில் பின்வருமாறு எழுதினார்: “இப்பொழுது எனக்கு மோசமான நேரம். ஏனென்றால் பு. பெளவர், கார்ல் மார்க்ஸ், கிறிஸ்டியன் ஸென், ஃபாயர்பாஹ் ஆகியோர் அஞ்சா நெஞ்சத்தைப் பிரகடனம் செய்யப் போகிறார்கள் அல்லது அவர்கள் ஏற்கெனவே பிரகடனம் செய்து விட்டார்கள், நாத்திகவாதம் மற்றும் ஆன்மாவின் அழிவு என்ற கொடியை ஏற்றிவிட்டார்கள்; கடவுள், மதம், அமரத்துவம் ஆகியவை கீழே இறக்கப்படும், மக்களே கடவுள்கள் என்று பிரகடனம் செய்யப்படும். நாத்திகவாத இதழ் வெளிவரப் போகிறது, போலீசார் இதை இப்படியே அனுமதித்தால் கொந்தளிப்பு ஏற்படும். ஆனால் அதைத் தவிர்க்க முடியாது.”(2)
இந்தத் திட்டம் நிறைவேறவில்லை. பானில் பேராசிரியர் பதவியைப் பெறுவதென்ற மார்க்சின் நம்பிக்கைகளும் உடைந்தன. ஏனென்றால் பிற்போக்குவாத விமர்சனத் தாக்கத்தின் விளைவாக புரூனோ பெளவர் தன்னுடைய ஆசிரியர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அங்கே மார்க்சுக்கு வேலை கிடைப்பது கடினம் என்பது தெளிவாயிற்று.
இவை அனைத்தைப் பற்றியும் மார்க்ஸ் அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
உலகத்தோடு தொடர்பில்லாத ஆசிரியரின் பரபரப்பில்லாத வாழ்க்கை அவரைக் கவரவில்லை. அவர் ஃபாயர்பாஹின் “மானிடவியல்” பொருள்முதல்வாதத்தைச் சிறிது காலம் தீவிரமாக ஆதரித்தார். எனினும் ஃபாயர் பாஹ் தன் மனைவியுடன் கிராமத்துக்குச் சென்று, உலகத்திலிருந்து ஒதுங்கி, புரூக்பெர்க் கோட்டையின் கனமான சுவர்களுக்குப் பின்னால் இயற்கையைப் பற்றி அமைதியான தியானத்திலும் உணர்ச்சிமிக்க தத்துவஞான சிந்தனையிலும் ஈடுபட்ட உதாரணம் மார்க்சிடம் எழுச்சியேற்படுத்தவில்லை.
நடைமுறையில் தத்துவஞானம் மற்றும் யதார்த்தத்தின் ஒற்றுமையை ஊக்குவிக்கின்ற செயலில் ஈடுபட வேண்டுமென்று மார்க்ஸ் துடித்தார். தத்துவ ரீதியான ஆராய்ச்சிகளை “வாழ்க்கை ஈடுபாட்டுடன்” இணைக்க வேண்டுமென்ற இத்துடிப்பு எந்த வேலையைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற உயர்நிலைப் பள்ளிக் கட்டுரையிலேயே பிரதிபலிக்கப்படுகிறது, பல்கலைக்கழகத்தில் படித்த வருடங்களின் போது அது பலமடைந்தது.
மார்க்சின் அரசியல் போக்குகளின் வளர்ச்சியும் இன்றைக்கிருக்கும் சமூக யதார்த்தம் அநீதியானது, அருவருப்பானது, அதைப் புரட்சிகரமாக மாற்றுவது அவசியம் என்று அவரிடம் வளர்ச்சியுற்று ஆழமடைந்து கொண்டிருந்த கருத்துக்களும் அதற்கு உதவி செய்தன.
பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது மார்க்ஸ் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார், “கலப்பற்ற” தத்துவத்தில் முற்றிலும் மூழ்கியிருந்தார். பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றுக் கொண்டு வெளியே வந்த பிறகுதான் அவர் திடீரென்று அரசியல் பிரச்சினைகளில் ஈடுபட்டார் என்று கருதுவது வழக்கம். இது உண்மையல்ல.

