வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்துருவம்
வரலாற்றுப் பொருள் முதல்வாதம் அல்லது வரலாறு பற்றிய பொருள் முதல்வாதக் கருத்துருவம் என்பது வரலாற்றை ஆய்வதற்கு இயங்கியற் பொருள் முதல்வாத மெய்யியலைப்பிரயோகிப்பதைக் குறிக்கும். மார்க்ஸ"க்கும் ஏங்கெல்ஸ"க்கும் முன்னர், அரசர்களதும் அரசியர்களதும் தளபதிகளதும் பொதுமக்களுக்கு ஒரு பங்குமே இல்லாத-அவர்களது ஆசாபாசங்களதும் கதைகளாகவே முதலாளிய வரலாற்றாசிரியர்கள் வரலாற்றை வழங்கி வந்தனர். அவர்களுடைய கரங்களில் வரலாறென்பது உப்புச்சப்பற்ற முறையில் மாண்டொழிந்த தேதிகளை ஒப்பிப்பதாகியது.
இது அவாகட்கு மிகவும் வசதியாயிருந்தது.ஏனெனில், நடைமுறை யிலிருந்த சுரண்டல் முறையைக்காப்பதற்கு,சமுதாயம் என்றுமே மாறாது என்றும் வர்க்கங்கள் எப்போதுமே இருந்து வந்தன என்றும் தொடர்நதும் என்றென்றைக்குமே இருந்து வரும் என்றும் ஏற்கெனவே விதிக்கப்பட்ட இத்தவாறான விடயங்களின் ஒழுங்கை மாற்ற முயல்வதிற் பயனில்லை எனவும் அவர்கள் காட்டவிரும்பினர். பைபிளில் வரும் “செல்வந்தன் தனது கோட்டையிலும் ஏழை வாசலிலும்” எனும் வாக்கியம் இந்தப் பார்வைக்கோணத்தைப் பொழிப்பாக எடுத்துக் கூறுகிறது.
எனினும் வரலாற்றுப்பொருள்முதல் வாதம் இந்தப் பழைய கருத்துருவத்தை மறுத்து அதனிடத்தில் ஏன் குறிப்பிட்ட ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில விடயங்கள் நிகழ்ந்தன என்று கூறும் விஞ்ஞானரீதியான விளக்க முறையைக் கொண்டு வந்தது. வேறு விதமாகக் கூறுவதாயின்,வரலாற்றுப பொருள் முதல்வாதம் சமூக விருத்தியின் விதிகளை வெளிக்கொண்டுவந்து அதன் மூலம் வரலாற்றின் முன்னோக்கிய நடைக்கு துணை செய்யக்கூடிய ஒரு வலிய ஆயுதத்தைப் புரட்சிவாதிகளிடம் கையளித்துள்ளது.
எனினும், சமூகத்தின், புறவாழ்வின் பல்வேறு சிக்கலான நிலைமை களிடையே, சமுதாயத்தின் உறுப்பமைதியையும் சமூக அமைப்பின் பண்பையும் ஒரு அமைப்பினின்று இன்னொன்றிற்குச் சமூகத்தின் விருத்தியையும் தீர்மானிக்கும் சக்தி எது?
மனித இருப்பிற்கு அவசியமானவையான பிழைப்புக்கான வழிவகை களைப் பெறும் முறையும் சமூகத்தின் வாழ்வுக்கும் இருப்புக்கும் அத்தியா வசியமான உணவு, உடை, பாதஅணி,வீடுகள்,எரிபொருள், உற்பத்திச் சாதனங்கள் ஆதியனவற்றின் உற்பத்தி முறையுமே இச்சக்தி என்று வரலாற்றுப் பொருள் முதல்வாதம் கூறுகிறது.
பொருள் சார்ந்த மதிப்பை உருவாக்க மனிதர்கட்கு உதவும் கருவிகளும் செய்முறைத் திறமைகளிற் பயிற்றப்பட்டதன் விளைவாக உற்பத்திக் கருவிகளை இயக்கிப் பொருள்சார்ந்த மதிப்பின் உற்பத்தியிற் தொடரும் மக்களும்,கூட்டாகச் சமூகத்தின் உற்பத்திச் சக்திகளாகின்றன.
