சகிப்பின்மை மீதான சகிப்பினை ஏற்றுக் கொள்ளலாமா?

 சகிப்பின்மை மீதான சகிப்பினை ஏற்றுக் கொள்ளலாமா? '******************************************************************

இந்தியாவில் கலாச்சாரப் பிரச்சனைகள் மீது எழுகின்ற விவாதங்களின் மையப் புள்ளியாக சகிப்புத்தன்மை (மற்றும் சகிப்பின்மை) உள்ளது. சகிப்புத்தன்மை என்றால் என்ன? இந்தியாவில் அதைப் பற்றி யோசிக்கவும், நடைமுறையில் கடைப்பிடிக்கவுமான வழிமுறைகள் என்ன? கருத்தளவில் மூன்று நிலையிலான சகிப்புத்தன்மை நம்மிடமிருப்பதை நாம் அறியலாம்.

முதலாவது வகை சகிப்புத்தன்மை என்பது பெரும்பாலும் நமது அறியாமையிலிருந்து பிறப்பதாகவே உள்ளது. பிறரது கலாச்சார நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் பற்றி நம்மில் பலருக்கும் முழுவதுமாக அறிந்திருக்க அதிகம் வாய்ப்பில்லை. நாம் அறிந்திருப்பவையும் கூட தவறானவையாக இருக்கலாம். பிறரது தனிப்பட்ட பழக்கங்கள் நம்மைப் பாதிக்காத வரை, நாம் இவ்வாறு அறியாமையுள்ளவர்களாக இருந்து சகிப்புத்தன்மையுள்ளவர்களாகத் தொடர்வதைப் பற்றி பெருமை கொள்கிறோம். இவ்வாறான வாழ்வியல் முறையே பெரும்பாலும் இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுவதாக உள்ளது. ஆக நமது சகிப்புத்தன்மை என்பது பிறர் குறித்த நமது அறியாமையாகவே உள்ளது. உண்மையில் இத்தகைய அறியாமை என்பது ஒருபோதும் சகிப்புத்தன்மையாகாது. இன்றைய காலகட்டத்தில் கல்வி மற்றும் தகவல் தொடர்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் மூலம் அரசாங்கங்கள், ஊடகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் வன்முறைக் கும்பல்கள் எழுப்பும் உரத்த குரல்கள் மிகவும் ஒதுக்குப்புறத்தில் வாழக் கூடிய மக்களின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தி, அவர்கள் இத்தகைய அறியாமையற்றவர்களாக தொடர முடியாத சங்கடத்தினை ஏற்படுத்தியுள்ளன.

இரண்டாவது வகை சகிப்புத்தன்மை, “ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் இருக்கும். அது அவர்களது உரிமை. அவற்றில் நாம் தலையிடலாகாது” என்ற கருத்துச் சோம்பேறித்தனத்தின் விளைவாக ஏற்பட்டிருக்கும் சகிப்புத்தன்மையாகும். இந்த வகை சகிப்புத்தன்மையானது, வரலாற்றின் அடிப்படையில் நம்மிடம் வந்து சேர்ந்து நமது மனதில் ஆழமாகப் பதிக்கப்பட்டு பின்னர் சமூக நியாயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக உள்ளது. ”எனது மன அமைதியை சீர்குலைக்காத கருத்துக்களையும், பழக்கங்களையும் மற்றவர்கள் கொண்டிருக்கும் போது எனக்கென்ன வந்தது” என்ற வகையிலான இந்த சகிப்புத்தன்மை, ஒரு வலுவான கருத்தினைக் கொண்டிராமல் ’ வாழு.. வாழ விடு..’ என்ற எளிய கருத்தினடிப்படையில் அமைந்ததாகும்.

இத்தகைய எளிய நிலைப்பாடானது நிலைத்து நிற்க முடியாது என்பதோடு மற்றவர்களிடம் சகோதர மன நிலையில் தொடர்ந்து இருப்பதும் கடினமானது. சில நேரங்களில் நமது ஆழ்ந்த நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் மீது மற்றவர்களது கருத்துக்கள் மற்றும் நடைமுறைகள் தலையிடுவதாக இருக்கலாம்.

அமைதியான முறையில் தங்களது கருத்துக்களைச் சொல்ல இயலாமல் மற்றவர்களது கருத்துக்களிலிருந்து வன்மையாக முரண்படுபவர்கள் தேவையற்ற தர்க்கமற்ற விவாதங்களை முன்னெடுத்து நம்மை வேறு ஒரு நிலைக்குத் தள்ளுகின்றனர். மற்றவர்களது கருத்துக்கள் மற்றும் நடைமுறைகள் மீது இத்தகைய வன்மையான கருத்துக்களைக் கொண்டுள்ளவர்கள் சகிப்புத்தன்மையற்ற தன்மையுடன் செயல்படுபவர்களாகவே மாறுவர்.