1837இல் அவர் எழுதிய பல கவிதைகள் அற்பவாத உலகத்துடன் அவர் தீர்மானமாக முறித்துக் கொண்டதைப் பிரதிபலித்தன என்பதை நாம் முன்னரே பார்த்தோம். மேலும் இதே சமயத்தில் எட்வார்டு கான்ஸ் என்பவர் சான்-சிமோனுடைய கருத்துக்களைப் பகிரங்கமான முறையில் பரப்பியதோடு உழைப்பை விடுவிக்க வேண்டும் என்று அறைகூவினார்.
மார்க்ஸ் அவருடைய சொற்பொழிவுகளில் தவறாமல் கலந்து கொண்டு கவனத்தோடு கேட்டார். சீக்கிரத்தில் மார்க்ஸ் அவருடன் நெருங்கிப் பழகினார். மேலும் 1837இல் மார்க்ஸ் டாக்டர் அடோல்ப் ருட்டென் பர்கைத் தன்னுடைய மிகவும் நெருக்கமான நண்பர் என்று குறிப்பிட்டார். அவர் “இளைஞர்கள் சங்கத்தின்” உறுப்பினர் என்பதால் ஒரு தடவை கைது செய்யப்பட்டவர். “தவறான நோக்கங்களைக்” கொண்ட கட்டுரைகளை எழுதிய காரணத்துக்காகப் போலீசின் கண்காணிப்புக்கு ஆளாகியிருந்தார்.
புரூனோ பெளவர் வரலாற்றுப் போக்கின் மீது தாக்கம் செலுத்தக் கூடிய “நடவடிக்கைத் தத்துவஞானத்தை” விரித்துரைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தார்; அதன் காரணமாகவே மார்க்ஸ் அவருடனும் நெருங்கிப் பழகினார். மதத்தைப் பற்றி பெளவர் மற்றும் ஃபாயர் பாஹ் செய்து கொண்டிருந்த விமர்சனமே அந்தச் சமயத்துக்குச் சாத்தியமான ஒரே அரசியல் விமர்சனம் என்று மார்க்ஸ் கண்டார்.
ஆனால் பெளவர் எந்தத் தத்துவ விமர்சனத்தைப் பற்றித் திருப்தி அடைந்தாரோ அது போதுமானதல்ல என்று மார்க்ஸ் தன்னுடைய மாணவ வருடங்களின் இறுதியிலேயே கருதினார். பெளவர் 1841 மார்ச் 31-ந் தேதியன்று மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் காணப்படுகின்ற சுவாரசியமான சொற்றொடருக்கு இக்கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம்: “செய்முறையான தொழிலில் நீங்கள் ஈடுபடுவது பைத்தியக்காரத்தனமாகும். இப்பொழுது தத்துவம்தான் மிகவும் வன்மையான செய்முறை; அது எவ்வளவு விரிவான அர்த்தத்தில் செய்முறைத் தன்மையை அடையும் என்பதை நாம் முன்னறிந்து கூற இயலாது.”(3)
இதற்கிடையில் ஜெர்மனியில் வரலாற்று நிகழ்ச்சிகள் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்தபடியால் தத்துவத்திலும் வாழ்க்கையிலும் அரசியல் பிரச்சினைகள் முன்னணிக்கு வரத் தொடங்கியிருந்தன.

1840-ம் வருடத்தின் கோடைக்காலத்தில் ஒரு புதிய அரசர், நான்காவது பிரெடெரிக் வில்ஹெல்ம் அரியணையில் அமர்ந்தார். அவர் மிதவாதச் சீர்திருத்தங்களைச் செய்வார், அரசியலமைப்புச் சட்டத்தைக் கொடுப்பார் என்று எல்லோருமே எதிர்பார்த்தார்கள். அவர் அழகான சொற்களையும் பரந்தகன்ற சைகைகளையும் நேசிப்பவர். எனவே சுதந்திரம் கிடைக்கும் என்ற வீண் நம்பிக்கைகளை ஊக்குவித்தார். ஆனால் உண்மையில் அவர் “பிற்போக்குத்தனமான புத்தார்வவாதக்” கொள்கையைப் பின்பற்றினார்; முடியரசு மற்றும் கிறிஸ்துவத் திருச்சபையின் சக்தியைப் பலப்படுத்துவதில் மட்டுமே அக்கறை காட்டினார்.