அதேவேளை,மனிதர் தனித்து உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. அவர்கள் சமூகங்களில் குழுக்களாகப்பொதுவான முறையில் அதைச் செய்கின்றனர்.எனவே, எல்லாக் காலத்தும் எல்லா நிலைமைகளின் கீழும் உற்பத்தி என்பது சமூக உற்பத்தியேயாகும். இந்த உற்பத்தியின் உறவுகள் ஒன்றில் சமத்துவம், ஒத்துழைப்பு, பரஸ்பர உதவி, சுரண்டல் இல்லாமை சார்ந்து அல்லது எசமான் - வேலையாள், ஒரு வர்க்கம் இன்னொன்றைச் சுரண்டுவது என்ற விதமாக அமையலாம். அந்த உறவுகள் எப்படியானவையாயினும்,சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகள் போன்று அவையும் உற்பத்தியின் ஒரு அத்தியாவசியமான கூறாகின்றன.
எனவே,உற்பத்திமுறை என்பது உற்பத்திச்சக்திகளையும் மனிதரின் உற்பத்தி உறவுகளையும் உள்ளடக்கி அவற்றின் ஒருங்கிணைவின் வடிவமாகிறது.
உற்பத்தி பற்றிக் கவனிப்பதற்குரிய முதலாவது அம்சம் ஏதெனில், நாம் ஏற்கெனவே இயங்கியலினின்று கற்றது போல, அது என்றுமே அசையாதிருப்பதல்ல. அது மாறும்போது, முழுச்சமூக அமைப்பினதும் சமூகச் சிந்தனைகளதும் அரசியற் பார்வைகளதும் அரசியல் நிறுவ னங்களதும் மாற்றத்தையும்,அதாவது,சமுதாயத்தின் புனர் நிர்மாணத்தை அது வேண்டிநிற்கிறது. ஒரு சமூகத்தின் உற்பத்திமுறை எவ்வாறோ,அவ்வாறே சமுதாயமும் அதன் சிந்தனைகளும் கொள்கைகளும் அரசியல் விழுமியங்களும் யாப்புக்களும் (ஸ்தாலின்).
எனவே சமுதாயத்தின் விருத்தியின் வரலாறு என்பது அடிப்படையில் உற்பத்தியின் விருத்தியின் வரலாறு, பொருள்சார்ந்த விழுமியங்களது, உற்பத்தியாளர்களது வரலாறு, சமுதாயத்தின் இருப்புக்கு அவசியமான பொருள்சார்ந்த விழுமியங்களின் உற்பத்தியைச் செய்வோரும் உற்பத்திச் செயல்முறையின் பிரதான சக்தியுமான உழைக்கும்மக்களது வரலாறு. எனவேதான் வரலாற்றின் விதியை அறிவதற்கான தடத்தை மனிதர்களது மனத்திற்குள் அல்லாமல் சமூகத்தின் பொருளாதார வாழ்க்கையிலேயே தேடவேண்டும்.
இனி,பொருள் சார்ந்த மதிப்புக்களின் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்கள் எவ்வாறு ஏற்படுகின்றன எனவும் அவற்றின் தோற்றுவாய் ஏதெனவும் கவனிப்போம். முதற்கண், அவை உற்பத்திக் கருவிகளில் ஏற்படும் மாற்றங்களிலும் விருத்திகளிலும் ஏற்படுகின்றன. பின்பு,இந்த மாற்றங்கட்கு ஏற்றவாறும் அவற்றுக்கு உடன்பாடாகவும் மனிதரின் உற்பத்தி உறவுகளும் பொருளாதார உறவுகளும் மாறுகின்றன. எனவே, உற்பத்திச் சக்திகள், வெறுமனே உற்பத்தியின் மிக இயங்குவலியுள்ள சக்திகள் மட்டுமல்லாமல், உற்பத்தியின் விருத்திகளைத் தீர்மானிக்கும் கூறுகளுமாகும்.