இவர்களது சகிப்புத்தன்மையற்ற செயல்களின் மீது நாம் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டுமா? என்ற பிரச்சினையை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியாவில் உள்ள பெரும்பான்மையானவர்கள் சகிப்பின்மையைத் தாங்கும் சகிப்புத்தன்மையுடனே இருக்கின்றோம். நம்மிடையே உள்ள சகிப்புத்தன்மையற்றவர்களைக் கண்டு அஞ்சுகிறோம். இல்லையென்றால் சகிப்புத்தன்மையற்றவர்களைப் பாதுகாப்பதற்காக நமது சட்ட மற்றும் அரசியல் அமைப்புக்கள் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்கிறோம். அல்லது ஒரு திடமான முடிவெடுக்க வேண்டிய நிலையைத் தவிர்த்து, சூழலை நீர்த்துப் போகச் செய்யும் வழியினைக் கண்டுபிடிக்கிறோம். கடந்த காலத்தில் சகிப்புத்தன்மையற்று இருந்தவர்களைக் காரணம் காட்டி இப்போது மட்டும் ஏன் நாம் சகிப்பின்மைக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்று நமக்கு நாமே கேள்விகளை எழுப்பிக் கொள்கிறோம். ”சகிப்பின்மை என்பது பொதுவானதல்ல. அது ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கிறது. தானாகவே அது தன்னளவில் குறைந்து போய் விடும். நாம் அதனை எதிப்பதால் அது வளர்ந்து கொண்டேதான் இருக்கும்” என்ற சமாதானத்தைக் கூறி சகிப்பின்மைக்கெதிராக எந்தவொரு முயற்சியுமின்றி முடங்கிப் போகிறோம்.

அறியாமையில் சிக்கிக் கொள்ளாமலோ அல்லது அமைதியாக எதையும் ஒத்துக் கொண்டிருக்க இயலாமலோ நாம் இருக்கும் நிலையில், மற்றவர்களது கருத்துக்கள் மற்றும் நடைமுறைகளை நேரடியாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறோம். உண்மையான சகிப்புத்தன்மை என்பது பிறரோடு நம்மை ஈடுபடுத்திக் கொள்வதிலும், அவர்களது வாழ்வியல் முறையுடன் சிறு சமரசங்களைச் செய்து கொண்டு ஒத்துச் செல்வதில் மட்டுமே உள்ளது. ஒரு விஷயத்தை எந்த அளவிற்கு நம்மால் சகிக்க முடியும், எந்த அளவிற்கு மேல் சகிக்க முடியாது என்ற வரையறையை ஏற்படுத்தும் வண்ணம் விவாதங்களை எழுப்புவதில் ஏற்படும் சகிப்புத்தன்மையானது மூன்றாவது வகை சகிப்புத்தன்மையாகும். சகிப்புத்தன்மையற்றவர்களிடமோ அல்லது பிறருடன் எந்தவித விவாதங்களையும் விரும்பாதவர்களிடமோ இவ்வாறான விவாதங்கள் செய்யப்பட வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பினால்,. அவ்வாறான சூழலில் அவர்களீடம் விவாதம் செய்வதற்கான இடமே இருக்காது என்பதே உண்மை. வெறுப்பு பேச்சுகள் மற்றும் வன்முறைச் செயல்கள் போன்ற சட்ட விரோத வழிகளில் தன்னை வெளிப்படுத்தும் சகிப்பின்மையானது கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். சட்டவிரோதமாகச் செயல்படாமல் ஆனால் மற்றவர்களைச் சகித்துக் கொள்ளும் தன்மையற்றவர்களை ஒரு உரையாடலுக்குள் எப்படி கொண்டு வருவது என்ற கேள்விக்கு எளிதான விடையினைக் காண்பது கடினமாக உள்ள நிலையில்,. தங்களது விருதினைத் திருப்பித் தந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்கள் இத்தகைய உரையாடலுக்கான ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளார்கள். அவர்களுடன் உடன்படாத சகிப்புத்தன்மையற்ற கருத்துக்களைக் கொண்டுள்ள பலரும் இப்போது அவர்களைக் கவனிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த பிரச்சனை குறித்து பேசுவதற்கும், செயல்படுவதற்கும் முன்முயற்சி எடுத்தவர்களாக இவர்கள் உள்ளனர். ஒரு சதியின் பகுதியாக இவர்களைக் கருதாமல், அவர்களது கருத்தைப் பிரதிபலிக்கும் முயற்சியை நாம் மேற்கொள்ளலாம்.

காந்தி பாஜ்பாய்
தமிழில் -தா.சந்திரகுரு

நன்றி டைம்ஸ் ஆப் இந்தியா (நவ.7)

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...