மார்க்ஸ்-பிற்காலத்தில் அவரே எழுதியதைப் போல-இந்தப் புதிய அரசருடைய “மதிப்பையும் பாத்திரத்தையும்” உடனடியாகக் கண்டார். இந்த “அற்பவாதிகளின் அரசர்” முடிசூட்டு விழாவில் “தன்னுடைய இதயமும் மனமும் எதிர்கால முக்கியமான அரசுச் சட்டமாக இருக்கும் என்று அறிவித்தார்”.(4) அவர் பிரஷ்யாவைத் தன்னுடைய “இராஜ்யம்” என்றும் ஜெர்மன் மக்கள் இன்னும் வயதுக்கு வராத குழந்தைகள், பிர்ச் பிரம்பினாலும் இஞ்சிரொட்டியினாலும் பாடம் கற்பிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் கூறினார்.
பிர்ச் “பிரம்பு” பிரதானமாக, மதத்துக்கு எதிராகப் போராடுவதற்குத் துணிந்த இளம் ஹெகலியவாதிகளுக்கு எதிராகவே உபயோகிக்கப்பட்டது. பிரபலமான இளம் ஹெகலியவாதிகள் பல்கலைக்கழகப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார்கள். ஹெகலியவாதத்தைத் தத்துவ ரீதியாக மறுப்பதற்காக வயோதிகரும் பாதி முதுமைத் தளர்ச்சியடைந்த கருத்துமுதல்வாதத் தத்துவஞானியுமான ஷேல்லிங் பெர்லினுக்கு வரவழைக்கப்பட்டார்.
பிரமைகள் எவ்வளவு வேகமாகத் தோன்றினவோ அவ்வளவு வேகமாக மறைந்தன. பிரஷ்ய அரசிடம் நிதானமான எதிர்ப்பைக் காட்டிய இளம் ஹெகலியவாதிகள் முடியாட்சி இடதுசாரித் திசையில் நகரும் என்ற எல்லா நம்பிக்கைகளையும் இழந்துவிட்டபடியால் தாங்களே இடதுசாரித் திசையில் வேகமாக முன்னேறத் தொடங்கினார்கள்.
நாட்டில் மிதவாத ஜனநாயக இயக்கம் பலமடைந்தது; மக்களின் அரசியல் உணர்வில் விழிப்பேற்பட்டது. ஜெர்மனியில் தொழில்துறை வளர்ச்சியடைந்து தேசிய முதலாளி வர்க்கம் பலமடைந்த பொழுது முடியாட்சியின் நிலப்பிரபுத்துவ விருப்பார்வங்கள் மென்மேலும் காலங்கடந்தவையாக மாறின.
இந்தச் சமயத்தில் மார்க்ஸ் ஒரு புதிய நடவடிக்கைக்குத் தன்னைத் தயாரித்துக் கொண்டிருந்தார். “முற்றிலும் வித்தியாசமான தன்மையைக் கொண்ட அரசியல், தத்துவஞானப் பணிகளின்”(5) காரணமாகப் பண்டைக்கால கிரேக்கத் தத்துவஞான ஆராய்ச்சித் துறையில் என்னுடைய முந்திய திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்று 1841ம் வருடத்தின் முடிவில் அவர் எழுதினார்.
அவர் குறிப்பிட்ட பணிகள் எவை?
முதலாவதாகவும் முதன்மையாகவும் மார்க்ஸ் மதத்துடன் கணக்குத் தீர்த்துக் கொள்ள விரும்பினார், அவர் கிறிஸ்துவ மதக் கலையைப் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் இந்தச் சமயத்தில் அரசு அமைப்பைப் பற்றிய ஹெகலியவாதக் கருத்தை விமர்சித்து எழுதிக் கொண்டிருந்த நூலில்தான் அவருடைய அரசியல் விருப்பார்வங்கள் இன்னும் திட்டவட்டமாக வெளிப்பட்டன.