பண்டைக் காலந்தொட்டு எங்கள் காலம் வரையில் உற்பத்திச் சக்திகளின் விருத்தியைப் பற்றிய அண்ணளவான சித்திரம் இது;“செப்பமற்ற கற்கருவிகளினின்று அம்பு-வில்லுக்கான நிலை மாற்றமும்,அதையொட்டி,வேடுவ வாழ்க்கையினின்று விலங்குகளைவசப்படுத்தித் தொடக்க நிலையிலான மந்தை மேய்ப்புக்கு மாற்றமும்;கற்கருவிக ளினின்று உலோகக் கருவிகட்கான (இரும்பு கோடரி,இரும்பு முனை பொருத்திய மரத்தாலான ஏர் ஆதியன)மாற்றமும் அதனோடு இணைந்து வணிகத்திற்கும் கமத்தொழிலுக்குமான மாற்றமும்: திரவியங்களில் கைவினைக்கு உகந்தவாறு உலோகக் கருவிகளில் முன்னேற்றம், கொல்லர் உலையின் தோற்றம்,மட்பாண்டங்களின் தோற்றம், முதலாக அவற்றையொத்தமுறையில் கைவினைகளதும் கமத்தொழிலினதும் விருத்தி,சுயாதீனமான கைவினைத் தொழிலின் விருத்தியும் அதையடுத்து உற்பத்தியும்;கைவினைக் கருவிகளினின்று இயந்திரங்கட்கும் கைவினையினின்றும் உற்பத்தியினின்றும் இயந்திர உற்பத்திக்குமான மாற்றமும்:இயந்திர முறைக்கான மாற்றமும் அதனின்று பெருமளவிலான நவீன தொழில் முறைக்கும் மனித வரலாற்றின் போக்கில் சமூக உற்பத்திச் சக்திகளது விருத்தி பற்றிய பொதுவானதும் முழுமையற்றதுமான சித்திரம் இதுவே” (ஸ்தாலின்)
சமூகத்தின் உற்பத்திச் சக்திகளில் ஏற்பட்ட இம்மாற்றங்கட்கு இசைய மனிதரின் உற்பத்தி உறவுகளும் அவர்களது பொருளாதார உறவுகளும் மாறுகின்றன. சமூகத்தின் உற்பத்திச் சக்திகளில் ஏற்பட்ட மாற்றங்களையொட்டி வரலாற்றின் வழியே ஏற்பட்ட ஐந்துவிதமான சமுதாயங்கள் பற்றி நாம் அறிவோம். அவை முறையே, கம்யூன், அடிமைமுறை, நிலமானிய, முதலாளிய, சோஷலிச சமுதாயங்களாகும். எல்லாவற்றிலும் உற்பத்திக் கருவிகளில் ஏற்பட்டமாற்றங்களும் விருத்தியும் சார்ந்தே உற்பத்திச் சக்திகளின் விருத்தி ஏற்பட்டது.
ஆதிகம்யூன் சமூகத்தில் வர்க்கங்கள் இருக்கவில்லை. அது வர்க்கமற்ற சமுதாயம். அங்கே சுரண்டுவோரோ சுரண்டப்பட்டோரோ இல்லை. இது ஏனெனில், மனிதனை மனிதனும் ஒரு வர்க்கத்தை இன்னொரு வர்க்கமும் சுரண்டுவதற்கான அடிப்படை அப்போது ஏற்பட்டிருக்கவில்லை. இதற்கான காரணம் ஏதெனில், உற்பத்திக் கருவிகள் மிகவும் தாழ்ந்த நிலைக்கே விருத்திபெற்றிருந்தன என்பதாகும். இந்த நிலையில் உபரியாக உற்பத்தி செய்ய மனிதன் கற்றிருக்கவில்லை. தன் உயிர் வாழ்தலுக்குத் தேவையானதை மட்டுமட்டாக உற்பத்திசெய்யவே அவனுக்கு இயலுமா யிருந்தது.மேலும்,மர ஈட்டி,அம்பும் வில்லும் போன்ற உபகரணங்கள் எவராலும் உருவாக்கக்கூடியளவுக்கு எளிமையான வையாக இருந்ததால் அவற்றைச் சிலர் தமதாக்கிக் கொள்ளுவது இயலாததாயிருந்தது. இத்தகைய நிலைமைகளின் கீழ், மனிதரின் உற்பத்தி உறவுகள் சமமானோரிடையிலான உறவாக மட்டுமே இருப்பது அவசியமாயிற்று. மனிதனை மனிதனோ ஒரு வர்க்கத்தை இன்னொன்றோ சுரண்டுவதற்கு ஒரு அடிப்படையும் இருக்கவில்லை. அதனாலேயே குலக்குழுக்களிடையிலான போர்களில் எவரும் சிறைப்பிடிக்கப்படவில்லை. சண்டையிற் தோற்றோரின் தலைகள் வெட்டி விழுத்தப்பட்டன. ஏனெனில் அவ்வாறு செய்யாவிடின், அவர்களுக்கு உணவூட்டவேண்டியிருக்கும். அது அவர்களுக்குக்கட்டுப்படியாகாத ஒன்று.
எனினும்,உற்பத்திக் கருவிகள் மேலும் உயர்ந்த ஒரு மட்டத்துக்கு விருத்தியடைந்தநிலையில்,மனிதனால்,முதன்முறையாக,உபரியாக,அதாவது தனக்கு அத்தியாவசியமானதற்கும்மேலாக, உற்பத்தி செய்ய முடியுமாயிற்று. இவ்வாறு சுரண்டலுக்கான அடிப்படை வந்து சேர்ந்தது. இந்த நிலையில், போரிற் சிறைப்பிடிக்கப்பட்டோர் கொல்லப்படவில்லை, மாறாக வென்றவர்கட்காக வேலை செய்வதற்காக அடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்டனர். இவ்வாறு அடுத்த சமுதாய வடிவம், அதாவது அடிமைச்சமுதாயம் எழுந்தது. அடிமைகளுக்குச் சொந்தமானவர்களுக்கும் அடிமைகட்கும் மோதல் நிகழ்ந்தது. ஜூலியஸ் சீசர் எவ்வாறு இங்கிலாந்து உட்பட ஐரோப்பாவின் பெரும் பகுதியைக் கைப்பற்றினார் என்றும் வெற்றியுடனும் சங்கிலியால் தன் தேர்ச்சில்லுக்குப் பிணைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றிய அடிமைகளுடன் ரோமாபுரிக்கு மீண்டாரென்றும் பெரும்பாலான மாணவர்கள் வாசித்திருப்பார்கள்.
எனினும், உற்பத்தி உபகரணங்கள் தொடர்ந்தும் விருத்தி பெற்று வந்தன. இவ்வாறான விருத்தி நிலையில் அடிமைகள் தொடர்ந்தும் பொருத்தமானவர்களாக இருக்கவில்லை. ஏனெனில் எசமான் தனது இஷ்டப்படி விற்கவோ சுடவோ முடியுமானபடி எசமானின் தனிச் சொத்தாக இருந்த அடிமைக்கு மேலதிகமாக உற்பத்தி செய்வதற்கான தூண்டுதல் எதுவும் இருக்கவில்லை. அவனது உற்பத்திக்கும் அவனுடைய ஊதியத்திற்கும் எதுவிதமான உறவும் இருக்கவில்லை.