ஹெகலுக்கு-அவரைப் போலவே இளம் ஹெகலியவாதிகளுக்கும்-அரசியலமைப்புச் சட்ட முடியாட்சியே இலட்சியமாக இருந்தது; ஆனால் மார்க்ஸ் இந்தக் “கலப்படப் பொருளின்” மீது யுத்தப் பிரகடனம் செய்தார். “அது முதலிலிருந்து முடிவுவரை தன்னை மறுத்துக் கொண்டு அழித்துக் கொள்கிறது”(6) என்று அவர் எழுதினார்.
1842 மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் கூறப்பட்ட இக்கருத்து மார்க்சினுடைய அரசியல் தீவிரவாதத்துக்குச் சான்றாக இருக்கிறது. அன்றைய முடியாட்சி அமைப்பை மிதவாதத் தன்மை உடையதாக்குவது தீர்வாகாது, அதை ஒழிப்பதுதான் தீர்வு என்று அவர் கருதினார். அவர் ராஜியப் பிரமுகர்களைப் பற்றி அதிகமான வெறுப்போடு “அதிகமான நம்பிக்கை கொண்ட போக்கிரிகள்”, “அனுபவமுள்ள பகட்டர்கள்”, “மக்களை விலங்குகளின் தரத்துக்கு இழிவுபடுத்துவதே”(7) அவர்களுடைய அரசாங்கக் கொள்கை என்று எழுதினார்.
மார்க்ஸ் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகளில் பிரஷ்ய முடியாட்சியுடன் பகிரங்கமான முதல் சண்டையில் ஈடுபட்டார் (சமீபத்தில் வெளியான பிரஷ்யத் தணிக்கை உத்தரவைப் பற்றிய விமர்ச்சனக் குறிப்புகள் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றி விவாதங்கள்). பத்திரிகை சுதந்திரம் பொதுவான அரசியல் சுதந்திரங்களின் குறியீடாக இருப்பதால், “பத்திரிகைச் சுதந்திரம் இல்லாமலிருப்பது மற்ற அனைத்துச் சுதந்திரங்களையும் கற்பனை ஆக்கிவிடுவதால்”(8) இந்தப் பிரச்சினை மார்க்சின் கவனத்தை ஈர்த்தது.
1841ம் வருடத்தின் இறுதியில் ஒரு புதிய தணிக்கை உத்தரவு வெளியிடப்பட்டது. அரசருடைய கொள்கைகள் முற்போக்கானவை என்று சொல்லப்பட்டன. ஆனால் அவை உண்மையில் பிற்போக்குத்தனமாக இருந்தன. அக்கொள்கைகளின் போலித் தன்மையின் நிலையான உருவமாக இந்த ஆவணம் இருந்தது.
இந்த உத்தரவு வெளியான பொழுது முதலாளி வர்க்க மிதவாதிகளின் முகாம் உற்சாகத்தில் மூழ்கியிருந்த பொழுது மார்க்ஸ் சொல்லலங்காரம் என்ற போர்வையை அகற்றி “தெய்வீக உரிமையைக் கொண்ட அரசர்” வழங்கியிருக்கும் சுதந்திரங்களின் வறுமையை இரக்கமின்றி எடுத்துக்காட்டினார்.
முதலாளித்துவ யதார்த்தத்தைப் பற்றித் தன்னுடைய விமர்சனத்தின் கோட்பாடுகளை மார்க்ஸ் பின்வருமாறு வகுத்தளித்தார் :
“இன்றைக்கிருக்கும் எல்லாவற்றையும் பற்றிய இரக்கமற்ற விமர்சனத்தை நான் குறிப்பிடுகிறேன் – அடையப்படுகின்ற முடிவுகளைப் பற்றி அச்சமில்லாதிருப்பது, ஆட்சியிலிருப்பவர்களுடன் சண்டையிட்டுக் கொள்வதைப் பற்றியும் அதைப் போலவே சிறிதும் அச்சமடையாதிருத்தல் ஆகிய இரண்டு அர்த்தங்களிலுமே இரக்கமில்லாதிருத்தல்.”(9)
மார்க்ஸ் எழுதிய இந்த வாக்கியங்கள் அரசியல் ரீதியாக மட்டுமில்லாமல் தார்மிக ரீதியிலும் அவரை எடுத்துக்காட்டுகின்றன. இளம் மார்க்ஸ் தன்னுடைய ஆராய்ச்சியில், விஞ்ஞான படைப்பு வேலையில் பின்பற்றிய அளவுகோள்களை நாம் புரிந்து கொள்வதற்கு அவை உதவுகின்றன.
உண்மையை ஆழமாகவும் முரணின்றியும் வெளிப்படுத்த, விஷயங்களின் தர்க்கத்தைத் துணிவாகவும் விடாப்பிடியாகவும் பின்பற்ற, “ஒவ்வொரு பொருளைப் பற்றியும் அதன் சாராம்சத் தன்மைக்கு ஏற்ப எதிர்ச் செயலாற்றுகின்ற சிந்தனையின் சர்வாம்சமான தாராளத் தன்மையைத்”(10) தேட மார்க்ஸ் பாடுபட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு ஆராய்ச்சியாளர் அந்நியச் சிந்தனைகள் தன்னை உண்மையிலிருந்து திருப்ப அனுமதிக்கக் கூடாது. “வலது அல்லது இடது பக்கம் பார்க்காமல் நேரடியாக உண்மையைத் தேடுவது ஆராய்ச்சியாளரின் முதல் கடமை அல்லவா? குறிப்பிட்ட வடிவத்தில் அதை எடுத்துக் கூறுவதை நான் மறக்கக் கூடாது என்பதில்லாவிட்டால் பொருளின் சாராம்சத்தை மறக்காதிருப்பேனா?”(11)
விஞ்ஞான ஆராய்ச்சியில் விளைவு மட்டும் முக்கியமல்ல, அதற்கு இட்டுச் செல்கின்ற பாதையும் முக்கியமானதே. இங்கே ஆராய்ச்சியாளரின் மனோபாவமும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகிறது: ஒரு குறிக்கோளை அடைவதற்குத் தவறான வழிகளைக் கையாள வேண்டியிருந்தால் அது நியாயமான குறிக்கோளல்ல. விஞ்ஞானத்தில் கோழைத்தனம், அரை மனத்துடன் செயலாற்றல் விஞ்ஞானத்துக்கு துரோகம் செய்வதாகும்.
பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றிய விவாதங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கட்டுரையில் மார்க்ஸ் இந்தக் கருத்தை இன்னும் திட்டவட்டமான வடிவத்தில் எழுதுகிறார்.
பொதுவாக எழுத்துப் பணியைப் போலவே விஞ்ஞானமும் ஒரு “தொழில்” அல்ல. அது ஒரு தொழிலின் நிலைக்குத் தாழ்ந்து விடக் கூடாது. “எழுத்தாளன் வாழ்க்கை நடத்துவதற்காகவும் எழுதுவதற்காகவும் சம்பாதிக்க வேண்டும் என்பது உண்மையே, ஆனால் அவன் வாழ்வதும் எழுதுவதும் சம்பாதிப்பதற்காக இருக்கக் கூடாது.
பெரன்ழே பின்வருமாறு கூறினார் :
நான் பாடல்களை எழுதுவதற்கே வாழ்கிறேன்;
ஆனால் தாங்கள் என்னைப் பதவியிலிருந்து விலக்கினால்,
நான் வாழ்வதற்காகப் பாடல்களை எழுதுவேன்.
ஒரு கவிஞனுக்குக் கவிதை வாழ்க்கைக்கு ஒரு சாதனமாக மாறும் பொழுது அவன் தனக்கே உரிய துறையை விட்டுப் போய்விடுகிறான் என்ற உண்மை இங்கே நகைச்சுவையுடன் ஒத்துக் கொள்ளப்படுகிறது.
எழுத்தாளன் தன்னுடைய எழுத்தை ஒரு சாதனமாக நினைப்பதில்லை. அது ஒரு குறிக்கோளாக இருக்கிறது. அது அவனுக்கும் மற்றவர்களுக்கும் மிகக் குறைந்த அளவிலேயே ஒரு சாதனமாக இருப்பதால், அவசியம் ஏற்படுகின்ற பொழுது அவன் அதன் இருத்தலுக்காகத் தன்னுடைய இருத்தலை தியாகம் செய்கிறான்.”(12)
இந்த வார்த்தைகளில் மார்க்ஸ் தன்னுடைய படைப்பு நெறியை எடுத்துரைத்தார். அவர் “வாழ்க்கை நடத்துவதற்காகப் பாடல்கள் எழுதவில்லை”, அதற்கு மாறாக விஞ்ஞான உண்மையைத் தேடுகின்ற முயற்சியில் தன்னுடைய சொந்த வாழ்க்கையை தியாகம் செய்தார் என்பதைத் தன்னுடைய மொத்த வாழ்க்கையின் மூலம் நிரூபித்தார்.