இவ்வாறு உற்பத்தியில் மனிதரிடையிலான புதியதொரு உறவுக்கான தேவை - மேலும் அதிக உற்பத்தி செய்யுமாறு தூண்டுதலுடைய மனிதருக்கான தேவை - எழுந்தது. ஸ்பாட்டகஸ் தலைமை தாங்கியது போன்ற அடிமைகளின் கிளர்ச்சிகள் இந்தப் போக்கைத் துரிதப்படுத்தின. அடிமையின் இடத்திற்கு வந்த பண்ணையாள் நிலத்திற்குப் பிணைக் கப்பட்டு நிலவுடைமைக்காரனின் நிலத்தில் குறிப்பிட்ட நாட்களிலும் தேவையான போதும் பணியாற்றுமாறான கட்டாயத்துக்குப் பட்டிருந்தார். எவ்வாறாயினும் அவருக்குத் தனது உற்பத்தியின் பயனை அனுபவிக்கும் படியாக ஒரு சிறிது நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதுவே நிலமானியச் சமுதாயம். இங்கே நிலவுடைமைக்காரனும் பண்ணையாளும் எதிரெதிர்த் துருவங்களில் நின்றனர்.
உற்பத்தி உபகரணங்கள் மேலும் விருத்தி பெற்று இயந்திர உற்பத்தி
நிலை எட்டப்பட்ட போது படிப்பறிவற்ற பண்ணையாளாற் பயனில்லாது போகிறது. சிக்கலான இயந்திரங்களை இயக்கவல்ல தொழிலாளிஅவனது இடத்தைப் பிடிக்க வேண்டி நேரிடுகிறது. இவ்வாறு முதலாளி யையும் தொழிலாளியையும் எதிரெதிற்துருவங்களிற் கொண்ட முதலாளிய சமுதாயம் எழுந்தது.
சமுதாயத்தில் ஏற்பட்ட ஒவ்வொரு மாற்றமும் உற்பத்தி உபகர ணங்களில் ஏற்பட்ட மாற்றங்களால் வரையறுக்கப்பட்டும் அம்மாற்ற ங்களைத் தொடர்ந்துமே நிகழ்ந்துள்ளன என நாம் காணலாம்.எனவே சமூகத்தின் வரலாறு என்பது பொருள் சார்ந்த மதிப்புக்களின் உற்பத்தி யாளர்களது வரலாறேயாகும்.
இவ்விடத்து நாம் அவதானிக்க வேண்டியவொரு அம்சம் ஏதெனின் உற்பத்தி உபகரணங்களின் விருத்தியும் அதன் விளைவாக மனிதரது உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாற்றமும் பழைய சமுதாயத்தினுள்ளே நிகழ்வது மட்டுமன்றி மனிதனது விருப்பு வெறுப்புக்கட்கு அப்பாற்பட்டே நிகழ்கின்றன.எடுத்துக்காட்டாக,தீயையோ இரும்பினது பயனையோ விலங்கினங்களை வசப்படுத்துவதையோ மனிதன் முதன் முதலாகக் கண்டறிந்தபோது, அவற்றையடுத்துச் சமுதாயத்தில் எவ்விதமான மாற்றங்கள் நிகழும் என்பதை உணராதவனாயே இருந்தான்.ஆயினும்,அதே சமயம் உற்பத்தி முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் வேகத்தை யொட்டி மனிதரின் உற்பத்தி உறவுகள் மாறாதபோது, மாற்றத்தைத் துரிதப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் புதிய சிந்தனைகளும் புதிய கொள்கைகளும் உருவாகின்றன. கூர்ப்பு புரட்சியாக மாறுகிறது.