புதிய அரசருடைய ஆணைகளின் போலி மிதவாதத்தைக் கிண்டல் செய்ததுடன் மார்க்ஸ் நின்றுவிடவில்லை. “கருத்துக்களுக்கு எதிராக” சட்டங்களே இயற்றுவதை அனுமதிக்கின்ற அமைப்பின் சமூக சாராம்சத்தை அவர் வெளிக்காட்டினார். இத்தகைய சட்டங்கள் மக்களுக்கு விரோதமான ஆட்சியில், “அரசின் பகுத்தறிவும் அரசின் ஒழுக்கநெறியும் தன்னிடம் மட்டுமே இருப்பதாக ஏதாவது ஒரு உறுப்பு கற்பனை செய்கின்ற சமூகத்தில், கொள்கையளவில் மக்களை எதிர்க்கின்ற அரசாங்கத்தில்”(13) மட்டுமே சாத்தியம் என்பதை அவர் எடுத்துக்காட்டுகிறார்.
“ஒரு தந்திரமுள்ள அரசியல் கோஷ்டியின் தீங்கான மனம்” மட்டுமே “பழிவாங்கும் சட்டங்களே, கருத்துக்கு எதிரான சட்டங்களைக் கண்டுபிடிக்கிறது”. கருத்துக்களுக்கு எதிரான சட்டங்கள் கோட்பாடுகள் இல்லாமையை, அரசைப் பற்றி ஒழுக்கமில்லாத, கொச்சையான பொருளாயதக் கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.”(14)
மக்கள் விரோதச் சட்டங்களை இயற்றுவதன் மூலம் அந்த “கோஷ்டி” தன்னைச் சட்டத்துக்கு வெளியே நிறுத்திக் கொள்கிறது. அரசைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்ற அதன் நடவடிக்கைகள் உண்மையில் அரசு எதிர்ப்புத் தன்மையைக் கொண்டிருக்கின்றன என்ற புரட்சிகரமான முடிவுக்கு மார்க்ஸ் வருகிறார்.
இங்கே மார்க்ஸ் அரசை இன்னும் சூக்குமமான தத்துவஞான நிலையிலிருந்து தான் விமர்சிக்கிறார். அரசின் வர்க்க-வரலாற்று சாராம்சத்தைப் புரிந்து கொள்வதற்குரிய அணுகு முறையை அவர் நெருங்கத் தொடங்கியிருக்கிறார். அரசின் புறநிலையான, தனிப்பட்ட நபரைச் சேராத தன்மையைப் பற்றி அவர் கவனத்தைக் குவிப்பது இத்தகைய தெளிவை நோக்கி அவர் ஒரு காலடி வைப்பதாகும்.
அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு உண்மையான காரணம் அந்த அல்லது இந்த அதிகாரியின் குணாம்சத்தில், அவருடைய மனோபாவத்தில் அடங்கியிருக்கவில்லை, அது “தலைகீழ் உலகத்தின்” வெளியீடு என்று மார்க்ஸ் எடுத்துக்காட்டினார்.
குறிப்புகள்:
(1) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 178.
(2) A. Cornu, Karl Marx und Friedrich Engels. Leben und Werk, Bd. 1, S. 245.
(3) Marx/Engels, Gesamtausgabe, Bd. 1, Halbband 2, S. 250.
(4) Marx/Engels,Collected Works, Vol. 3, p.139.
(5) Marx/Engels, Gesamtausgabe, Bd. 1, Halbband 1, S. 34.
(6)Marx, Engels, Collected Works, Vol. 1, pp. 382—83.
(7) Ibid., p. 384.
(8) Ibid., p. 180.
(9) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 142.
(10) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 113.
(11)Ibid., p. 111
(12) Ibid., pp. 174-75,
(13) Ibid., p. 120.
(14)Ibid.
– தொடரும்
No comments:
Post a Comment