“அரசியற் பொருளாதாரத்தின் விமர்சனம்’ எனும் தனது நூலுக்கான வரலாற்று முக்கியம் வாய்ந்த முன்னுரையில், மார்க்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் சாராம்சத்திற்கான விளக்கத்தைத் தருகிறார்“தமது வாழ்நாளின் சமூக உற்பத்தியின் போது,இன்றியமையாததும் தமது விருப்புவெறுப்புக்கு அப்பாற்பட்டதுமான திட்டவட்டமான உறவுகட்குள் மனிதர் புகுகின்றனர். இந்த உற்பத்தி உறவுகள் அவர்களது பொருள்சார்ந்த உற்பத்திச் சக்திகளின் திட்டவட்டமான ஒரு கட்டத்திறகுப் பொருந்துவன. சட்டமும் அரசியலும் சார்ந்த மேற்கட்டுமானத்தின் எழுச்சிக்கான அத்திவாரமும் சமூக உணர்வு நிலையின் குறிப்பான வடிவங்கட்குப் பொருந்துவதுமான பொருளியல் அத்திவாரமுமாக அமைவது இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டு மொத்தமே. பொருள் சார்ந்த வாழ்வின் உற்பத்தி முறைகளே வாழ்வின் சமூக, அரசியல், ஆய்வறிவு சார்ந்த இயக்கப்பாடுகளைப் பொதுப்படத் தீர்மானிக்கிறது. உணர்வங்லை அவர்களதடஇருப்பை நிர்ணயிப்பதில்லை
உற்பத்திச் சக்திகள், தமது விருத்தியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில், அதுவரை தாம் எந்த நடைமுறையிலுள்ள உற்பத்தி உறவுகளுக்கு உட்பட்டு இயங்கினவோ, அந்த உறவுகளுடன், சட்ட முறையிலான ஒரு பதத்தைப் பயன்படுத்துவதாயின், சொத்துடைமை உறவுகளுடன், மோதுகின்றன. உற்பத்திச் சக்திகளின் விருத்தியின் வடிவங்கள் என்ற நிலையிலிருந்து இந்த உறவுகள் அவற்றின் தளைகளாக மாறுகின்றன. இதன் பின் சமூகப் புரட்சிக்கான ஒரு யுகம் தொடங்குகிறது. பொருளாதார அத்திவாரத்தின் மாற்றத்துடன் ஏறத்தாழ பிரமாண்டமான மேற்கட்டுமானம் முழுவதுமே துரிதமான மாற்றத்துக்குள்ளாகிறது. இத்ததைய மாற்றமொன்றைக் கணிப்பிற்கொள்ளும்போது, இயற்கை விஞ்ஞானத்தின் துல்லியத்துடன் நிர்ணயிக்கக் கூடியதான உற்பத்தியின் பொருளியில் நிலைமைகளில் ஏற்படும் பொருள் சார்ந்த மாற்றத்திற்கும் சட்டம், அரசியல், மதம், அழகியல், மெய்யியல் - சுருங்கக் கூறின் இம் மோதல் பற்றி மனிதரை உணர்வுடையோருக்கும் கோட்பாடுகள் சார்ந்த மாற்றத்திற்கும் இடையே எப்போதும் தெளிவாக வேறுபடுத்த வேண்டும். எவ்வாறு எவர்பற்றியுமான நமது கருத்து அவர் தன்னைப் பற்றிக் கொண்டிருக்கிற எண்ணத்தின் அடிப்படை யிலமைவதில்லையோ, அவ்வாறே, மாற்றம் நிகழும் ஒரு காலத்தை அக்காலத்தில் அதற்குரியதாயிருக்கும் உணர்வுநிலையை வைத்து மதிப்பிட முடியாது. மாறாக, இந்த உணர்வுநிலை, பொருள்சார்ந்த வாழ்க்கையின் முரண்பாடுளினின்றும், இயங்கிக்கொண்டிருந்த சமூக உற்பத்திச் சக்திகட்கும் உற்பத்தி உறவுகட்குமிடையிலான முரண்பாடுகளினின்றுமே விளக்கப்பட முடியும். எந்தச் சமுதாய ஒழுங்கும், அதற்குள் விருத்திபெற இடமுள்ள சகல உற்பத்திச் சக்திகளும் விருத்திபெறும்வரை இல்லா தொழிவதில்லை; புதிய உற்பத்தி உறவுகளின் இருப்புக்கு அவசியமா?
எனவே மனித இனம் தன்னாற் செய்யக் கூடிய பணிகளையே தனக்கு விதிக்கிறது. ஏனெனில், இவ்விடயத்தைக் கூர்ந்து நோக்குவோமாயின், எப்போதும் ஒரு பணியை நிறைவேற்றுதற்கு அவசியமான நிலைமைகள் ஏற்கெனவே உள்ளபோது அல்லது உருவாகிவருகின்றபோதே அப்பணியும் தோற்றம் பெறுகிறது என நாம் காணலாம்.
எனவே வரலாற்றுப் பொருள் முதல்வாதம் நமக்குக் கற்பிப்பது ஏதெனின், பிற நிகழ்வுகளோ நிறுவனங்களோ பொருளின் பிற வடிவங்களோ போன்று, சமுதாயமும் என்றுமே நிலையாய் நிற்பதில்லை. பிற அனைத்தும் போன்று அதுவும் மாற்றத்திற்கும் விருத்திக்கும் உட்படுகிறது. எனவே சுரண்டலையும் செல்வர்களும் ஏழைகளும் இருப்பதையும் கொண்ட சமுதாயங்கள் நிலைபேறுடையனவோ, என்றும் நிலைப்பனவோ மாறாதனவோ அல்ல. அவை எல்லாக் காலத்திலும் இருந்தனவுமல்ல.
“சமூக உறவுகளில் ஏற்படும் இம்மாற்றங்கள் பொருள் சார்ந்த மதிப்புக்களின் உற்பத்தி முறையில் ஏற்படும் மாற்றங்களாலேயே, அதினும் முதலாகவும் முக்கியமாகவும் உற்பத்தி உபகரணங்களில் ஏற்பட்ட மாற்றங்களாலும் விருத்திகளாலுமே நிகழுகின்றன என வரலாற்றுப் பொருள் முதல்வாதம் நமக்குக் கற்பிக்கிறது. பொருளியல் அத்திவாரம் மாறியதும், இம்மாற்றங்களைப் பொறுத்தும் அவற்றுக்கு அமையவும், அரசியல், சமூக, சட்ட, சமய, அழகியல், மெய்யியல், வடிவங்களை, வேறு வகையிற் கூறின் கோட்பாட்டு வடிவங்களைக் கொண்ட பிரமாண்டமான மேற்கட்டுமானம் துரிதமாக மாற்றமடைகிறது என வரலாற்றுப் பொருள் முதல்வாதம் மேலும் கற்பிக்கின்றது.
இச்சமூக மாற்றங்கள் சமுதாயத்தின் உள்இயல்பான முரண்பாடுகளின் அடிப்படையிலேயே நிகழ்கின்றன எனவும் வரலாற்றுப் பொருள் முதல்வாதம் கற்பிக்கிறது. தமது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையின் தொடக்கக் கூற்றில் மார்க்ஸ"ம் ஏங்கல்ஸ"ம் இதை அற்புதமான முறையில் உரைத்துள்ளனர்: “இற்றைவரை வரலாற்றில் இருந்து வந்த சமுதாயம் அனைத்தினதும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே. சுதந்திர மனிதன் - அடிமை, உயர்குடியினன் - சாதாரண மனிதன், பிரபு - பண்ணையாள, தொழில் எசமான் - கூலியாள் ஒரே வார்த்தையில் ஒடுக்குவோன் - ஒடுக்கப்படுவோன், ஒருவருக்கு மாறாக மற்றவர் எப்போதுமே நின்று, சில சமயம் மறைவாக, சில சமயம் வெளிவெளியான சண்டையாக, ஒவ்வொரு முறையும் முழுச் சமுதாயத் தினதும் புரட்சிகர புனர்நிர்மாணத்துக்கோ மோதும் வர்க்கங்களின் பொதுவான சிதைவுக்கோ இட்டுச்சென்ற ஒரு சண்டையை நடத்தி வந்துள்ளனர்.”
எனவே, சமுதாயத்தின் விருத்தியின் வரலாற்றின் தோற்றுவாய்கள் பொருள் சார்ந்த மதிப்புக்களின் உற்பத்தியாளர்களது வரலாற்றில், உற்பத்திச் செயல்முறையின் பிரதான சக்திகளான உழைக்கும் வெகுசனங்களின் வரலாற்றிலேயே காணப்படவேண்டும்.